Published:Updated:

`ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’ - ஆளுநர் ஆர்.என்.ரவி கொந்தளிப்பு... பின்னணி என்ன?!

ஆளுநர் ஆர்.என்.ரவி

``'ஆளுநரை ஆளுநராக மாற்றுங்கள். இல்லை வேறொரு ஆளுநரை தாருங்கள்...’ என்று தி.மு.க சொல்கிறது”- பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

`ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’ - ஆளுநர் ஆர்.என்.ரவி கொந்தளிப்பு... பின்னணி என்ன?!

``'ஆளுநரை ஆளுநராக மாற்றுங்கள். இல்லை வேறொரு ஆளுநரை தாருங்கள்...’ என்று தி.மு.க சொல்கிறது”- பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

பா.ஜ.க ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவிவருகிறது. அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், தி.மு.க அரசும் தொடர்ந்து பல அரசியல் அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து கடிதம் அனுப்பியிருக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவியோ, `ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல' என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி

லோக் ஆயுக்தா தினத்தையொட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ``ஆளுநர் என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. அந்த ஒலிகள் முக்கியமில்லை. முக்கியமானது எதுவென்றால், அது இந்திய அரசியலமைப்பு. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள். ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா... இல்லையா... என்பதை நீதித்துறை முடிவு செய்யும். ஆளுநர் பதவி அமைப்புமுறை முக்கியமானது.

லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொண்டு வரப்படும்போது பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. ஆளுநர்கள் அதில் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல. அரசியலமைப்பு விதி 200-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவைத் தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது" என்று பேசி இருக்கிறார்.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

இது தொடர்பாக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா, ``அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன பேச வேண்டுமோ அதைதான் ஆளுநர் பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டும் கிடையாது, அக்கா தமிழிசை அவர்கள் சொல்ல கூடிய கருத்தும் அதுதான். ‘ஆட்டுக்கு எதற்கு தாடி...’ என்று அண்ணா ஒரு முறை சொல்லிவிட்டு சென்றார் என்பதற்காக, அப்படித்தான் ஆளுநர் இருக்க வேண்டும், வேறு எதற்குமே புரயோஜனம் இல்லை என்று வெறும் டம்மி போஸ்டாக, ரப்பர் ஸ்டாம்பாக புரஜெக்ட் செய்ய தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நினைக்கிறார்கள்.

ஆனால், அவருக்கென்று சட்டப்படி ஒரு புரோட்டக்கால் இருக்கிறது, மரியாதை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வைத்து ஆட்சி கலைப்பதற்கும், எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது குறித்தும் அரசியலமைப்புப்படி முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பவரை எப்படி ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்லலாம். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தி.மு.க-வின் மசோதாக்கள் இன்று யாரிடம் இருக்கிறது. ஆளுநரிடம் தானே. அவர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் கையெழுத்து போட்டால்தானே சட்டமாகும். இப்படி ஒரு அதிகாரத்தில் இருப்பவரை ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்வதைதான், ஆளுநர் விளக்கி இருக்கிறார்” என்றார்.

வன்னி அரசு
வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் அதிகாரம்தான் முழுமையானது. ஒன்றிய அரசின் மேற்பார்வையாளராக நியமிக்கப்படும் ஆளுநருக்கு, சட்டம் இயற்ற கூடிய சட்டப்பேரவையில் கொடுக்கின்ற அதிகாரத்தை நிறைவேற்றி கொடுப்பதோடு, அரசின் வளர்ச்சி திட்டங்கள், அதன் செயல்பாடு திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்த அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது. அதன்படி இப்போதைய தி.மு.க அரசால் மொத்தம் 20 சட்ட மசோதாக்கள் போடப்பட்டிருக்கிறது. இதை சட்டவடிவமாக்கும் வேலையை செய்யாமல், ஒன்றிய அரசுக்கு ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்கிறார். அதிலும் சனாதனம், ராமராஜியம் என்று பா.ஜ.க., ஒன்றிய அரசு கொடுக்கிற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆர்.எஸ்.எஸ்-ன் பிரசாகராக தமிழக ஆளுநர் இன்று இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ஆரிய இனம் குறித்து பேசாமல் இருப்பதற்காக திராவிட இனம் ஒன்று இல்லை என்று பேசி வருகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்று கொண்ட உறுதி மொழியை மதிப்பவராக, நடைமுறைப்படுத்துபவராக அவர் இல்லை. இங்கிருக்கும் ஜனநாயகத்தை அழித்துவிட்டு, அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுபவராக உள்ளார். எழுவர் விடுதலை குறித்தும், இன்னும் பல மசோதாங்களின் வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தால் பல முறை கண்டனத்துக்குள்ளானவர்தான் இப்போது, ‘ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா... இல்லையா... என்பதை நீதித்துறை முடிவு செய்யும்’ என்று பேசி இருக்கிறார். மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படக் கூடிய அர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு வேண்டுமானால் இந்த பொம்மை கிளுகிளுப்பை உருவாக்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு உதாவாத பொம்மையாகதான் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன” என்கிறார் காட்டமாக.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “ஆளுநர் ஆர்.என்.ரவியை எந்த இடத்திலும் தி.மு.க ரப்பர் ஸ்டாம்ப் என்று சொன்னதில்லை. மாறாக அரசியல் அமைப்பு சட்டம் உங்களுக்கு என்ன சொல்லியிருக்கிறதோ அதற்குள் நடந்து கொள்ளுங்கள் என்பதுதான் தி.மு.க-வின் கோரிக்கை. எந்த இடத்திலும் அரசியல் பேசுவதற்கு அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கிற கோட்பாடுகளை பேசுவதற்கு ஒரு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த அரசாங்கம் அரசியல் அமைப்பு சட்டப்படி நடக்கிறதா, இந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லதா என்று பார்ப்பதற்கு ஆளுநரை வைத்திருக்கிறது. அதை செய்யுங்கள். ஒரு வேளை அரசியல் பேச வேண்டுமென்று வந்தால், ஆளுநர் பதவி ராஜினாமா செய்துவிட்டு பேசுங்கள்.

எந்த மாநிலத்துக்கு ஆளுநராக வருகிறீர்களோ அந்த மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற அந்தஸ்து கொடுக்கப்படும் போது அதற்கு மாறாக வேறொரு பார்வை பாக்கக் கூடாது. அதனால்தான், ‘இந்த ஆளுநரை, ஆளுநராக மாற்றுங்கள். இல்லை வேறொரு ஆளுநரை தாருங்கள்...’ என்று தி.மு.க சொல்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆன்லைன் ரம்மி சட்டமன்றத்தில் நிறைவேற்றி வைத்தோம், இன்றுவரை அதற்கான ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு, ‘ஆன்லைன் ரம்மிக்கும் நீங்கள் சார்ந்திருந்த கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக...’ சமூகவலைத்தளங்களில் எழுதி வருவது ஒரு விதத்தில் உண்மையாகுமில்லையா. நாங்கள் என்ன நிறைவேற்றுகிறோமோ அதை நிறைவேற்றி கொடுங்கள். இதற்கு முன்பெல்லாம் ஆட்சி அமைக்கும் போதும் அல்லது ஆட்சியை கலைக்கும் போதும் ஆளுநரின் நடவடிக்கைகள் இருக்கும். ஆனால், பா.ஜ.க அரசாங்கம் இரண்டாவது முறையாக வந்த பிறகு அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி கவலைப்பட்டாமல், தான்தோன்றித்தனமாக ஓர் அரசாங்கத்தை நடத்த நினைத்தால் அது நாட்டுக்கு நல்லதில்லை” என்றார்.