Election bannerElection banner
Published:Updated:

காஷ்மீர் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது; ஆனால், ஜம்மு எப்படியிருக்கிறது எனத் தெரியுமா?

காஷ்மீர்
காஷ்மீர் ( விகடன் )

நம் இணைய உலகில் எந்தவொரு விஷயத்தையும் அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு மேல் விவாதிப்பதில்லை.

நம்மிடையே பேசுபொருளாகும் ஒரு சம்பவத்தின் அடுத்தகட்டம், என்ன என்கிற தேடுதல் நம்மில் பெரும்பாலோனோர்க்கு இல்லை. அப்படித்தான் சமீபத்திய ஜம்மு - காஷ்மீர், லடாக் விவகாரத்தையும் அணுகினோம்.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

370 சட்டப்பிரிவை அரசு நீக்குவது காஷ்மீரி மக்களுக்கு நல்லதா, அதில் ஜனநாயக மாண்பு இருக்கிறதா என அனல் பறக்க விவாதித்தோம். அதற்குப் பிறகு, அந்த மக்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் நமக்கும் பெரிதாகத் தெரிந்தவாறுதான் இருந்தது. இது, ஊடகங்களின் வேலைதானே எனக் கேட்கிற கேள்வி நியாயம்தான் எனினும், அந்த நியாயத்துக்கு உரியபொருள் சேர்க்க முடியாத சூழல்தான் அங்கே நிலவுகிறது என நம்மால் அறிய முடிகிறது.

ஓர் ஊரில், என்னதான் அசாதாரண சூழல் நிலவினாலும் அதிகபட்சம் ஒருவாரத்துக்குள் இயல்பு நிலைக்கு மாறிவிடும். ஆனால், 370 வது சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அசாதாரண நிலையிலிருந்த ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் சுமார் ஒரு மாத காலம் கடந்த பின்னரும் அதே நிலையில்தான் இருக்கின்றன என்று தகவல் கிடைக்க, அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற 'காஷ்மீர் டைம்ஸ்' ஆசிரியர் அனுராதா பஸினைத் தொடர்புகொண்டு பேசினோம்.

ஜம்மு
ஜம்மு

அவர் கூறியதாவது, ``காஷ்மீரில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பிவிட்டது. டேட்டா மற்றும் தொடர்புச் சேவைகள் கொடுக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னாலும் லேண்ட்லைன் தொடர்புகள் சீராக இல்லை. பெரும்பான்மை மக்கள் உபயோகிக்கும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் இன்னும் தரப்படாமல் இருக்கின்றன. ஜம்முவின் 10 மாவட்டங்களில் ஜம்மு, கத்துவா, ரேஹ்ஸி, சம்பா மற்றும் உதம்பூரில் இன்னும் இயல்புநிலையே திரும்பவில்லை. மக்கள் தொடர்புக்கு எவ்விதத் தடையும் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது. எங்களது 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகையின் தலைமை அலுவலகம் காஷ்மீரில்தான் இருக்கிறது. நிருபர்களால் செய்தி சேகரிக்க முடிந்தாலும் இணையச் சேவை உட்பட அனைத்தும் இன்னமும் தடைப்பட்டு இருப்பதால் அவர்களால் அங்கிருந்து எந்தவிதச்செய்தியும் அனுப்ப முடிவதில்லை. இதுதான் தற்போதைய நிலவரம்” என்றார்.

காஷ்மீரில் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பிவிட்டது, ஜம்மு, லடாக் பகுதிகளின் நிலைமை இன்னும் சீராகவில்லை என்ற தகவலே இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையவில்லை. இந்தச் சூழலில் காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாச் செல்வதும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள் அங்கே முதலீடு செய்யலாம் என்பதும் தொலைதுாரக் கனவாகத்தான் தெரிகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு