Published:Updated:

``என்.எல்.சி இனி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

``40 ஆண்டுகளுக்கு முன்பு எட்டடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், தற்போது 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதற்குக் காரணம் என்.எல்.சி-தான்.” – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

``என்.எல்.சி இனி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

``40 ஆண்டுகளுக்கு முன்பு எட்டடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், தற்போது 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதற்குக் காரணம் என்.எல்.சி-தான்.” – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

``கடலூர் மாவட்டத்தையும், அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்துவரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்” என்று வலியுறுத்தி நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க-வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று காலை நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், "என்.எல்.சி நிறுவனம் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் வளர்ச்சி அந்தப் பகுதி மக்களுக்குப் பயன்பட வேண்டும். ஆனால், சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களின் வீடு மற்றும் நிலங்கள் கையகப்படுத்தி தொடங்கப்பட்டதுதான் என்.எல்.சி நிறுவனம்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ்

கடந்த 66 ஆண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்துக்கு வீட்டையும் நிலத்தையும் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பும், இழப்பீட்டுத் தொகையும் வழங்காமல் இன்றுவரை அந்த மக்களை அகதிகளாக வைத்திருக்கிறது இந்நிறுவனம். மேலும் இந்த மாவட்டத்தையே பாலைவனமாக மாற்றிவருகிறது. எனவே தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகச் செயல்படும் என்.எல்.சி நிர்வாகம் எங்களுக்குத் தேவையில்லை. வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையை வழங்காமல், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை வழங்கி குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கிவருகின்றனர். வீடு, நிலம் கொடுத்த பொதுமக்களும், விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சையெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில் என்.எல்.சி பொறியாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்ட 299 பேரில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை. எனவே, தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராகச் செயல்படும் என்.எல்.சி நிர்வாகம் எங்களுக்குத் தேவையில்லை. என்.எல்.சி நிர்வாகத்துக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை விரைவில் நடத்துவோம். ராணுவத்தைக் கூட்டிவந்தாலும் எதிர்த்து நின்று எங்களது பணியைச் செய்வோம்” என்றார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “கடந்த 66 ஆண்டுக்காலமாக கடலூர் மாவட்ட மக்களை ஏமாற்றி, பழுப்பு நிலக்கரியை எடுத்துவரும் என்.எல்.சி நிறுவனம், நிலத்தடி நீரை உறிஞ்சி மாவட்டத்தையே பாலவனமாக்கிவருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு எட்டடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர், தற்போது 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. அதற்குக் காரணம் என்.எல்.சி-தான். ராட்சதப் பம்புகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பிவருகிறது என்.எல்.சி நிர்வாகம்.

66 ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி தொடங்குவதற்காக நிலங்களைக் கொடுத்தவர்களுக்கு தற்போதுவரை வேலையும் இல்லை, வாழ்வாதாரமும் இல்லை. ஆனால், இன்னும் 27,000 ஏக்கர் நிலங்களை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துடன் பேசிவருகிறது என்.எல்.சி. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு அரசுக்கு 4% பங்குகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த மக்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது அரசு. 39,000 ஏக்கர் நிலங்களைக் கொடுத்தவர்களுக்கே என்.எல்.சி நிர்வாகம் இன்னும் வேலை வழங்கவில்லை. மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் என்.எல்.சி நிர்வாகம் இனி தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. என்.எல்.சி நிறுவனத்துக்கு விரைவில் பூட்டுப் போடுவோம். இது வெறும் அடையாளப் போராட்டம்தான். விரைவில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.