Published:Updated:

`அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை...!' - `சித்திரகுப்தன்' சொல்வது என்ன?

சசிகலாவை அ.தி.மு.க-வில் மீண்டும் சேர்க்கப்போவது போன்ற தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

சசிகலா
சசிகலா

சசிகலா சொந்தக்காரங்க தொடங்கி வைத்திருக்கும் கட்சிகள் போன்று அ.தி.மு.க ஒன்றும் லாலா மிட்டாய் கடை இல்லை’ என்று நமது அம்மாவில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் டி.டி.வி தினகரன், `இந்த ஆட்சி முடிந்ததும் அ.தி.மு.க என்கிற கட்சியே இருக்காது அம்மா முன்னேற்றக் கழகத்துடன் அ.தி.மு.க இணைந்துவிடும்' என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், `நமது அம்மா' பத்திரிகையில் சித்திரகுப்தன் கட்டுரையில் கூறியிருப்பதாவது,

தினகரன்
தினகரன்

``அ.தி.மு.க-வில் குழப்பத்தை ஏற்படுத்தி சசிகலா குடும்பத்தினர் மீண்டும் கட்சிக்குள் நுழைய முயல்கின்றனர். அ.தி.மு.க ஒன்றும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் இல்லை. பூமியின் ஆழத்துக்கு வேர் விடும் ஆலமரம் போன்றது. அ.தி.மு.க 1.5 கோடி தொண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. ஜெயிலுக்குச் சென்றவர்களும், பெயிலில் வந்தவர்களும் மீண்டும் தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்க அனுமதிக்க மாட்டோம். சசிகலா உறவினர்கள் தொடங்கியுள்ள கட்சிகள் போன்று அ.தி.மு.க ஒன்றும் லாலா மிட்டாய் கடை அல்ல '' என்று கூறப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் சசிகலா அ.தி.மு.க-வில் சேர்க்கப்படலாம் என்கிற தகவல் சமீபத்தில் பரவியது. அ.தி.மு.க-வில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூறியிருந்தார். ஆனால், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது போன்ற புனைவுச் செய்திகளை சசிகலா குடும்பத்தினரே திட்டமிட்டுப் பரப்புவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியவந்துள்ளதாம்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்ப்பதை தமிழக மக்கள் கூட விரும்பமாட்டார்கள் என்பதே அ..திமு.க முக்கியத் தலைவர்கள் கருத்தாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, எந்த நிலையிலும் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் சேர்க்க தலைமை விரும்பவில்லை. எனவே, `நமது அம்மா' பத்திரிகை வழியாக சசிகலா குடும்பத்துக்குப் பதிலடி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.