Published:Updated:

`புதுச்சேரி நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததில் பா.ஜ.க-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!’ - எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

`நாராயணசாமிக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களால்தான் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமியின் இயலாமையை இது காட்டுகிறது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி பா.ஜ.க சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முக்கிய நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமைப்புரீதியிலான பணிகளைச் செய்துவருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன் கூறுகையில், ``வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் கோவையில் நடைபெறவிருக்கிறது. 28-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா விழுப்புரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல் மார்ச் மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்
நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்

புதுச்சேரியில் நாராயணசாமி, ஆட்சியைச் சீராகக் கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை. அதனால்தான் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். நாராயணசாமிக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை. அவரது கட்சி எம்.எல்.ஏ-க்களால்தான் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமியின் இயலாமையை இது காட்டுகிறது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

புதுச்சேரி: `நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி’ - நாராயணசாமி அரசு கவிழ்ந்தது! #NowAtVikatan

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை மத்திய அரசும், தமிழக அரசும் கவனத்தில் கொண்டிருக்கின்றன. சரியான நேரத்தில், சரியான அறிவிப்பு வரும். காவிரி - குண்டாறு திட்டம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து கூறியிருப்பது பற்றிக் கேட்கிறீர்கள். தமிழக நலனே பா.ஜ.க-வுக்கு முக்கியம். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை. இருக்கும் இடத்தில் ராகுல் காந்தி சென்று அதை இல்லாமல் ஆக்கி வருகிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்
கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்

தமிழக அரசு ஏராளமான பல நல்ல திட்டங்களை மக்களுக்குச் செய்துவருகிறது. அதை மக்களிடம் கொண்டு செல்லவே விளம்பரம் செய்யப்படுகிறது, அதில் தவறு இல்லை. பா.ஜ.க எத்தனை இடங்களில் போட்டியிடும் என நீங்கள் கேட்கிறீர்கள். எத்தனை இடங்களில் போட்டி என்பதைவிட எத்தனை இடங்களில் வெற்றி என்பதே பா.ஜ.க-வின் நோக்கம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு