Published:Updated:

`மோடியுடன் சண்டை; ராகுல் நட்பு!' - நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜியின் அரசியல்! 

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகிய மூவர் குழு, பொருளாதாரத் துறையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இவர்களுள் இந்தியரான அபிஜித் பானர்ஜி, தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசிவருபவர். அவரது ஆய்வு என்ன சொல்கிறது? அபிஜித்தின் அரசியல் பார்வை என்ன?

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி ( AP )

வறுமை ஒழிப்புகுறித்த ஆய்வுக்காக, பொருளாதார அறிவியல் துறையின் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகிய மூவர் குழு. இவர்களுள் அபிஜித் பானர்ஜி, இந்தியாவைச் சேர்ந்தவர். அபிஜித் பானர்ஜி இந்தியர் என்பதில் இந்தியாவுக்குப் பெருமை என்ற போதிலும், சமகால அரசியல்மீதான அபிஜித்தின் பார்வை, பலரையும் விவாதம்செய்யவைத்திருக்கிறது.

மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் பயின்றவர். அதன்பிறகு, மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அபிஜித் பானர்ஜி, தற்போது எம்.ஐ.டி-யில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!
அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் க்ரெமர் ஆகிய மூவர் குழுவின் ஆய்வு, வளர்ச்சிப் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. நாடு, மாநிலம் என்ற அளவில் பெரியவற்றைக் கணக்கில்கொண்டு, பொருளாதார அணுகுமுறைகள் உருவாக்கப்படும் முறையிலிருந்து மாறுபட்டு, மருத்துவத் துறையில் ஆய்வு மாதிரிகளைத் தனித்தனியாகப் பிரிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது, இந்தக் குழு.

இதை Randomized Control Trails என்று அழைக்கின்றனர். இதன்படி முதலில், சமூகத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியான கல்வி, வருமானம் ஆகியவற்றைப் பெறும் இருவேறு குழுக்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு குழுவுக்கு அளிக்கப்படும் 'சிகிச்சை' மற்றொரு குழுவுக்கு அளிக்கப்படாமல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 'சிகிச்சை' என்பது மருத்துவ சிகிச்சையல்ல; அரசு அளிக்கும் சமூக, பொருளாதார உதவிகள். இதில் வரும் முடிவுகள், அரசுக் கொள்கைகள் வகுக்கப்படும்போது பயன்படுத்தப்படுகின்றன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏன் என்பதன் லாஜிக் எனக்குப் புரியவில்லை. எதற்காக 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்படுகிறது? தற்போது எதிர்பார்ப்பதைவிட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என நம்புகிறேன்
அபிஜித் பானர்ஜி

நாடு, மாநிலம் என்ற பெரிய அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் பொருளாதார ஆய்வுகளில், 'ஏழை' என்ற வகுப்பு, வருமானம் என்ற அடிப்படையில், மொத்த படிநிலையின் கீழ்த்தளத்தில் வைக்கப்படுகிறது. அபிஜித் - எஸ்தர் - மைக்கேல் ஆகியோரது ஆய்வு, இதற்கு மாற்றாக, ஏழைகளின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கக் கோருகிறது. அரசுக்கும் சமூகப் படிநிலையின் கீழ்த்தளத்தில் வறுமையோடு வாழும் மக்களுக்கும் இடையிலான உறவை நேரடியாக உருவாக்குகிறது இந்த முறை.

நோபல் பரிசுபெற்றபோதும், வறுமை ஒழிப்புக்கான இந்தப் பொருளாதார அணுகுமுறைமீது விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் Randomized Control Trails முறை, பெரிய அளவில், கூட்டமாக வாழும் மக்களிடையே பயன்படுத்த முடியாது எனப் பொருளாதார விமர்சகர்கள் கருதுகின்றனர். மருத்துவத்தில் மக்களின் உடல்கள்மீது ஆய்வுசெய்வது, ஒரே மாதிரியான முடிவுகளைத் தரலாம். ஆனால் பொருளாதாரத்தில், மக்களின் உளவியல்மீது ஆய்வுசெய்வது முழுமையான முடிவுகளைத் தராது என்பது விமர்சகர்களின் வாதம்.

