Published:Updated:

பீகார் தேர்தல்: `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் சிறையிலடைக்கப்படுவார்!’ - சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

நிதிஷ் குமாரைக் கடுமையாக விமர்சிக்கும் சிராக் பஸ்வான், மோடியின் தீவிர ஆதரவாளர். `மோடியின் ஹனுமான் நான்’ என்று கூறிக்கொள்கிறார் சிராக் பஸ்வான்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் நடக்கும் முதல் தேர்தல் பீகார் சட்டப்பேரவை தேர்தல்தான். பீகார் தேர்தலையொட்டி, ஐக்கிய ஜனதாதளத்துடன் ஏற்பட்ட மோதலால், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, அந்தக் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயத்தில், பா.ஜ.க ஆதரவு நிலைபாடுகொண்ட அந்தக் கட்சி மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறது.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துவருகிறார். மேலும், ஐக்கிய ஜனதாதள கட்சிப் போட்டியிலும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் சிராக். அதேநேரம் மற்ற தொகுதிகளில், பாஜ.க-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகிறார்.

பீகார்: பிரசாரக் கூட்டத்திலேயே  சுட்டுக் கொல்லப்பட்ட வேட்பாளர்! - பதறவைக்கும் தேர்தல் களம்

இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட சிராக் பஸ்வான், மீண்டும் நிதீஷ் குமாரைக் கடுமையாக விமர்சித்தார். ``பீகாரில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடைத் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. நிதிஷ் குமாருக்கு இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது. நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புகிறோம். பீகார் முதன்மை மாநிலமாக வர வேண்டும் என்றால், லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். லோக் ஜனசக்தி வேட்பாளர் நிற்காத இடத்தில் பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள். வரும் அரசு நிதிஷ் இல்லாத அரசாக அமைய வேண்டும்” என்றார்.

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

மேலும், ``பீகார் தேர்தலில் தங்களின் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல் மந்திரி நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார்” என்றும் தெரிவித்தார் அதிரடியாக.

நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சிக்கும் சிராக் பஸ்வான், மோடியின் தீவிர ஆதரவாளர். `மோடியின் ஹனுமான்’ நான் என்று கூறிக்கொள்கிறார் சிராக் பஸ்வான்.

அடுத்த கட்டுரைக்கு