Published:Updated:

நுபுர் ஷர்மா விவகாரம்: மோடிக்கும் பாஜக-வுக்கும் பெரும் அவப்பெயரை தந்துவிட்டதா உச்ச நீதிமன்ற கண்டனம்?

நுபுர் ஷர்மா விவகாரம்

``நுபுர் ஷர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு" என உச்ச நீதிமன்றம் கண்டனம். தெரிவித்திருக்கிறது.

நுபுர் ஷர்மா விவகாரம்: மோடிக்கும் பாஜக-வுக்கும் பெரும் அவப்பெயரை தந்துவிட்டதா உச்ச நீதிமன்ற கண்டனம்?

``நுபுர் ஷர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு" என உச்ச நீதிமன்றம் கண்டனம். தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
நுபுர் ஷர்மா விவகாரம்

``நுபுர் ஷர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. நாட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பு" எனக் கடைசியாக உச்ச நீதிமன்றமே நுபுர் ஷர்மாவுக்குக் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு, "அவர் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம், மத்திய பா.ஜ.க அரசுக்கு மேலும் அவப்பெயர் ஏற்பட்டு, கடும் நெருக்கடியும் உருவாகியிருக்கிறது.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருந்தார். அந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் கொதிப்படையச் செய்தது. நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்வினையாக, 15-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்தன. சர்வதேசப் பிரச்னையாக இந்த விவகாரம் வெடிக்கவும், நுபுர் ஷர்மாவை தற்காலிகமாகக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது பா.ஜ.க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், `இடைநீக்கம் மட்டும் போதாது; நுபுர் ஷர்மா மீது சட்ட நடவடிக்கை, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்' என பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டங்களிலும், பேரணியிலும் ஈடுபட்டனர். குறிப்பாக, உ.பி போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களைத் தடியடி நடத்திக் கலைத்தும், அவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தும் அரங்கேற்றப்பட்ட தொடர் சம்பவங்கள் இந்திய மக்கள் மத்தியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இடிக்கப்பட்ட அஃப்ரீன் ஃபாத்திமா வீடு
இடிக்கப்பட்ட அஃப்ரீன் ஃபாத்திமா வீடு

தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள காவல் நிலையங்களில் நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உலக நாடுகளின் எதிர்ப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் கண்டனங்கள், இஸ்லாமியர்களின் போராட்டங்கள் என அத்தனைக்குப் பிறகும் நுபுர் ஷர்மா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, அவருக்கு வந்த கொலை மிரட்டல்கள் காரணமாக வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

ஆல்ட் நியூஸ் - முகமது ஜுபைர்
ஆல்ட் நியூஸ் - முகமது ஜுபைர்

இந்த நிலையில், நுபுர் ஷர்மாவின் நபிகள் குறித்த பேச்சை பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிக்கையாளருமான முகமது ஜுபைர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் போட்ட ஒரு பதிவுக்காகக் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டார். இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என அப்போதே விமர்சிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை நடத்திவந்த கன்ஹையா லால் என்பவரை, இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சேர்ந்து தலையைத் துண்டித்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது. இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தை பா.ஜ.க தலைவர்கள் முதல் உலக நாடுகளின் தலைவர்கள் வரை கடுமையாகக் கண்டித்தனர். அதேசமயம், குற்றவாளிகளில் ஒருவர் பா.ஜ.க-வுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என இந்தியா டுடே பத்திரிகை செய்தி வெளியிட, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பிவருகின்றன.

உதய்பூர் படுகொலை
உதய்பூர் படுகொலை

இந்தச் சூழ்நிலையில், நுபுர் ஷர்மாவுக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்டிருக்கும் வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நுபுர் ஷர்மா கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியிருக்கிறது. ஆனால், அதற்காகவெல்லாம் ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன் மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இது போன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். அனைத்து மக்களும் மற்ற மதத்தினருடைய நம்பிக்கைகளிலும், மற்ற விவகாரங்களிலும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சூழலில், நுபுர் ஷர்மா இப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்" என கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. மேலும், `` நுபுர் ஷர்மா ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ``நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழலுக்கு நுபுர் ஷர்மா என்ற ஒரு தனிநபர் மட்டும் காரணமல்ல. மத்திய அரசும் காரணம். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க என அனைத்தும் சேர்ந்தே இதற்குக் காரணம். கோபமும் வெறுப்பும் மிகுந்த இந்தச் சூழலை எல்லோரும் சேர்ந்தே உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழல் தேசத்தின் நலனுக்கு எதிரானது, நமது மக்களுக்கு எதிரானது" என கருத்து தெரிவித்திருகிறார். இதேபோல பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி - மோடி

உலக நாடுகள், எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றம் வரை கடுமையாகக் கண்டிக்கப்பட்டுவரும் இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதும், இதுவரையில் நுபுர் ஷர்மா கைதுசெய்யப்படவில்லை!