"இந்தியப் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது"
அபிஜித் பானர்ஜி
வறுமைக்கான அடிப்படைக் காரணமாக, மக்களிடையே நிலவும் சமத்துவமின்மையைப் பற்றி இந்த ஆய்வு குறிப்பிடவில்லை. பெரும்பான்மை ஏழை மக்களின் உழைப்பு பணமாக மாறி, சில மனிதர்களிடம் மட்டும் சொத்தாகச் சேருவதைப் பேசாமல், வெறும் அரசு வழங்கும் நிதியுதவி, நலத்திட்டம் ஆகியவற்றால் வறுமையை ஒழித்துவிட முடியும் என இந்த ஆய்வு கூறுவதாகவும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார். அவரது கருத்துகள் பி.ஜே.பி-யினரிடையே கோபத்தை உண்டாக்கி வருகின்றன. மோடி ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான விமர்சனங்களாக அபிஜித் பானர்ஜியின் கருத்துகள் வெளிப்படுகின்றன. மேலும் அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகள் வகுக்க உதவி செய்திருக்கிறார்.

எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
AP

2016-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிந்து, 50 நாள்கள் கழித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அபிஜித் பானர்ஜி, "பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏன் என்பதன் லாஜிக் எனக்குப் புரியவில்லை. எதற்காக 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்படுகிறது? தற்போது எதிர்பார்ப்பதைவிட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

கடந்த மார்ச் மாதம், புள்ளியியல் துறை வெளியிடும் புள்ளி விவரங்களில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காக அவை மாற்றப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. அதைக் கண்டித்து, இந்திய அரசுக்கு சர்வதேச பொருளாதார வல்லுநர்கள், புள்ளியியல் துறைக்கு சுதந்திரம் அளிக்குமாறு கடிதம் எழுதினர். 108 பொருளாதார நிபுணர்கள் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில், அபிஜித் பானர்ஜியின் கையெழுத்தும் இருந்தது.

"ஜன் தன் யோஜனா திட்டம், மக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இருந்து, மாதம் 25 கிலோமீட்டர் பயணித்து, வங்கி சென்று, தங்கள் கணக்கில் 200 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்பது லேசான காரியம் அல்ல. இப்படித்தான் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. தற்போதைய அரசு, திட்டங்களை முதலில் அறிவித்துவிட்டு பிறகு பின்வாங்கிக்கொள்கிறது."
அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
AP
`ஜெ., முதல்வராக இருந்தபோது..!’ - `நோபல்’ அபிஜித் -க்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு?

பி.ஜே.பி-யின் திட்டங்களையும் விமர்சித்துள்ளார், அபிஜித் பானர்ஜி. "ஜன் தன் யோஜனா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் வரையுள்ள அனைத்துத் திட்டங்களின் நோக்கமும் சிறப்பானவை. எனினும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வசதிகள் தற்போது இல்லை. இந்தத் திட்டங்கள் குறித்த விவாதங்கள் அவசியம். தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெறாமல் போனதற்கு முக்கியக் காரணம், மக்களின் உளவியலை அது தொடவில்லை. தண்ணீர் வராத கழிவறைகளை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள். ஜன் தன் யோஜனா திட்டம், மக்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இருந்து, மாதம் 25 கிலோமீட்டர் பயணித்து, வங்கி சென்று, தங்கள் கணக்கில் 200 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்பது லேசான காரியம் அல்ல. இப்படித்தான் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. தற்போதைய அரசு, திட்டங்களை முதலில் அறிவித்துவிட்டு பிறகு பின்வாங்கிக்கொள்கிறது" என்று கடந்த ஆண்டு பேசினார், அபிஜித்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமானது, 'நியாய்' திட்டம். ஏழைகளுக்கு குறைந்தபட்ச நிதியுதவி அளிக்கும் இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு வகுத்துக் கொடுத்ததில் அபிஜித்தின் பங்குண்டு. அபிஜித் நோபல் பரிசு பெற்றபோது, ராகுல் காந்தி அதைப் பாராட்டி செய்திருந்த ட்வீட்டில், அதைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது நோபல் பரிசு பெற்ற பிறகு, செய்தியாளர்களை அமெரிக்காவின் எம்.ஐ.டி-யில் சந்தித்த அபிஜித் பானர்ஜி, "இந்தியப் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது." என்று கூறியுள்ளார்.

எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
எஸ்தர் டஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி
AP
`கொல்கத்தா டு ஹார்வர்டு; தந்தையைப் போலவே பொருளாதாரம்!'- `நோபல் பரிசு' இந்தியர் அபிஜித் பானர்ஜி யார்?

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை மாற்றுவது குறித்த கருத்தரங்கம் ஒன்றில், கடந்த வாரம் அபிஜித் கலந்து கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதுகுறித்து, அவர் திரையிட்ட ஸ்லைடுகளில், 'இந்தியப் பொருளாதாரத்தை மீட்பது எப்படி?' என்ற கேள்விக்கு, சில பதில்களைக் குறிப்பிட்டிருந்தார். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித், அதில் இறுதியாகக் கூறியிருந்த பதில் - "கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்!"