Published:Updated:

என்.எல்.சி பணியிட தேர்வு: 100% தமிழர்கள் புறக்கணிப்பு, வட இந்தியர்கள் தேர்வு - வலுக்கும் எதிர்ப்பு!

என்.எல்.சி

என்.எல்.சி-யின் வேலைவாய்ப்பில், தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு 299 பொறியாளர் பணியிடங்களுக்கும் வட மாநிலத்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

என்.எல்.சி பணியிட தேர்வு: 100% தமிழர்கள் புறக்கணிப்பு, வட இந்தியர்கள் தேர்வு - வலுக்கும் எதிர்ப்பு!

என்.எல்.சி-யின் வேலைவாய்ப்பில், தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு 299 பொறியாளர் பணியிடங்களுக்கும் வட மாநிலத்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
என்.எல்.சி

`நவரத்னா' அந்தஸ்து பெற்ற நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி-யின் வேலைவாய்ப்பில், தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு 299 பொறியாளர் பணியிடங்களுக்கும் வட மாநிலத்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

1956-ம் ஆண்டு காமராசர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின் தேவைக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) உருவாக்கப்பட்டது. இதன் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைவதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் நிலங்களை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதிகொடுத்தது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டுக்காலமாக அந்த உறுதிமொழிக்கு மாறாக, மாற்று மாநிலத்தவர்களை நிரந்தரமாகப் பணியமர்த்தியும், நிலம் கொடுத்தவர்கள், தமிழர்களை தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியமர்த்துவதும் தொடந்து நடைபெற்றுவருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற என்.எல்.சி பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் ஒரு தமிழர்களைக்கூட தேர்ந்தெடுக்காமல் மொத்தமுள்ள 299 பணியிடங்களுக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர்களையே என்.எல்.சி நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது. மேலும், இதற்கான அடுத்தகட்ட உடல் தகுதித்தேர்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

என்.எல்.சி பொதுத்துறை நிறுவனத்தின் இந்த முடிவு,`தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, நிலம் கொடுத்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இதை உடனடியாக மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்' எனக் கோரி ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சியினர்:

இது குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் என அச்சிடப்பட்ட அறிக்கையில் வி.கே.சசிகலா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் தங்களுடைய தனித்துவமான திறமைகளால் எண்ணற்ற துறைகளில் சாதனை படைத்து இன்றைக்கும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தை புறக்கணிப்பது என்பது இந்த மண்ணின் இளம் தலைமுறையினருக்கு இழைக்கப்படும் அநீதியாகத்தான் கருதப்படும். எனவே, தி.மு.க அரசு தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடும் வகையில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று மத்திய அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா
சசிகலா
தே.சிலம்பரசன்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என்.எல்.சி பொதுத்துறையாக நீடிக்க வேண்டும் என்று நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இந்நிறுவனத்தில் தமிழர்கள்... குறிப்பாக வீடு, நிலம் தந்தவர்கள், கடலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பணி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் இன்று என்.எல்.சி நிறுவனம், நூறு விழுக்காடு பணி இடங்களில் வட இந்திய இளைஞர்களைத் தேர்வுசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் என்.எல்.சி பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற தமிழ் இளைஞர்கள் ஒருவருக்குக்கூட தகுதி இல்லை என்று பா.ஜ.க அரசு முடிவுசெய்துவிட்டதா?

இது தமிழ்நாட்டுக்குச் செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் ஆகாதா... இத்தகைய போக்கு தொழில் அமைதியைக் குலைத்துவிடும்; என்.எல்.சி நிறுவனத்தில் படிப்படியாக வடமாநிலத்தவர் வேலைவாய்ப்பில் நிரம்பி வழியும் நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே தற்போதைய தேர்வை ரத்துசெய்ய வேண்டும். புதிதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாட்டில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 விழுக்காடு என்.எல்.சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொறியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு நெய்வேலி நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட 1,500 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேர் மட்டுமே பங்கேற்க அழைக்கப்பட்டனர். தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்காததை நாம் தமிழர் கட்சி அப்போதே கண்டித்து போராட்டங்களையும் முன்னெடுத்தது. தற்போது இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர்கூடத் தமிழரில்லை என்பது என்எல்சி-யின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் தொடர்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழ் மண்ணின் வளத்தை மூலதனமாகக்கொண்டு, தமிழர்களின் ரத்தத்தில் உருவான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழகப் பொறியாளர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததிலிருந்தே, இந்தத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிறது. முறைகேடாக நடைபெற்றிருக்கும் என்எல்சி பொறியாளர் தேர்வை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக ரத்துசெய்து உத்தரவிடுவதோடு, தேர்வு முறைகேடுகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சீமான்
சீமான்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டுக்குச் செய்யப்பட்டிருக்கும் பச்சைத் துரோகம். தமிழகத்தில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்துக்கு வட மாநில இளைஞர்களைக் கொண்டுவந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

