Published:Updated:

``இப்படிப்பட்ட தலைவர் எந்த நாட்டிற்கும் கிடைத்தது இல்லை''- பெரியாருக்கு தலைவர்கள் புகழாரம்

வீ கே.ரமேஷ்
க .தனசேகரன்
VIJAYAKUMAR M

``பெரியாருக்கு மட்டும் பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸில் தேசிய அளவில் பதவிக்குப் போயிருக்கலாம். ஆனால் அடித்தட்டு மக்களுக்காக தி.க வை உருவாக்கினார்.''

கூட்டம்
கூட்டம் ( எம்.விஜயகுமார் )

``இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது. வாகன விற்பனை சரிந்துவிட்டது. மோட்டார் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பின்னலாடை நிறுவனத்தில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பிரபல பிஸ்கெட் நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலை நிறுத்தம் செய்கிறது. இதை மறைப்பதற்கே காஷ்மீர் பிரச்னையும், ப.சிதம்பரத்தைக் கைதும் செய்திருக்கிறார்கள்'' என்று சேலத்தில் நடைபெற்ற தி.க பவள விழா கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசிய உரைதான் இவை.

M.K.Stalin
M.K.Stalin
எம். விஜயகுமார்

திராவிடர் கழகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதன் பவள விழா மாநாடு சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலையிலிருந்து கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, தஞ்சைப் புரட்சி கலைக்குழுவின் தப்பாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்றன. மாலையில் பவள விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தி.க தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க அவைத் தலைவர் துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

முதலில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், ``சாதி ஒழிப்பு, வேத எதிர்ப்பு, பெண் விடுதலை என தந்தை பெரியார் தமிழ் மக்களின் நாயகனாகத் திகழ்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்க நினைக்கிறது. இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தத்தில் எழுதப்பட்டவை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்தும் தமிழிசை இன்னும் அடங்கவில்லை. தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்கிறார். தமிழ்நாட்டில் தாமரை கருகும் மலராது. அமைதியாக இருந்த காஷ்மீரை நாசமாக்கி விட்டார்கள். மத்தியில் கொலைகார, பேய் ஆட்சியும் நடக்கிறது. அதற்கு எடப்பாடி ஆட்சி காவடி தூக்குகிறது. இந்த இரண்டு அரசுகளும் கவிழ்ந்து போக வேண்டும்'' என்றார்.

K. Veeramani
K. Veeramani
எம்.விஜயகுமார்

ம.தி.மு.க அவைத் தலைவர் துரைசாமி, ''இதே சேலத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியது. திராவிடம் என்ன செய்தது என சிலர் கேட்கிறார்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு சாதி இருந்தது. சமமாகச் சாப்பிட முடியாது. சமமாக ஆடை அணிய முடியாது. சமமாகப் படிக்க முடியாது. பெரியார் உழைத்த உழைப்பால் இன்று அந்தக் கொடுமைகள் உங்களுக்குத் தெரியவில்லை. மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயல்கிறது. இந்தியாவில் இந்தி பேசாத மக்களே அதிகம். என்பதை உணரவேண்டும்'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ''அகில இந்திய அளவில் தமிழகம் தனித்துவமாகத் திகழ்வதற்கு தந்தை பெரியாரே காரணம். சாதி ஒழிப்பு, சமூக நீதி, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் வேண்டாம் எனத் தமிழகம் மறுப்பதற்கு அடித்தளமாக இருப்பவர் பெரியார். அதனால்தான் தமிழகத்தைப் பெரியார் மண் என்கிறோம். பெரியாருக்கு மட்டும் பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸில் தேசிய அளவில் பதவிக்குப் போயிருக்கலாம். ஆனால் அடித்தட்டு மக்களுக்காக தி.க வை உருவாக்கினார். திருமாவளவன் போன்றவர்கள் தன்மானமாக வாழ்வதற்கு தி.க தான் காரணம்.

பெரியாரை வீழ்த்தி விட்டால் திராவிடத்தை வீழ்த்தி விடலாம் என சிலர் எண்ணுகிறார்கள். உலகில் இரண்டு மரபினர் உண்டு. மொழி வழி மரபு, இன வழி மரபு. இந்தியாவில் ஒரு இன வழி மரபினரே ஆதிக்கம் செலுத்தினர். அதனால் அவர்களுக்கு எதிரான மரபினர்களான திராவிடத்தைப் பெரியார் உயர்த்திப் பிடித்தார். 1956க்குப் பிறகே மொழி வழி மரபு இந்தியாவில் மேலோங்கியது. அதற்கு முன்பே பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறி இருக்கிறார். பெரியார் வழியில், அண்ணா வழியில், கருணாநிதி வழியில் ஸ்டாலின் வீறுநடை போடுகிறார். பெரியார், அம்பேத்கர் சிலையை உடைக்க முடியும். அவர்கள் உருவாக்கிய சமூக நீதி கொள்கைகளை எந்தக் கொம்பனாலும் உடைக்க முடியாது'' என்றார்.

