Published:Updated:

`NPR' - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்?

NPR
NPR

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு இன்று நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு இன்று நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

NPR-தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுவீச்சில் செயலுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றுதான் இது. இதற்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு சொல்லிவருகிறது. ஆனால், குடியுரிமைச் சட்டத்தின் மீது எழுந்துள்ள விமர்சனங்களால் இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்கிற இந்தத் திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே சோதனை முயற்சியாகத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் நீலகிரி, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பணிகள் நடந்துவருகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றே இந்தப் பதிவும் நடந்துவருகிறது. ஆனால், இதில் கூடுதலாக ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்கச் சொல்லியுள்ளார்கள். மேலும், பெற்றோர் பிறந்த இடங்களையும் இந்த விவரத்தில் இணைக்க வேண்டும். இந்தப் பதிவேட்டு முறையால் நாட்டில் வசிக்கும் மக்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள முடியும் என்று மத்திய அரசு விளக்கம் சொல்லியுள்ளது.

அமித்ஷா - மோடி
அமித்ஷா - மோடி

வீடு விடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றே இந்தப் பதிவேட்டையும் ஊழியர்கள் பதிவு செய்ய இருக்கிறார்கள். இந்திய குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்பது மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு, ஊரகப் பதிவேடு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படும். ஊரகப் பதிவேட்டின் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் (NPR) சரிபார்க்கப்படும். சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்வரை, 'சந்தேகத்துக்குரிய குடியுரிமை' என்ற புதிய வகை உருவாக்கப்படும். இந்தப் புதிய வகையினர் இறுதிப் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள, தாங்கள் இந்திய குடிமக்கள்தாம் என நிரூபிக்க வேண்டும்.

இந்தநிலையில் NPR மற்றும் NRC இரண்டுமே வேண்டாம் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இரண்டும் பெயரளவில் தான் வேறுவேறு, ஆனால் ஒரே நோக்கத்தில்தான் இது கொண்டு வரப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.

NPR
NPR

இந்தநிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை விரைந்து கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 45,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது மத்திய அரசு. இன்று மாலை டெல்லியில் மத்திய அரசின் கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஒப்புதலை கேபினட் குழு வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகு, இந்தத் திட்டத்துக்கான செலவு தொகைக்கும் ஒப்புதல் வழங்க உள்ளது என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு