Published:Updated:

``நம்பவைத்து கழுத்தை அறுக்கும் திமுக!"- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சீமான்

சீமான்

``ஆட்சிக்கு வந்தபபிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றிவருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகம்." - சீமான்

``நம்பவைத்து கழுத்தை அறுக்கும் திமுக!"- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சீமான்

``ஆட்சிக்கு வந்தபபிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றிவருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகம்." - சீமான்

Published:Updated:
சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’' என வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தி.மு.க அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2003-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அ.தி.மு.க அரசு அறிவித்தது.

சீமான்
சீமான்

ஆனால் தொடக்கம் முதலே இந்தத் திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த 2016-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர்குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழு அமைக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குள் தன் அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுக்கால தாமதத்துக்குப் பிறகு வல்லுநர்குழு தனது ஆய்வு அறிக்கையை 2018-ம் ஆண்டுதான் தமிழ்நாடு அரசிடம் அளித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அன்றைய அ.தி.மு.க அரசு, வல்லுநர்குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் வல்லுநர்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்பவைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க-வின் ‘திராவிட மாடல்’ அரசு. ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றிவருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகம். இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையைக் கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் ஆட்சி, அதிகார பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடை நீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்துவருவது பெருங்கொடுமை. ஆகவே, தி.மு.க அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக்காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.