Published:Updated:

``ஏதோ தவறு இருப்பதுபோலத் தெரிகிறது; வருமான வரித்துறையினரின் சோதனை ஒரு கண்துடைப்பு" - சீமான்

சீமான்

``அமலாக்கத்துறைக்கு மட்டும்தான் பயப்படுகிறார்கள். வருமான வரி சோதனையெல்லாம் கண்துடைப்புதான்." - சீமான்

Published:Updated:

``ஏதோ தவறு இருப்பதுபோலத் தெரிகிறது; வருமான வரித்துறையினரின் சோதனை ஒரு கண்துடைப்பு" - சீமான்

``அமலாக்கத்துறைக்கு மட்டும்தான் பயப்படுகிறார்கள். வருமான வரி சோதனையெல்லாம் கண்துடைப்புதான்." - சீமான்

சீமான்

சென்னை, கரூர் உட்பட அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இதில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை ஜாக்கியால் குத்தி உடைத்து, சேதப்படுத்தினர். இதனால் அந்த இடமே பரபரப்பானது.

Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு
Senthil Balaji - செந்தில் பாலாஜி - ஐ.டி ரெய்டு

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வருமான வரித்துறையின் இந்தச் சோதனையை கண்துடைப்பு என விமர்சித்திருக்கிறார். முன்னதாக விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ரா.நல்லுகண்ணுவை, சென்னையில் இன்று நேரில் சந்தித்தார் சீமான். இந்தச் சந்திப்புக்கு பிறகு சீமான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த சீமான், ``எல்லாவற்றிலும் சரியாக இருந்தால், சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். எந்தக் குற்றமும் இல்லை என்றால் எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. இது தடுக்கப்படும்போது அங்கு ஏதோ தவறு இருப்பதுபோலத் தெரிகிறது. வீட்டுக்குள் ஒன்றும் இல்லை என்றால், அதைத் திறந்து காட்டிவிடவேண்டியதுதானே... அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது தி.மு.க-மீது ஊழல் வழக்குகளைப் போட்டார்கள். தி.மு.க வந்தவுடன் வேலுமணி, தங்கமணி வீடுகளில் அதைத்தான் இவர்கள் செய்தார்கள்.

சீமான்
சீமான்
கோப்புப் படம்

காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்து பேசுகிற அவர்களுக்கு இதே நெருக்கடிதான். இப்போது தேர்தல் நெருங்கும்போது பா.ஜ.க எல்லோரையும் அச்சுறுத்துகிறது. லைக்கா மீது சோதனை நடத்தினார்கள், இன்றைக்கு செந்தில் பாலாஜி, இன்னும் எத்தனை வீடுகள் இருக்கிறதோ... வருமான வரி சோதனையில் என்ன சோதனை செய்யப்பட்டது, எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது, எவ்வளவு சொத்து மதிப்புடைய ஆவணங்கள் எடுக்கப்பட்டன என்பதைச் சோதனைக்கு வந்தவர்கள் யாராவது வெளியிட்டதைப் பார்த்ததுண்டா... அங்கே பேரம் நடக்கிறது.

ஆயிரம் கோடி என்றால் 10 சதவிகிதம் பெனால்டி, எங்களுக்கு இவ்வளவு... இதெல்லாம் நடக்கிறதா இல்லையா... எனக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சோதனை செய்திருக்கிறார்கள். எல்லோருமே என்னிடம் இதைத்தான் சொல்கிறார்கள். இதுதான் வருமான வரி சோதனையா... அமலாக்கத்துறைக்கு மட்டும்தான் பயப்படுகிறார்கள். வருமான வரி சோதனையெல்லாம் கண்துடைப்புதான்.

சீமான்
சீமான்

விஜய் வீட்டில்கூட இரண்டு நாள் சோதனை செய்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறது என்றார்கள். சரியாக இருக்கிறது என்று தெரியாமல் எதற்கு அதிகாரியாக இருக்கிறார்கள்... எதற்கு வருமான வரி தலைமை அலுவலகம் இருக்கிறது?" என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்படுவது குறித்து பேசிய சீமான், ``செங்கோலை அங்கு வைப்பதால் எங்களுக்கு என்ன வந்துவிடப் போகிறது... சோழர்கள் முடியாட்சியில் குடியரசு நடத்தினார்கள். இவர்கள் (பா.ஜ.க) குடியாட்சியில் முடியாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.