Published:Updated:

கட்கரி ட்வீட்... எ.வ.வேலுவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

எ.வ.வேலு
பிரீமியம் ஸ்டோரி
எ.வ.வேலு

தமிழகத்தில் 53 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 10 பணிகள் அனுமதிக்கப்பட்ட கால வரையறையையும் தாண்டி நீண்டிருக்கின்றன.

கட்கரி ட்வீட்... எ.வ.வேலுவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

தமிழகத்தில் 53 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 10 பணிகள் அனுமதிக்கப்பட்ட கால வரையறையையும் தாண்டி நீண்டிருக்கின்றன.

Published:Updated:
எ.வ.வேலு
பிரீமியம் ஸ்டோரி
எ.வ.வேலு

சமீபத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பக்கம் அனைவரின் கவனத்தையும் திரும்பவைத்திருக்கிறது. ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுடன் ஒரு கூட்டம் நடந்தது. அவர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து என்னிடம் விவாதித்தனர்’ என்று குறிப்பிட்டிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலம் மறைமுகமாக எ.வ.வேலுவுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு எ.வ.வேலு தரப்பினர் கடும் நெருக்கடி கொடுப்பதாகச் சொல்லப்படும் புகாரைத்தான் இந்த விவகாரத்துக்குப் பின்னணியாகச் சொல்கிறார்கள்!

கட்கரி ட்வீட்... எ.வ.வேலுவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு, மண் தட்டுப்பாடு என்றெல்லாம் இந்தக் கூட்டம் பற்றி வெளியே பேசப்பட்டாலும், உள்ளே நடந்த விஷயமே வேறு என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு என்பதெல்லாம் எப்போதும் எதிர்கொள்கிற பிரச்னைதான். இது போன்ற சிறிய விஷயத்துக்கெல்லாம் மத்திய அமைச்சரைச் சந்திக்க மாட்டோம். தமிழகத்தில் வழக்கமாக எடுத்துச் செய்யும் ஒப்பந்தப் பணிகளுக்குத்தான் கமிஷன் கேட்பார்கள். அதைக் கொடுத்துத்தான் ஒப்பந்தப் பணிகளைச் செய்துவருகிறோம். ஆனால், இந்த முறை கூடுதலாக கமிஷன் கேட்பது மட்டுமல்லாமல், ஏற்கெனவே எடுத்த ஒப்பந்தங்களுக்கும் சேர்த்து கமிஷன் கேட்கிறார்கள். இப்படிக் கேட்டால், எப்படி சாலைப் பணிகளை தரமுடன் மேற்கொள்ள முடியும்? இதைத்தான் செப்டம்பர் 8-ம் தேதி மத்திய அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் பேசினோம்” என்று குமுறலுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார்கள் சில ஒப்பந்ததாரர்கள்...

‘‘தமிழகத்தில் 53 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 10 பணிகள் அனுமதிக்கப்பட்ட கால வரையறையையும் தாண்டி நீண்டிருக்கின்றன. இவற்றோடு 18 பாலங்களுக்கான பணிகளும் நடைபெறுகின்றன. காலதாமதம் ஏற்படும் பணிகளுக்கு அபராதத்தொகையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விதிக்கும். அதற்கு ஒப்பந்ததாரர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்திலுள்ள 6,606 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 1,472 கி.மீ நீளம் மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் கட்டுப்பாட்டில் வருகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தச் சாலைகளில் பராமரிப்பு, கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வது தமிழக அரசுதான். இவைபோக, 37,359 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,149 கி.மீ நீளத்துக்கு 23 பணிகள் தொடங்கவிருக்கின்றன. இவற்றுக்கான நில எடுப்பு பணிகள் துரிதமாகியிருக்கின்றன.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நெடுஞ்சாலைப் பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டது. மத்திய அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், அமைக்கப்படும் சாலைகள் மாநில அரசின் எல்லைக்குள் வருவதால், தமிழக நெடுஞ்சாலைத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சாலைகள் அமைக்க முடியாது. இதற்காக, குறிப்பிட்ட அளவு கமிஷனை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு பொறுப்பு வகிப்பவர்கள் பெறுவது வழக்கம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மூன்று சதவிகிதமாக இருந்த இந்த கமிஷன், இப்போது ஒன்பது சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுபோக மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதர சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கான கமிஷன் தனி.

ஏற்கெனவே மணல் தட்டுப்பாடு, மூலப்பொருள்கள் விலை உயர்வால் ஒப்பந்ததாரர்கள் திண்டாடும் நிலையில், இவர்களுக்குக் கொடுக்கவேண்டிய கமிஷனையும் உயர்த்திவிட்டதால், எங்களால் தொழிலையே செய்ய முடியவில்லை. இதைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செப்டம்பர் 8-ம் தேதி நேரில் புகாராக அளித்தோம். ‘சாலைப் பணிகள் தாமதமானால் மத்திய அரசின் சார்பிலிருந்து அபராதம் விதிக்கிறீர்கள்... மறுபுறம், இங்கும் மூன்று மடங்கு அதிகமாக கமிஷன் எதிர்பார்ப்பதால் எங்களால் பணி செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்னை எங்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது’ என்று குமுறினோம்.

