Published:Updated:

``எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாஜக-வின் தொகுதிகள் 50-க்குள் வந்துவிடும்!"- நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக-வின் பலம் 50 தொகுதிகளுக்குள் வந்துவிடும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

``எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாஜக-வின் தொகுதிகள் 50-க்குள் வந்துவிடும்!"- நிதிஷ் குமார்

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக-வின் பலம் 50 தொகுதிகளுக்குள் வந்துவிடும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நிதிஷ் குமார்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த மாதம் திடீரென பாஜக கூட்டணியிலிருந்து விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து அங்கு பாஜக ஆட்சி அமைத்தது போன்று பீகாரிலும் பாஜக செயல்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தில் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள பாஜக அல்லது ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரண்டில் ஒன்றை எப்போதும் பற்றிக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிதிஷ் குமார் புதிய அவதாரம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார். பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கப்போவதாக கிளம்பி இருக்கிறார். திங்கள்கிழமை இதற்காக டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் மூன்று நாள்கள் தங்கி இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டிருக்கிறார்.

மோடியுடன் நிதிஷ் குமாரை ஒப்பிட்டு பேனர்
மோடியுடன் நிதிஷ் குமாரை ஒப்பிட்டு பேனர்

முன்னதாக இது குறித்து விவாதிக்க நிதிஷ் குமார் தனது கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தை கூட்டியிருந்தார். இக்கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த நிதிஷ் குமார், ``பாஜக-வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச டெல்லி செல்கிறேன். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட்டால், பாஜக-வின் தொகுதிகள் 50-க்குள் வந்துவிடும். நான் அதற்காக பாடுபடப்போகிறேன்" என்று தெரிவித்தார். இதன் மூலம் நிதிஷ் குமார் தேசிய அரசியலில் கவனம் செலுத்தப்போவது தெளிவாக தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிர்க்கட்சிகள் சார்பாக நிதிஷ் குமார் பிரதம வேட்பாளருக்கு நிறுத்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்க்கட்சிகளில் மூத்த தலைவராக இருக்கும் சரத் பவார் தனக்கு வயதாகிவிட்டதால் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறிவிட்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக நிறுத்த சிவசேனா போன்ற சில எதிர்க்கட்சிகளே விரும்பவில்லை. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் தேசிய அரசியலில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் ராவ் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அவர் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இப்போது நிதிஷ் குமார் அதே வேலையை செய்யப்போவதாக களம் இறங்கருக்கிறார். 2024-ம் ஆண்டு தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் என்று பீகாரின் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

போஸ்டர்களால் பிரதமராக முடியாது!

நிதிஷ் குமாரின் பிரதமர் கனவு குறித்து பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அளித்த பேட்டியில், ``பீகாரிலும் ஐக்கிய ஜனதா தளம் கவிழ்ந்துவிடும். போஸ்டர்களும், பேனர்களும் யாரையும் பிரதமராக்கிவிடாது. 5 முதல் 10 எம்.பி-க்களை கொண்ட ஒரு கட்சியால் அதன் தலைவர் எப்படி பிரதமராக முடியும். நிதிஷ் குமார் செய்தியை மட்டுமே விரும்புகிறார். அவரால் பிரதம வேட்பாளராககூட மாற முடியாது என்று நிதிஷ் குமாருக்கே தெரியும்" என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள ராஜீவ் ரஞ்சன் சிங், ``ஐக்கிய ஜனதா தளம் உடைந்துவிடும் என்று சுஷில் மோடி பகல் கனவு காணவேண்டாம். அருணாச்சல பிரதேசத்தில் பாஜக கூட்டணி தர்மத்தை பின்பற்றாமல் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டுள்ளது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், டெல்லியில் பா.ஜ.க செய்யும் செயல்களால் 2024-ம் ஆண்டு தேர்தலை கண்டு பாஜக அச்சம் அடைந்திருப்பதையே காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.