Published:Updated:

`என்.ஆர்.சிக்கும் என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; பிரதமர் சொன்னது சரிதான்!' - அமித் ஷா

என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா ( ANI )

``தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்.பி.ஆர் என்பது மக்கள் தொகையைப் பதிவு செய்வது. என்.ஆர்.சி என்பது குடியுரிமையைப் பதிவு செய்வது” என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குடிமக்கள் பதிவேட்டைத் தொடர்புபடுத்திதான் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ANI செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாநில அரசுகளின் நிலைப்பாடு என நிறைய விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமித் ஷா விளக்கமளித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: எளிதானப் புரிதலுக்கு விகடனின் சிறப்புக் கவரேஜ்!

அமித் ஷா கூறுகையில்,``மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் அப்படியே தொடர்கிறோம். இது நல்ல விஷயம். அதனால், நாங்களும் அதைப் பின்பற்றுகிறோம். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டிற்கு பயன்படுத்தப்பட மாட்டாது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் மூலம் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. என்.ஆர்.சியை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. பிரதமர் மோடி சொன்னது சரிதான். அதுகுறித்து எந்த ஆலோசனையும் இப்போது நடக்கவில்லை.

அமித் ஷா
அமித் ஷா
ANI

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒருவருடைய பெயர் விடுப்பட்டாலும் அதனால் அவரது குடியுரிமையில் எந்த பிரச்னையும் ஏற்படாது. அரசு திட்டங்களின் கட்டமைப்புக்காக தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்கப்படுகிறது. வீட்டின் பரப்பளவு என்ன, உங்களிடம் எத்தனை கால்நடைகள் உள்ளன போன்ற சில விஷயங்கள் மட்டும் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தொடர்பாக அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். அந்த விண்ணப்பத்தில் தகவல்களை பூர்த்தி செய்வார்கள். உங்களிடம் எந்த ஆவணங்களும் கேட்க மாட்டார்கள். ஆதார் அட்டைகள் ஒருவேளை தேவைப்படலாம். ஆனால், ஆதார் அட்டைகள் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுப்பதில் என்ன பிரச்னை? தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்ற முடிவை கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். அரசியலுக்காக ஏழைகளின் வளர்ச்சிக்கு தடையாக அந்த மாநில அரசுகள் இருக்கின்றன.

அமித் ஷா
அமித் ஷா
ANI

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையைக் கேளுங்கள். இந்த சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மக்கள் யாரும் தங்களது குடியுரிமையை இழக்கப்போவதில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளேன். இந்தியாவில் தடுப்பு மையங்கள் நீண்ட காலமாகவே இருக்கிறது. மோடி அரசு ஒன்று புதிதாகத் தடுப்பு மையங்களைக் கட்டவில்லை. இந்திய அரசுக்கு என்று சில சட்டங்கள் இருக்கின்றன. அதன்படிதான் நடக்க முடியும். இந்தியாவுக்குள் யாரை வேண்டுமானாலும் அனுமதிக்க முடியாது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர்கள் சிக்கும்போது அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள்.

என்.ஆர்.சிக்கு எதிரான ஓவைசியின் நிலைப்பாட்டில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. நாங்கள் சூரியன் கிழக்கே உதிக்கிறது என்றால் அவர் மேற்கில் உதிக்கிறது என்பார். என்.பி.ஆர்-க்கும் என்.ஆர்.சி-க்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது” என்றார்.