Published:Updated:

`கான்ஃபெட் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்!’- புதுவை துணைநிலை ஆளுநருக்குப் பறந்த புகார்

`கான்ஃபெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டும்’ என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனந்தகுமார்
ஆனந்தகுமார்

`கான்ஃபெட் நிறுவன ஊழல் மீது புதுவை துணைநிலை ஆளுநர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கான்ஃபெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தையும் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டும்’ என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கான்ஃபெட் ஊழியர்கள்
கான்ஃபெட் ஊழியர்கள்

புதுவை மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம் கான்ஃபெட் (CONFED) என்ற நிறுவனத்தை 1982-ம் ஆண்டு தொடங்கியது. அரசின் முதலீட்டைப் பயன்படுத்தி லாபம் ஈட்டி, அரசுக்கு நல்ல வருமானம் பெற்றுத் தரும் சீரிய நோக்கத்தில் இதன் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 8 பெட்ரோல் விற்னை நிலையங்களும், 9 மதுபானக் கடைகளும் தொடங்கப்பட்டன. 1993- ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை காரைக்கால் கிளைக்கு கான்ஃபெட் தலைமை அலுவலகத்திலிருந்து நிதி ஏதும் வழங்கப்படவே இல்லை. காரைக்கால் கிளைக்கு நிதி மறுக்கப்பட்டாலும், அதன் கட்டுப்பாட்டிலுள்ள 3 பெட்ரோல் நிலையங்கள் மற்றும் 3 மதுபானக் கடைகள், நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. ஆனால், கடந்த செப்டம்டர் மாதம் முதல் திடீரென காரைக்கால் கிளை ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆளுநருக்கு புகார் மனு அனுப்பியுள்ள இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர். ஆனந்தகுமாரிடம் பேசினோம். ``கான்ஃபெட் நிர்வாகத் தலைமை அலுவலகம் கடந்த 8 மாதங்களில் சுமார் 1 கோடி ரூபாய் பணத்தைக் காரைக்கால் கிளையின் கணக்கிலிருந்து கூடுதலாக எடுத்துள்ளது. கூடுதல் தொகையை ஏன் எடுத்தார்கள், என்ன செய்தார்கள்... என்பது மர்மமாக உள்ளது. கான்ஃபெட் நிர்வாகத்தின் மேலாண் இயக்குநர் தன் மகள் திருமணத்துக்காக பல லட்சம் ரூபாய் நிதியை நிர்வாகத்தின் கணக்கிலிருந்து அட்வான்ஸ் போட்டு எடுத்துக்கொண்டதாகவும், அவர் பணி நிறைவு பெற சில நாள்களே உள்ள நிலையில், விடுப்பில் சென்றுள்ளதாகவும் தெரிகிறது.

கான்ஃபெட் ஊழியர்கள்
கான்ஃபெட் ஊழியர்கள்

அது மட்டுமல்லாமல் ஊழியர்களின் வைப்பு நிதி (இ.பி.எஃப் - EPF) தொகையான சுமார் 1.3 கோடி ரூபாய் அதற்கான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதியப் பணிக்கொடையான (Gratuity) சுமார் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகையை மாதாமாதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்தும், அந்தத் தொகையை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பவில்லை. ஊழியர்கள் வங்கியில் பெற்ற கடன்களை அடைக்க, அவர்களிடம் இருந்து கான்ஃபெட் நிர்வாகம் பிடித்தம் செய்த மீட்புக் தொகையை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு திரும்பக் கொடுக்காமல் முறைகேடு நடந்துள்ளது.

கடந்த 3 மாதங்களாகக் காலியாக இருக்கும் கிளை மேலாளர் பதவியைக்கூட கான்ஃபெட் நிர்வாகம் நிரப்பவில்லை.

நேர்மையாக, லாபத்தில் இயங்கி வந்த காரைக்கால் கான்ஃபெட் கிளை இன்று நலிவடைந்து, ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாமல் மூடும் அவல நிலையில் உள்ளதால், இந்த முறைகேடுகள் குறித்து, புதுவை துணைநிலை ஆளுநர் உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழியர்களின் வாழ்வாரத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் புதுவை ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளது" என்றார்.

`உயிரைப் பறித்த உளுந்துவடை!’ - குடிபோதையால் புதுவை முதியவருக்கு நேர்ந்த துயரம்

இதுபற்றி கான்ஃபெட் காரைக்கால் மேலாளர் பொறுப்பு வகிக்கும் நவகுஜானிடம் பேசியபோது, "எங்களுக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறோம். இது பற்றி நீங்கள் புதுவையில் உள்ள தலைமை அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும்" என்று கூறி தொடர்பு எண்களைக் கொடுத்தார். புதுவை அலுவலகத் துணை மேலாளர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது. அலுவலக எண்ணை பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை. அவர்கள் விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் அதனை பதிவு செய்யத் தயாராக உள்ளோம்.