Published:Updated:

அ.தி.மு.க-வுக்குள் சசிகலா வேண்டாம்! - எடப்பாடியின் பிளான் என்ன..?

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

``2019 இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றபோது சசிகலாவோ, அ.ம.மு.க-வோ நம்முடன் இல்லை... அவங்க இல்லாம நமக்கு என்ன ஓட்டு வருதோ அது மட்டும் வரட்டும்” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் எடப்பாடி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்ற சசிகலாவின் கனவை, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சிதைத்துவிட்டது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைத் தண்டனை முடிந்து, கொரோனா தொற்றிலிருந்தும் மீண்டார்.

பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட 23 மணி நேர வரவேற்பு அ.தி.மு.க-வினரை மட்டுமல்ல, பா.ஜ.க-வினரையும் சற்று அசைத்துப் பார்த்தது. அதன் பின்னர்தான் முக்குலத்தோர் சமூக வாக்குகள், அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமையின் மீதிருக்கும் அதிருப்தி எனப் பலவற்றையும் முன்வைத்து அ.ம.மு.க-வையும், அ.தி.மு.க-வையும் இணைக்க தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலர் முயன்றுவருவதாகத் தகவல்கள் வெளியாகின. `அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வேண்டுமென்றால் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று மேலிடத்திலும் தமிழக பா.ஜ.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தினராம்.

சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

ஆனால், சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்கும் முயற்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. முக்குலத்தோரின் வாக்குகளை ஈர்ப்பதற்கும், தென் தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கும் சில திட்டங்களை அவர் தீட்டிவருவதாகவும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவை பழனிசாமி ஏற்க மறுப்பதன் பின்னணி என்ன... இதில், விடாப்பிடியாக நிற்பதால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``தொண்டர்களின் முழு ஆதரவுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் அ.தி.மு.க-வை பன்னீரும் பழனிசாமியும் வழிநடத்துகிறார்கள். இதற்கிடையில் தற்போது சசிகலாவைக் கட்சிக்குள் நுழைத்தால், அவர் தலையீடு கட்சிக்குள் அதிகரிக்கும். இந்தக் குழப்பம் சட்டமன்றத் தேர்தல் வெற்றியிலும் எதிரொலிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அதுமட்டுமல்ல, அ.திமு.க-வுக்கு இரட்டைத் தலைமைதான் என்றாலும், எந்தக் குழு அமைத்தாலும் அதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்கிறார்கள். ஆட்சியில் மட்டுமல்ல, கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருப்பதையே இது காட்டுகிறது. சசிகலாவைக் கட்சிக்குள் அனுமதித்தால், இந்த அதிகாரம் பழனிசாமியின் கையைவிட்டுப் பறிபோய்விடும்.

சசிகலா பெயரைத் தவிர்க்கிறாரா... எடப்பாடியின் எதிர்ப்பு அரசியல் எப்படிப்பட்டது?
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி

தன்னிடம் கட்சியின் இணைப்பு தொடர்பாக சில முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் பேசியபோது, `2019-ல் நடந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றது. அதில் நிலக்கோட்டை, பரமக்குடி, சாத்தூர், விளாத்திகுளம் ஆகிய நான்கு தொகுதிகள் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இதில் சாத்தூர் தவிர பிற தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. அப்போது நம்முடன் அ.ம.மு.க-வோ, சசிகலாவோ இல்லையே... அவர்கள் இல்லாமல்தானே வெற்றி பெற்றோம்... அவங்க இல்லாம நமக்கு என்ன ஓட்டு வருதோ அது மட்டும் வரட்டும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

சசிகலாவை இவ்வளவு தைரியமாக பழனிசாமி ஓரங்கட்டுவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. சசிகலா, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடியைச் சேர்ந்த எவர்மீதும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. எனவே, இவர்கள் இருவரையும் அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மோடி, அமித் ஷா கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்பது பழனிசாமிக்குத் தெரியும். கட்சி இணைப்பு பற்றிப் பேசும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் சிலரின் தனிப்பட்ட விருப்பங்களுக்காக, நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டியதில்லை என்பதில் பழனிசாமி தீர்மானமாக இருக்கிறார்.

மோடி - பழனிசாமி - பன்னீர்செல்வம்
மோடி - பழனிசாமி - பன்னீர்செல்வம்

அதுமட்டுமல்ல... குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு மூலம் நிறைவேற்றிவிட்டார் பழனிசாமி. முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் கவர, உசிலம்பட்டியில் மூக்கையா தேவரின் சிலையை விரைவில் பன்னீரும் பழனிசாமியும் சேர்ந்து திறக்கவிருக்கிறார்கள். முத்தரையர் சமூகத்தினரின் வாக்குகளை வளைப்பதற்காக, வலையர்கள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்றார் பழனிசாமி. இப்படி, சசிகலாவால் கிடைக்காமல் போகக்கூடிய முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஈடுகட்டும்விதத்தில், தென்மாவட்டத்தில் சில சமூக அரசியலையையும் பழனிசாமி கையில் எடுத்திருக்கிறார்” என்றனர்.

`சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்ப்பதே இல்லை’ என்ற பழனிசாமியின் பல்ஸ் அறிந்ததால்தான், பா.ஜ.க-வின் நிலைப்பாடு சற்று இறங்கி வந்திருக்கிறதாம். அதன் வெளிப்பாடுதான், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை, ``எடப்பாடி பழனிசாமிதான் இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருக்கிறார். அவரை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தல் களத்துக்குச் செல்கிறோம். சசிகலா அ.தி.மு.க-வில் சேருவாரா, அதன் மூலமாக ஏதாவது மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர்களின் இணைப்பு குறித்தும் நாங்கள் எதுவும் முயற்சி செய்யவில்லை. எங்களுக்கு அது போன்று செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

தென் தமிழகத்தில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், வலையர் சமூக வாக்குகளை ஈர்க்க சமுக அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார் பழனிசாமி. சசிகலாவின் வருகை எந்த வகையிலும் அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அவசியம் இல்லை என்பதை பா.ஜ.க தலைவர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். அவரது தைரியம் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுமா என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு