Published:Updated:

பீகார்: பாஜக-வுடன் மோதல்: எம்பி, எம்எல்ஏ-க்களின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிதிஷ் குமார்!

நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

பீகாரில் பா.ஜ.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் முதல்வர் நிதிஷ் குமார், அவசரமாகத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பீகார்: பாஜக-வுடன் மோதல்: எம்பி, எம்எல்ஏ-க்களின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிதிஷ் குமார்!

பீகாரில் பா.ஜ.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் முதல்வர் நிதிஷ் குமார், அவசரமாகத் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Published:Updated:
நிதிஷ் குமார், மோடி, அமித் ஷா

பீகாரில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு அதிகரித்துவருகிறது. டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார். அதோடு மத்திய அமைச்சர் அமித் ஷா பீகாருக்கு வந்தபோது உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை வரவேற்கச் செல்லவில்லை. மேலும், டெல்லியில் பதவி விலகிய ஜனாதிபதிக்கு பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ளும்படி விடுத்த அழைப்பு, புதிய ஜனாதிபதி பதவியேற்புவிழா ஆகியவற்றையும் நிதிஷ் குமார் புறக்கணித்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு மோதலாக மாறியிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே பல பிரச்னைகளில் தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே, பீகாரில் எந்த நேரமும் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

இந்த நிலையில், நாளை நிதிஷ் குமார் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியிருக்கிறார். அதிகமான எம்.எல்.ஏ-க்கள் இடைத்தேர்தலைச் சந்திக்கலாம் என்று நிதிஷ் குமாரிடம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து ஐக்கிய ஜனதா தளம் ஆலோசித்துவருகிறது.

முக்கிய முடிவு:-

இது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்து முடிவுசெய்ய நாளை அவசரக் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் அழைப்பு விடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பாட்னாவில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயல்வதாக அந்தக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பேட்டியில், ``லோக் ஜனசக்தி கட்சியை இரண்டாக உடைத்ததுபோல் ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கப்பார்க்கின்றனர். 2000-ம் ஆண்டு தேர்தலின்போதே அதற்கான முயற்சி நடந்தது. ஆனால் நிதிஷ் குமார் அந்தச் சதியைக் கண்டுபிடித்துவிட்டார்.

பாஜக
பாஜக

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் உடல்தான் ஐக்கிய ஜனதா தளத்தில் இருக்கிறது. ஆனால் அவர் மனம் வேறு எங்கோ இருக்கிறது" என்று தெரிவித்தார். இது குறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மற்றொரு தலைவர், ``பா.ஜ.க-வுடனான கூட்டணி என்பது முடிந்துபோன ஒன்று" என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு புறம் நிதிஷ் குமாருக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் தேஜஸ்வியும், நிதிஷ் குமாரும் தொடர்பில் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதோடு நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் நேற்று போன் செய்து பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க-வுடன் தொடர்ந்து கூட்டணியில் இருந்தால் எதிர்காலத்தில் தனது கட்சி காணாமல்போய்விடும் என்ற அச்சம் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை அழிக்க ஏக்நாத் ஷிண்டேவைப் பயன்படுத்தியது போன்று, தனது கட்சியிலும் யாராவது பா.ஜ.க-வுக்கு ஆதரவாக மாறினால் சிக்கலாகிவிடும் என்று நிதிஷ் குமார் கருதுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ்
பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ்

எனவேதான் முன்கூட்டியே அதிலிருந்து தப்பிக்க நிதிஷ் குமார் திட்டம் தீட்டிவருவதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய ஐனதா தளத்தின் ஆர்.சி.பி.சிங்கை பா.ஜ.க மத்திய அமைச்சரவையில் சேர்த்தது நிதிஷ் குமாருக்குப் பிடிக்கவில்லை. ஐக்கிய ஐனதா தளத்தின் அனுமதியைப் பெறாமலேயே அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பா.ஜ.க அமைச்சர் பதவி கொடுத்தது நிதிஷ் குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ஆர்.சி.பி.சிங் பதவிக்காலம் முடிந்தபோது அவரை ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாட்டுக்கு இதுவும் முக்கியக் காரணமாகும்.