Published:Updated:

`நான் அப்படிச் சொல்லவில்லை..!’ - ஐ.நா வாக்கெடுப்பு விவகாரத்தில் பின்வாங்கினாரா மம்தா பானர்ஜி?

பிரதமர் மோடி, பா.ஜ.க-வினுடைய பிரதமர் அல்ல. நாட்டினுடைய பிரதமர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மோடி மற்றும் அமித் ஷா
மோடி மற்றும் அமித் ஷா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். தொடர்ந்து தன்னுடய எதிர்ப்புகளையும் பதிவு செய்து வந்தவர், ``பா.ஜ.க-வுக்குத் தைரியம் இருந்தால், ஐ.நா-வின் கண்காணிப்பில் குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி மீதான வாக்கெடுப்பை நடத்தட்டும். பெருவாரியான வாக்குகளைப் பா.ஜ.க பெறவில்லை என்றால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும்” என்று சவால் விடுத்திருந்தார்.

மேலும், ``பிரதமர் மோடி, பா.ஜ.க-வினுடைய பிரதமர் அல்ல. நாட்டினுடைய பிரதமர். பிரச்னைகளில் தலையிட்டு அமைதியை கொண்டுவர நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருவாரியான மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும்” என்று பேசியிருந்தார்.

சயந்தன் பாசு
சயந்தன் பாசு
Twitter

மம்தாவின் கருத்துக்கு பா.ஜ.க-வினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க பொதுச் செயலாளர் சயந்தன் பாசு, ``முதல்வர்தான் அமைதியின்மையை உருவாக்குகிறார். அவர், நாட்டைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். பிரதமர் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறார். மேற்கு வங்காளத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் இதுதொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன” என்று விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ``மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து இந்திய நாடாளுமன்றத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இந்த நிலையில், மம்தா பானர்ஜி, ``நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் வாக்கெடுப்பு குறித்து கூறவில்லை. மனித உரிமைகள் ஆணையத்தினர் போன்றவர்களின் மேற்பார்வையில் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்பதையே கூற வந்தேன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் மீதும் என்.ஆர்.சி-யின் மீதும் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று கூறியுள்ளார்.

மேலும்,``பா.ஜ.க-வின் கருத்துக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. ஜீரணித்துக்கொள்ள முடியாத கருத்துகளை நாம் கூறினால், தேசத்துரோகிகள் என்று கூறுவார்கள்” என்று மம்தா விமர்சித்துள்ளார்.