Published:Updated:

`தயவுசெய்து திகாருக்கு அனுப்பிவிடாதீர்கள்’ - உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வாதம்

ராம் பிரசாத்

``சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை” என சிபிஐ தரப்பு வாதிட்டு காவலை நீட்டிப்பு செய்தது.

P.Chidambaram
P.Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21-ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் சிதம்பரம் முன்ஜாமீன் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

chidambaram
chidambaram

கைது செய்யப்பட்டதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாள் சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து நாள் காவல் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். ``சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை” என்று கூறி மீண்டும் 30-ம் தேதிவரை காவல் நீட்டிப்பைப் பெற்றது. மேலும், செப்டம்பர் 2-ம் தேதிவரை சி.பி.ஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அமலாக்கத்துறை வழக்கில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. சிதம்பரத்துக்கு பாதுகாப்பு வேண்டும். தற்போது அவருக்கு 74 வயதாகிறது. அதுவரை அவரை மூன்று நாள்கள் வீட்டுக்காவலில் வையுங்கள் தயாராக இருக்கிறோம். திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் . 3 நாள்களில் ஏதும் நடக்கப்போவதில்லை என வாதிட்டார்.

Supreme Court
Supreme Court
Vikatan

இதற்கு, சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை நாளைய தேதிக்கு ஒத்திவைக்குமாறு சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வைப்பது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்தும் உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ காவலை 3 நாள்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`எய்ம்ஸில் 2 வருடம்; இரட்டையர்களுக்கு நடந்த அறுவை சிகிச்சை'- ஒடிசா திரும்பும் சிறுவர்கள்!