கூட்டம்
கூட்டம்
எம்.விஜயகுமார்

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், ''திராவிடம் என்பது திரு இடம். மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் திராவிடம். மத்திய பா.ஜ.க அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி கூட்டாட்சி தத்துவத்திற்கு வெடி குண்டு வைத்திருக்கிறது. இதனால் மாநில சுயேச்சை பாதிக்கும். ஸ்டாலின் தலைமையேற்று இந்தியாவின் அனைத்து மாநில உரிமைகளைப் பாதுகாக்கப் போராட வேண்டும். அதற்கு இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம் மக்களும் உங்களுக்கு ஆதரவு தருவோம்'' என்றார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, ''இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பெரியார். மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்ற உயரிய தத்துவத்தை வழங்கியவர். தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக யார் சொன்னா. அவர்களுக்குத் தளபதி கற்றிடமாக திகழ்கிறார். எம்.ஜி.ஆர். காலத்திலேயே இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஊறு விளைவிக்க நினைத்தார்கள். பிறகு எம்.ஜி.ஆர் உணர்ந்து கொண்டு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாரே தவிர நீக்க முயற்சி செய்யவில்லை.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
க.தனசேகரன்

மத்திய பா.ஜ.க அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சமூக நீதியை அழிக்க நினைக்கிறார்கள். அதை நாம் அமைதியாக இருந்து பார்க்கப் போகிறோமா? நமக்கெல்லாம் இன்று பெரும் சோதனை வந்திருக்கிறது. நாம் அனைவரும் ரத்த உறவைவிடக் கொள்கை உறவோடு இருந்து களமாட வேண்டும். அதற்கான பதிலடிதான் நாடாளுமன்றத்தில் நம் பிரதிநிதிகள் பதவியேற்றது. அவர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என்றார்கள். நம்மவர்கள் பெரியார், அண்ணா, அம்பேத்கர், சிங்காரவேலர், கலைஞர் வாழ்கவென்று பதவியேற்றார்கள். நம் இனத்தின் மானத்தைக் காக்க துணிந்து நிற்க வேண்டும்'' என்றார்.

இறுதியாகப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ''தந்தை பிறந்த நாளுக்கு மகன் வாழ்த்து சொல்லுவதைபோல இங்கு வந்திருக்கிறேன். இந்த திராவிடர் கழகம் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். 2000 ஆண்டுக்கால அழுக்கை சில ஆண்டுகளில் நீக்க முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும். திராவிட கழகப் பணி என்பது ஆயிரம் ஆண்டுப் பணி.

தந்தை பெரியார் தன்னுடைய 90வது வயதில் 141 நாள்களில் 180 இடத்தில் பேசினார். 91வது வயதில் 131 நாள்களில் 150 இடத்தில் பேசினார். 92வது வயதில் 175 நாள்களில் 244 இடத்தில் பேசினார். 93வது வயதில் 183 நாள்களில் 249 இடத்தில் பேசினார். 94வது வயதில் 177 நாள்களில் 221 இடத்தில் பேசினார். 95வது வயதில் 98 நாள்கள் வாழ்ந்தார். அதில் 35 நாள்கள் 48 இடத்தில் பேசினார். உலகில் இப்படிப்பட்ட தலைவர் எந்த நாட்டிற்கும் கிடைத்தது இல்லை. அதனால்தான் அண்ணா, 'பெரியார் ஒரு மனிதரல்ல சகாப்தம், ஒரு திருப்பம்' என்றார்.

கூட்டம்
கூட்டம்
எம்.விஜயகுமார்

இன்று ஒரு பொருத்தமான நிகழ்வு நடந்திருக்கிறது. நான் தலைவராக பொறுப்பேற்று இன்றோடு ஒரு வருடம் ஆகி இருக்கிறது. தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையும் சேலத்தில் திறந்து வைத்திருக்கிறேன். `திராவிடர் கழகமும், தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கி; ஒரே மரக் கனிகள்' என்று அண்ணா கூறி இருக்கிறார். திராவிடம் உருவான போதே திராவிடத்தை ஒழிப்பவர்கள் உருவாகி விட்டார்கள். நம்மைப் பார்த்து தேசத் துரோகிகள் பிரிவினைவாதிகள் என்கிறார்கள். அவர்கள்தான் மாநிலத்தையும், மாவட்டத்தையும் பிரிக்கிறார்கள். நாங்கள் மக்களின் ஏஜென்ட்கள். ஜனநாயகத்திற்கு எங்கு ஆபத்து, அச்சுறுத்தல் வந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம்.

மத்திய அரசு ரயில்வே, நீட், விவசாய அழிவுத் திட்டங்களை கொண்டு வந்து பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குப் போய்விட்டது. வாகன விற்பனை சரிந்து விட்டது. மோட்டார் துறையில் 10 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பின்னலாடை நிறுவனத்தில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். பிரபல பிஸ்கெட் நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலை நிறுத்தம் செய்கிறது. இதை மறைப்பதற்கே காஷ்மீர் பிரச்னையும், ப.சிதம்பரத்தைக் கைதும் செய்திருக்கிறார்கள். திராவிட கழகத்தோடு இணைந்து, பிணைந்து உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவோம் என்பதை உறுதியேற்போம்'' என்றார்.