Published:Updated:

`ஸ்டெர்லைட் ஆலைக்குக் கூடுதல் அனுமதி அளிக்கக் கூடாது!' - ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

`தூத்துக்குடியில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது’ என கோஷம் எழுப்பியபடியே, ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொரோனா இரண்டாவது அலையாக கோரத் தாண்டவம் ஆடிவந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. பல தனியார் அமைப்புகள் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கிவந்தன. இந்தநிலையில், ’ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாகத் தர தயாராக இருக்கிறோம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியதுடன், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தது வேதாந்தா.

ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

இதையடுத்து, ஆக்ஸிஜன் தேவையை கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவையும் அமைத்தது. கடந்த மே 5-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் தொடங்க்கப்பட்டது. ஆலையிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இதுவரை சுமார் 650 டன் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், 350 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

வரும் ஜூலை 31-ம் தேதியுடன், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடையவிருக்கிறது. இந்தநிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மேலும் ஆறு மாதங்கள் அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது வேதாந்தா. இதையடுத்து, ``மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைக் காரணம் காட்டி கூடுதல் அவகாசம் கேட்டால் அனுமதி அளிக்கக் கூடாது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்தநிலையில், ‘ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்’ இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்தனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவுப் பகுதிகளில் ’வஜ்ரா’ வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலத்துக்கு வருபவர்கள், கடும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால், ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று  பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸார், தடுப்பு வேலிகளை அமைத்து கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களில் 20 பேரை மட்டும் ஆட்சியரைச் சந்திக்க அனுமதியளித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பினர், ``கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்துவருகிறது. தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையிலையே நிலவுகிறது. இந்தநிலையில், தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூடப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கப்பட்ட அனுமதி, வரும் ஜூலை 31-ம் தேதி தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குப் பிறகு எந்தவொரு காரணத்தைக் காட்டியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

போராட்டம்
போராட்டம்

அப்படி அனுமதி அளித்தால், மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும். தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் சமயத்தில் முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்ற வேண்டும். இது தொடர்பாக, சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடியில் 13 அப்பாவிகளின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு