Published:Updated:

`எங்களை நெருங்கும் தைரியம் யாருக்கும் இல்லை!’ - எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் சிவசேனா?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கான காலம் முடிவடையவுள்ள நிலையில், சிவசேனா தங்கள் எம்.எல்.ஏ-க்களை ஹோட்டலில் தங்க வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா அரசியலில் தினம் தினம் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி என்ன நடந்தாலும் அங்கு யார் ஆட்சியமைப்பது என்பதில் மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்னும் பா.ஜ.க-வும் சிவசேனாவும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றன.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

இதற்கிடையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இன்று அம்மாநில ஆளுநரைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், சிவசேனாவுக்கு சற்று கால அவகாசம் கொடுத்து ஆளுநருடனான தங்களின் சந்திப்பைச் சற்று தள்ளிவைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் சிவசேனா, தங்கள் எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களை ஹோட்டலில் தங்கவைப்பதாகச் செய்திகள் கசியவே, பரபரப்பான மகாராஷ்டிர அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

`சரத் பவார் மற்றும் ஆளுநரை சந்தித்த சிவசேனா!’ - மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்துவது யார்?

இந்த விவகாரத்தை முற்றிலும் மறுத்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்களின் தீர்மானத்தில் மிகவும் உறுதியாக உள்ளனர். அவர்களின் மீது கட்சியும் நம்பிக்கை வைத்துள்ளது. இது போன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பற்றி கவலைப்பட வேண்டும். எங்களை நெருங்கும் தைரியம் யாருக்கும் இல்லை. இன்றைய கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் கொள்கைகளை எம்.எல்.ஏ-க்களுக்கு எடுத்துக்கூறி அவர்களுக்கு வழிகாட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்நிலையில், இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அது முடிந்த பிறகு, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் உத்தவ்வின் இல்லத்துக்கு அருகில், அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சிவசேனாவின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்க வைக்கப்படவுள்ளதாக நம்ப தகுந்த தகவல் வெளியாகியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.