Published:Updated:

`என் கலாசாரம் உயிரைக் கொல்ல கற்பிக்கவில்லை' - #ManVsWild நிகழ்ச்சியில் மோடி!

மலையரசு

இந்த நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தனது இளமைப் பருவம்... இயற்கை மீதான தனது ஆர்வம்குறித்து மோடி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மோடி
மோடி

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடுமையான சூழல்களில் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ், எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்னும் சர்வைவல் சீரிஸ்தான், மேன் வெர்சஸ் வைல்டு. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளைத் தொடர்புபடுத்தி, பியர் க்ரில்ஸை வைத்து மீம்ஸ்களே வெளியாகும். அந்த அளவுக்கு `மேன் வெர்சஸ் வைல்டு’ பிரபலம். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடு ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோ ஒன்றை சர்வதேசப் புலிகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டது, டிஸ்கவரி சேனல்.

மோடி - பியர் க்ரில்ஸ்
மோடி - பியர் க்ரில்ஸ்

இந்த ப்ரொமோ வெளியானதும், மோடிக்கு எதிராகவும் ஆதரவாகவும் கமென்ட்ஸ் இணையத்தை ஆக்கிரமித்தன. உத்தரகாண்ட்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த எபிசோடு படமாக்கப்பட்ட நிகழ்ச்சிகுறித்து சர்ச்சைகள் எழுந்தன. "புல்வாமா தாக்குதலின்போது, இந்த ஷூட்டிங்கில்தான் பிரதமர் பிஸியாக இருந்தாரா?" எனக் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், தனது இளமைப் பருவம்... இயற்கை மீதான தனது ஆர்வம் குறித்து மோடி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு காட்சியில், புலியிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு ஈட்டியைத் தயார்செய்து மோடியிடம் கொடுக்கும் பியர் க்ரில்ஸ், புலி வந்தால் எப்படி பாதுகாப்பது என்பதையும் சொல்லிக்கொடுப்பார்.

காடுகளில் ஏன் இந்தப் பயணம்? -  `மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்கு மோடி ஒப்புக்கொண்ட பின்னணி

அதற்குப் பதிலளித்த மோடி, ``ஆனால் என் கலாசாரம் ஒரு உயிரைக் கொல்வதற்கு எனக்குக் கற்பிக்கவில்லை. நீங்கள் என்னிடம் கேட்டதால் நான் ஈட்டியை வைத்திருப்பேன்'' என்று கூறுகிறார். அதேபோல், ``இந்த இடம் ஆபத்தானது. இது, புலிகள், முதலைகள், வனவிலங்குகள் நிறைய இருக்கும் பகுதி. இந்த இடத்தை நாம் ஆபத்து மண்டலமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் இயற்கையை எதிர்த்துச் செல்லும்போதுதான் எல்லாம் ஆபத்தானது; மனிதர்களும் ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். மறுபுறம் நாம் இயற்கையுடன் ஒத்துழைத்தால், இயற்கையும் ஒத்துழைக்கும்" என்று பியர் க்ரில்ஸ் கூறியுள்ளார்.

மோடி - பியர் க்ரில்ஸ்
மோடி - பியர் க்ரில்ஸ்

மேலும், இந்தியாவின் தூய்மைகுறித்துப் பேசிய பியர் க்ரில்ஸுக்கு பதிலளித்த மோடி, ``வெளியில் இருந்து யாரோ என் இந்தியாவை சுத்தம்செய்ய முடியாது; இந்திய மக்கள் இந்தியாவை சுத்தமாக்குகிறார்கள். தனிப்பட்ட சுகாதாரம் இந்திய மக்களின் கலாசாரத்தில் உள்ளது. சமூக சுகாதாரத்தின் பழக்கத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி அதில் நிறைய வேலைகளைச் செய்துள்ளார். சமீபத்தில், இதில் நல்ல வெற்றியைப் பெறுகிறோம். இந்தியா மிக விரைவில் இதில் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறுகிறார். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.