Published:Updated:

`அஸ்ஸாம்போல் நாடு முழுவதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு!' - உள்துறை அமைச்சர் அமித் ஷா

`அஸ்ஸாம் மாநிலத்தைப் போன்று நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

அமித்ஷா
அமித்ஷா ( ANI )

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பிவருகின்றன. அரசு தரப்பும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றத் தயார் நிலையில் உள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர்

நாடாளுமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசினார். அப்போது காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்த காங்கிரஸின் கேள்விக்கு, ``காஷ்மீரின் நிலை தற்போது சீராகிவிட்டது. அங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. காஷ்மீர் முழுவதும் அனைத்து நேரங்களிலும் மருந்துகள், பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவை கிடைக்கின்றன.

வங்கிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் சீராக நடைபெற்று வருகின்றன. ஆப்பிள் உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது. தகவல் தொடர்பு அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆகஸ்ட் 5-க்குப் பிறகு (காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள்) காஷ்மீரில் எந்த ஒரு குடிமகனும் காவலர்களால் கொல்லப்படவில்லை. இதே கூட்டத்தில் இருப்பவர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், அப்படி எந்தச் சம்பவமும் நிகழவில்லை என்பதை மகிழ்ச்சியாகக் கூறுகிறேன். கல்வீச்சு சம்பவங்களும் குறைந்துவிட்டன” எனத் தெரிவித்தார்.

என்.ஆர்.சி
என்.ஆர்.சி

அமித் ஷா பேசிக்கொண்டிருக்கும்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சு அப்படியே தேசிய குடிமக்கள் பதிவேடு பக்கம் திரும்பியது. அதைப் பற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த உள்துறை அமைச்சர், ``இந்து, பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின், கிறிஸ்துவர்கள் போன்ற அனைவரும் கட்டாயம் குடியுரிமை பெற வேண்டும்.

இந்தியா முழுமைக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையா... சாத்தியமா?

அதனால்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதத்தின் அடிப்படையில் இவர்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டைப் போக்க இந்தியக் குடியுரிமை பெறுவது அவசியமாகிறது.

அமித்ஷா
அமித்ஷா
ANI

இதற்காக, என்.ஆர்.சி-யில் வேறு எந்த மதத்தினரும் இடம் பெறமாட்டார்கள் என்பது அர்த்தம் இல்லை. மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இடம் பெறுவர். தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும். அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, என்.ஆர்.சி-யில் பெயர் இல்லாதவர்கள் நேரடியாக தீர்ப்பாயத்தில் முறையிட அனுமதி உண்டு. அஸ்ஸாம் முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.