பாகிஸ்தானில் நிலவிவரும் விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகளுக்கு இம்ரான் கானின் `திறமையற்ற நிர்வாகமே' காரணம் என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம்சாட்டி, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் இம்ரானின் சொந்தக் கட்சியினரும் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பதால் அரசியல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சதி நடப்பதாகவும், சில நாடுகள் மறைமுகமாக எதிர்க்கட்சிகள் மூலமாக தனது அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானம் மீதான விவாதம் மார்ச் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்த தீர்மானத்துக்கு 161 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