அதற்கு கட்கரி, ‘தமிழகத்தில் மட்டுமல்ல... மகாராஷ்டிராவிலும் இதேபோல பிரச்னை இருக்கிறது. புனே பகுதியில் கமிஷன் அளித்தால்தான் சாலைப் பணிகளை மேற்கொள்ள முடியுமென ஆளுங்கட்சியான சிவசேனாவின் நிர்வாகிகள் சிலர் ஒப்பந்ததாரர்களை மிரட்டுகிறார்கள். இது குறித்து அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசியிருக்கிறேன். உங்கள் பிரச்னையையும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பேசுகிறேன். அதுவரை, அவசரகதியில் தேசிய நெஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம். பிரச்னையைச் சரிசெய்துவிட்டுத் தொடரலாம்’ என்றார். இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் வரை, தாமதமாகும் சாலைப் பணிகளுக்கு இந்திய தேசிய நெஞ்சாலைகள் ஆணையம் அபராதம் விதிக்க வேண்டாமென்றும் அதிகாரிகளுக்கு கட்கரி அறிவுறுத்தியிருக்கிறார்.

கட்கரி ட்வீட்... எ.வ.வேலுவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில்கூட இப்படியோர் அழுத்தத்தை நாங்கள் யாரும் சந்தித்ததில்லை. இந்த ஆட்சியில் சாலை ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அழைத்து, ஜெயமான ஓர் உதவியாளர் ஏற்பாட்டில் ரகசியக் கூட்டம் போட்டார்கள். கூட்டத்தில், ‘தேர்தலுக்கு நிறைய செலவு செய்தாகிவிட்டது. நீங்கள் ஒத்துழைப்பு அளித்தால், அடுத்த ஐந்தாண்டுகள் உங்களுக்குச் சாதகமான சூழல் நிலவும்’ என்று மறைமுகமாக மிரட்டல்விடுத்து எங்களிடம் கமிஷனைக் கறந்துவிட்டார்கள். இதே நிலை நீடித்தால், தி.மு.க அரசு மீதிருக்கும் நன்மதிப்பு காலாவதியாகிவிடும்’’ என்றார்கள் அந்த ஒப்பந்ததாரர்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய அமைச்சர் எ.வ.வேலுவைத் தொடர்புகொண்டோம். அவரின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்தது. தொடர்ந்து அவருக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். அவரிடம் விளக்கம் பெற தொடர்ந்து முயன்றுவருகிறோம். நம்மிடம் பேசிய மாநில தேசிய நெஞ்சாலைகள்துறையின் அதிகாரிகள், ‘‘மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சாலை ஒப்பந்ததாரர்கள் சந்திப்பது அவ்வப்போது நிகழும் நடைமுறைதான். நில எடுப்பு, மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, அபராதத்தொகைச் சிக்கல் குறித்துத்தான் இந்தக் கூட்டத்தில் வழக்கமாக விவாதிக்கப்படும். மற்றபடி, யாரிடமும் மாநில நெடுஞ்சாலைகள் துறை தரப்பிலிருந்து கமிஷன் பெறும் நோக்கத்தில் பேசவில்லை” என்றனர்.

ஆட்சி அமைந்ததிலிருந்து சர்ச்சைகளில் சிக்காமல் சென்ற தி.மு.க அரசுமீது, முதன்முறையாக டெல்லி வரை புகார் செல்வதற்கு அமைச்சர் எ.வ.வேலு காரணமாகியிருக்கிறார். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களின் பிரச்னைகளைத் தமிழக அரசு களையவில்லையென்றால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலமாக மறைமுகக் குடைச்சல் கொடுப்பதற்கும் டெல்லி தயாராகிவருகிறதாம். முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

******

“தரமான சாலைகள் சாத்தியமில்லை!”

சென்னை - புதுச்சேரி சாலையில் விரிவாக்கப் பணிக்கு, தமிழகத்திலேயே யாரும் அளித்திராத வகையில், பல மடங்கு அதிகமாக கமிஷனை கொடுத்திருக்கிறதாம் ஒரு நிறுவனம். மணல் வியாபாரத்தில் கோலோச்சிய ஒருவர்தான், இந்த நிறுவனம் மூலமாக சாலைப் பணிக்கான ஒப்பந்தத்தையும் எடுத்திருக்கிறாராம். இதுபோக, தென்மாவட்டம் ஒன்றில் நடைபெற்ற சாலைப் பணிக்கு, வழக்கமான கமிஷன் தொகையோடு, கூடுதலாக மூன்று சதவிகிதம் கேட்டு வாங்கியிருக்கிறார்களாம்.

“கமிஷன் தொகைக்கே இவ்வளவு அழ வேண்டுமென்றால், சாலை எந்தத் தரத்தில் வரும்? இந்த நிலைமை நீடித்தால், அடுத்த மூன்று வருடங்களில் யாரும் தொழில் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, சாலைகளும் குட்டிச் சுவராகிவிடும்” என்று கொதிக்கிறார்கள் சில ஒப்பந்ததாரர்கள். அமைச்சர் தரப்பினர்மீது இப்படியான புகார் எழுவது முதன்முறையல்ல. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பில் க்ளியர் செய்யப்படாமல் இருந்த ஒப்பந்தங்களுக்கு ஆதாயம் எதிர்பார்த்ததாக ஏற்கெனவே புகார் இருந்த நிலையில் இப்படியொரு ‘கமிஷன்’ பூகம்பம் வெடித்திருக்கிறது!