குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதை முன்னிட்டு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பா.ஜ.க-வும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகின்றன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜே.டி.யூ மூத்த தலைவரும், பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஷ்ரவன் குமார், ``குடியரசுத் தலைவராக இருப்பதற்கு தேவையான அனைத்து திறன்களும் நிதிஷ் குமாரிடம் இருக்கின்றன" என அண்மையில் பேசியிருந்தார். அதேபோல, ``நிதிஷ் குமார் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர், அதனால் அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" எனப் பலரும் பேசிவருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ``இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராகும் போட்டியில் நான் இல்லை. நான் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. இது போன்ற தகவல்கள் ஆதாரமற்றவை, வெறும் ஊகங்கள்தான்'' என்று கூறினார்.
இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக என்.சி.பி தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் நிறுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது.