பாமக தலைவர் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பொறியாளர் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. வட இந்தியர்களுக்கு ஆதரவாகப் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. என்.எல்.சி-யின் உயர்பதவிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பதுதான் இதற்குக் காரணம். என்.எல்.சி நியமனங்களில் மாநில ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே சமூகநீதியை நிலைநிறுத்த முடியும். பணியாளர்களில் 100%, அதிகாரிகளில் 50% பணிகள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவற்றிலும் நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை வழங்க என்.எல்.சி நிறுவனம் மறுத்தால், கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி என்.எல்.சி-க்கு பூட்டுப்போடும் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்" என எச்சரித்திருக்கிறார்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என்.எல்.சி நிறுவன வேலைவாய்ப்பில் தொடர்ச்சியாக திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டு என்.எல்.சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். என்.எல்.சி நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்புக்கு நடத்திய நேர்முகத் தேர்வையும், ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கவிருக்கும் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையையும் உடனடியாக ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ்நாட்டு இளைஞர்கள், ஒருமித்த கருத்துள்ள அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்" என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வேல்முருகன்
வேல்முருகன்

அ.தி.மு.க - தி.மு.க-வும் எதிர்ப்பு:

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் புவனகிரி அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழிதேவன், ``ஆண்டுதோறும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளிலும், இந்திய அளவில் நடைபெறுகின்ற பல போட்டித்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தேர்வாகிறார்கள். ஆனால் என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகள் குறித்து பலத்த சந்தேகம் எழுகிறது. குறிப்பாக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகள் பொறியாளர் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறாமல் இருக்கிறார்கள். இதேபோல் என்.எல்.சி-யில் பல ஆண்டுகளாக பாடுபட்டு நிறுவனத்தை `நவரத்னா' என்ற உயர்ந்த அந்தஸ்த்துக்கு கொண்டு சென்றிருக்கும் தொழிலாளர்களின் வாரிசுகள், பொறியாளர் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கக்கூடியவர்களை வேலைக்குத் தேர்வு செய்யாமல் வட இந்தியாவிலிருந்து எடுக்கவேண்டிய நோக்கமும் அவசியமும் ஏன்? கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். அதோடு சட்டப்பேரவையில் எனது கேள்விக்கு பதிலளித்தவாறு என்.எல்.சி பிரச்னைகளுக்கு தீர்வுகாண அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கொண்ட குழுவை தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்க எடுக்கவில்லையென்றால் தமிழர் விரோத என்.எல்.சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து தொடர் போராட்டங்களை அ.தி.மு.க நடத்தும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்
அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்

மேலும், ``ஆதீனத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அங்கு முதல் ஆளாகப் போய் நிற்கும் அண்ணாமலை என்.எல்.சி விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை... ஆதினத்துக்கு ஒரு நீதி... என்.எல்.சி-க்கு ஒரு நீதியா?’’ எனவும் பா.ஜ.கவுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயல். ஏற்கெனவே, கடந்த 05.05.2022 அன்று, என்.எல்.சி நிறுவனத்துக்கான பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் தேர்வில், என்.எல்.சி நிறுவன சுரங்கப்பணிகளுக்கு நிலத்தை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேட் நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது, அந்தத் தேர்வை எழுதாத தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயலாகும் என்பதையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள். அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அடியோடு பிடுங்கி எறியும் செயல்பாட்டில் என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கடும் கண்டனத்துக்குரியது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கிவரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பிட்ட மாநிலத்துக்குத் தன்னியல்பாகக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை, ஒன்றிய அரசின் நிறுவனம் திட்டமிட்டே தட்டிப் பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நடைபெறவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணி நியமனத்துக்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.