Published:Updated:

Live Updates: `ராகுல் தண்டிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது!' - முதல்வர் ஸ்டாலின்

ராகுல் காந்தி, ஸ்டாலின்
Live Update
ராகுல் காந்தி, ஸ்டாலின்

23-03-2023 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

23 Mar 2023 8 PM

`ராகுல் தண்டிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது!' - முதல்வர் ஸ்டாலின்

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``எதிர்க்கட்சிகளைக் குறிவைக்கும் பா.ஜ.க, தற்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இத்தகைய அட்டூழியங்கள் ஒரு முடிவுக்கு வரும்.

ராகுல் காந்தி, ஸ்டாலின்
ராகுல் காந்தி, ஸ்டாலின்

சகோதரர் ராகுல் காந்தியுடன் பேசினேன். இறுதியில் நீதி நிச்சயம் வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவர், தான் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என விளக்கமளித்த பிறகும், தண்டிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

23 Mar 2023 6 PM

உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார் ஆளுநர் ரவி!

Live Updates: `ராகுல் தண்டிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது!' - முதல்வர் ஸ்டாலின்

டெல்லி சென்றிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார்.

23 Mar 2023 5 PM

யாஷிகா ஆனந்தைப் பிடிக்க பிடிவாரன்ட்!

நடிகை யாஷிகா ஆனந்த் 2021-ம் ஆண்டு தன்னுடைய தோழி வள்ளி பவானி செட்டி என்பவருடன், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்த் வந்த கார் விபத்தில் சிக்கியது. இதில், யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் உயிர்த் தப்பினார். அதே நேரம் அவரின் தோழி உயிரிழந்தார்.

யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்

இது தொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த 21-ம் தேதி ஆஜராகுமாறு யாஷிகா ஆனந்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், யாஷிகா ஆனந்த் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், நீதிமன்றம் தற்போது யாஷிகா ஆனந்தைப் பிடிப்பதற்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது.

23 Mar 2023 4 PM

கூர்நோக்கு இல்ல சிறுவன் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Live Updates: `ராகுல் தண்டிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது!' - முதல்வர் ஸ்டாலின்
23 Mar 2023 3 PM

``உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்”

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, அவதூறு வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனை சூரத் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியின் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி
மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி

இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "மோடி அரசு, அரசியல்ரீதியாகத் திவாலாகிவிட்டது. அதனால்தான் அமலாக்கப் பிரிவு, போலீஸ், சி.பி.ஐ என வழக்குகளை அனுப்புகிறது. இது கோழைத்தனம். சர்வாதிகாரி பா.ஜ.க அரசை ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி தத்தளிக்க வைப்பதாலும், அதானி விவகாரத்தில் கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்கக் கோரி அவர்களின் மோசமான செயல்களை அம்பலப்படுத்துவதாலும், ஏவிவிடப்படுகிறது. நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

23 Mar 2023 1 PM

`மோடி’ பெயர் குறித்து சர்ச்சைக் கருத்து: `ராகுல் காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை’ - சூரத் நீதிமன்றம்.... முழுவிவரம்

23 Mar 2023 1 PM

`அ.தி.மு.க’ எனக் குறிப்பிட்ட பன்னீர்; கொதித்த எடப்பாடி & கோ 

தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக இது தொடர்பாகப் பேச கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மசோதாவுக்கு ஆதரவு” எனத் தெரிவித்தார். இதை எதிர்த்து அ.தி.மு.க-வினர் கோஷமிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், ``ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்... இது திட்டமிட்டு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுவதுபோல் உள்ளது” என அமளியில் ஈடுபட்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ``உங்கள் விவகாரத்தை நாங்கள் பேசவில்லை. அது எங்களின் நோக்கமல்ல. இது முக்கியமான மசோதா என்பதால், ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு கருத்துச் சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்குத் தவறான வாதங்களைக் கற்பிக்க வேண்டாம்” என்றார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை, `எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என நான் குறிப்பிடவில்லை. மாண்புமிகு உறுப்பினர் என்றுதான் குறிப்பிட்டேன்’ என அவைத்தலைவர் விளக்கமளித்தார். எனினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

23 Mar 2023 11 AM

மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மனசாட்சியை உறங்கவைத்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. அரசியல் கொள்கை மாறுபட்டாலும், இதயம் எல்லோருக்கும் இருக்கிறது என்னும் அடிப்படையிலும், மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் யாருடைய உயிரும் போகக் கூடாது என்பதாலும் அனைவரும் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்” என மீண்டும் ஆன்லைன் தடைச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ``மாநில சட்டசபை இயற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும் ஆன்லைன் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவதைக் கடமை என எண்ணாமல் திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

23 Mar 2023 12 PM

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம்

`மோடி’ என்ற பெயர் குறித்து அவதூறு பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிற நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

23 Mar 2023 10 AM

சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுக்கு அ.தி.மு.க எதிர்ப்பு!

தமிழக சட்டமன்றத்தில் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் ஆகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராமுக்கும் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை

தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நடந்த கொடூரக் கொலை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். `அது குறித்து நாளை விவாதிக்கப்படும்’ என்று அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

எனினும், முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு இன்றே பதிலளித்தார்.

``கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆணவக்கொலையில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் உட்பட மூவர் சேர்ந்து ஜெகனை வெட்டியிருக்கின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

காவல்துறை விசாரணையில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் கொலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டதற்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடரும் பட்டாசு ஆலை விபத்து:

காஞ்சிபுரத்தில் நடந்த பட்டாசு தொழிற்சாலையில் விபத்து குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சட்டமன்ற நிகழ்வுகளை காண வந்த சென்னை SIET கல்லூரி மாணவிகள்

23 Mar 2023 7 AM

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு

கேரளாவில் 1924-ம் ஆண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்றிருந்த தடைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சீர்திருத்தவாதிகள், கைதுசெய்யப்பட்டனர். அந்தக் கைது நடவடிக்கை காரணமாக போராட்டம் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த பெரியார் வைக்கம் பகுதிக்குச் சென்று போராடினார். தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ், சுயமரியாதை இயக்க வீரர்களையும் அழைத்துச் சென்று போராடினார்.

NowAtVikatan
NowAtVikatan

அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அதன் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. கேரளா அரசு சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 603 நாள்கள் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விழாவை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்தக் கடிதத்தை கேரளா அமைச்சர் ஷாஜி செரியன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

23 Mar 2023 10 AM

மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அரசாணை 293-ஐ உடனே அமல்படுத்திட வலியுறுத்தி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம். இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், சென்னை

23 Mar 2023 7 AM

தமிழ்நாடு மீனவர்கள் 12 பேர் கைது!

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 12 பேரைக் கைதுசெய்தது இலங்கைக் கடற்படை.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களிக் கைதுசெய்தது இலங்கைக் கடற்படை. மீன்பிடிக்கப் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்