டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். தேசியக் கட்சிகளுடன் கூட்டணிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஆம் ஆத்மி கட்சி 130 கோடி மக்களுடன் கூட்டணி அமைக்கவிருக்கிறது. நான் யாரையும் வெற்றிகொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை" என்றார்.

தொடர்ந்து, பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ``தற்போது ஒரு `பெரிய கட்சி' கலவரங்கள், பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்களை வரவேற்கிறது. இது மாதிரியான ரௌடித்தனத்தால் நாடு முன்னேற முடியாது. ரௌடித்தனம், கலவரம் வேண்டுமென்றால் அவர்களுடன் போகலாம்; பள்ளிகள், மருத்துவமனைகளில் முன்னேற்றம் வேண்டுமானால் என்னுடன் வரலாம்.
ஆம் ஆத்மி கட்சியின் கவனம் 2024 லோக்சபா தேர்தலில் அல்ல, நாட்டுக்காக உழைப்பதில் இருக்கிறது. இந்தியா விரைவில் உலகின் நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும். இந்தத் தேடலில் நான் முக்கியப் பங்கு வகிக்க விரும்புகிறேன்'' என்றார்.