மார்ச் 17-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க மாநில நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்த கருத்து தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து டெல்லி தலைமைக்கு அண்ணாமலை கடிதம் ஒன்று எழுதியதும் முக்கியத்துவம் பெற்றது. இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று (மார்ச் 22) சென்னையில் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, அண்ணாமலை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலைக்கும், டெல்லி தலைமைக்கும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்கிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால், அதற்கு முன்கூட்டியே இன்று டெல்லி சென்றிருக்கிறார் அண்ணாமலை.

டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “சில உட்கட்சி பிரச்னைகளை வெளியே பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்னையைச் சார்ந்து நான் டெல்லியில் பேசினால் வெளியே பேசுவது என் கடமை. நேரமும் காலமும் வரும்போது நிச்சயம் நான் இது தொடர்பாகப் பேசுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது 23-ம் புலிகேசி படத்தில் வருவதுபோல்தான் என அந்தப் படத்தில் வரும் காட்சியை குறிப்பிட்டுப் பேசிய அண்ணாமலை, “காலையிலேயே முதலமைச்சர், DGP, ADGP-யிடம் கேட்கும் முதல் கேள்வி நம்மைப் பற்றி சமூக வலைதளங்களில் யார் தவறாகப் பேசுகிறார்கள் என்றுதான். அவர்களைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்வதில்தான் இந்த அரசு முனைப்பு காட்டுகிறது. குழந்தைகள், பெண்கள்மீது வன்மத்தைக் கக்குபவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. தினமும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவோர்களையும், மீம்ஸ் போடுபவர்களையும் கைதுசெய்யதான் காவல்துறை புலி மாதிரி செயல்படுகிறது.
நமது முதலமைச்சருக்கு சமூக வலைதளங்களில் வரும் கருத்துகள் முள்மாதிரி குத்துகிறது. அரசியலில் பாரம்பர்ய குடும்பத்திலிருந்து வந்த முதலமைச்சர், 19, 18 வயது இளைஞர்களைக் கைதுசெய்வது முதலமைச்சரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. 2019-ஐவிட 2022 மிக மோசமான வருடம். அதிக அளவில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் சமூக வலைதளங்களின்மீது மட்டும் காவல்துறை கண்ணாக இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு பராமரிப்பை இது காட்டுகிறது” என்றவர், காவல்துறையில் இருக்கும்போது 30 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார் என்று செந்தில் பாலாஜி கூறியது தொடர்பான கேள்விக்கு...

“உங்களிடம் ஆட்சி இருக்கிறது. நீங்களே இது தொடர்பாக கண்டறியலாம். சாராய அமைச்சரும், அமைச்சர் தொடர்புடையவர்களோ முழு அரசு அதிகாரிகளையும் என்மீது ஏவிவிட்டு.. நான் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறேன்; எவ்வளவு சம்பாதித்திருக்கிறேன்; ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கும்போது ஒன்பது வருடத்தில் ஒரு பைசாவாவது லஞ்சம் வாங்கியிருக்கிறேன் என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 70,000 காவல்துறையினரை கர்நாடகாவுக்கு அனுப்பி கண்டறிந்து கேள்வி கேட்கட்டும். நான் பதில் சொல்கிறேன். அண்ணாமலையோ, அண்ணாமலை தொடர்புடையவர்களோ பத்திரப்பதிவு செய்திருக்கிறார்களா... என்பதைக் கண்டறியுங்கள். ஆட்சியும் அதிகாரமும் செந்தில் பாலாஜியிடம் இருக்கும்போது அவர் அரசு அதிகாரிகளை அனுப்பி கண்டறியட்டும் அப்பொழுது நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சி விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ``பா.ஜ.க-வின் வளர்ச்சியை அவர்கள் (அ.தி.மு.க) ரசிக்க விரும்பவில்லை. இது நல்லதுதான். யாராக இருந்தாலும் அவர்களுடைய கட்சி வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க வளர வேண்டும் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். அரசியலைப் பொறுத்தவரை யாரும் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. கூட்டணித் தலைவர்கள் என்மீது விமர்சனம் வைத்தால் வரவேற்கிறேன். அவர்களின் (அ.தி.மு.க) கட்சியின் வளர்ச்சியை நாங்கள் தடுக்கிறோம் என்ற கவலை அவர்களுக்கு உள்ளது. அவரவர் அவரவர் கட்சியை வளர்ப்பதற்குத்தான் இங்கு இருக்கிறோம்” என்றார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, ‘நேரமும் காலமும் வரும்போது தெரிவிக்கிறேன்’ என்று கூறி அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு தரை இறங்குவதற்கு முன்னரே டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநில பா.ஜ.க தலைவர்களை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மாற்றியிருப்பது அரசியல் கவனம் பெற்றிருக்கிறது!