Published:Updated:

அப்பாவுக்கே சவால் விடும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார்!

பன்னீரும் ரவீந்திரநாத்குமாரும்
பன்னீரும் ரவீந்திரநாத்குமாரும் ( Photo: Vikatan )

பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மோடியின் படம் இடம்பெற்றிருக்கிறது. ``மோடி என்ன அ.தி.மு.க-வின் தலைவரா?'' என சர்ச்சை எழுந்திருக்கிறது.

``எனது ஆயுள் முழுவதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான். நான், பா.ஜ.க-வுக்கு செல்லப் போகிறேன் என்பது வடிகட்டிய பொய்'' - கடந்த மே 2-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில்தான் இப்படிச் சொல்லியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

ரவீந்திரநாத்குமார்
ரவீந்திரநாத்குமார்

தேனி தொகுதியின் எம்.பி-யும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார்தான், நாடாளுமன்ற மக்களவையின் ஒரே அ.தி.மு.க எம்.பி. கட்சி ஒரு ரூட்டில் பயணித்தால் இவர் வேறு பாதையில் போவார். அதற்கு லேட்டஸ்ட் சாம்பிள், முத்தலாக் தடை மசோதா. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியவர் அன்வர்ராஜா. ஆனால், அடுத்த 211 நாள்களில் ரவீந்திரநாத் குமார் அதை ஆதரித்துப் பேசி கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார். பி.ஜே.பி மீதான பாசத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திவருகிறார் ரவீந்திரநாத்குமார்.

வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் பிறந்தநாளுக்கு அ.தி.மு.க -விலிருந்து யாரும் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், ரவீந்திரநாத்குமார் மட்டும் ஸ்பெஷலாக வாழ்த்து சொன்னார். பட்டேலின் பிறந்தநாளுக்கு, `565 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து அகண்ட பாரதத்தின் அனைத்து மக்களுக்கும் சம ஸ்தானத்தை உருவாக்கிக் கொடுத்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் 144-வது பிறந்த நாளைப் போற்றி வணங்குகிறேன்' என வாழ்த்துப் பா பாடியிருந்தார்.

அத்வானி பிறந்தநாளுக்கு வெளியிட்ட வாழ்த்து...
அத்வானி பிறந்தநாளுக்கு வெளியிட்ட வாழ்த்து...

மோடி, அமித்ஷா ஆகியோரின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொல்லியிருந்தார். மத்திய அமைச்சர்களின் பிறந்தநாளைக்கூட ஞாபகம் வைத்து வாழ்த்து சொல்லத் தவறுவதில்லை. தொடர்ந்து, `பா.ஜ.க போற்றி' சொல்லிக்கொண்டிருக்கும் ரவீந்திரநாத்குமார், மோடியின் சாதனைகளையும் தவறாமல் மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

வாஜ்பாய் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்ட வாழ்த்து
வாஜ்பாய் பிறந்தநாளுக்கு வெளியிடப்பட்ட வாழ்த்து
`யார் சொல்லிப்பேசினார் ரவீந்திரநாத்?’ - அ.தி.மு.க-வில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

மாமல்லபுர கடற்கரையில் குப்பைகளை மோடி எடுத்தபோது, ``நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி" எனும் பொன்மனம் படைத்த பிரதமரின் பொற்கரங்களால் கங்கை மட்டுமல்ல வங்கக் கடற்கரையும் தூய்மை ஆனது. பாரே வியக்கும் பாரதப் பிரதமரின் செயல்களைப் போற்றி வணங்குகிறேன்' எனச் சொல்லியிருந்தார்.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற விவாதங்களில், கேள்வி நேரத்தில் பங்கேற்றால் அது தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு அனுப்பிவருகிறார் ரவீந்திரநாத்குமார். அப்படி அனுப்பப்படும் செய்திக் குறிப்பில், பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருக்கிறது.

மோடி படத்துடன் வெளியான செய்திக் குறிப்பு...
மோடி படத்துடன் வெளியான செய்திக் குறிப்பு...

செய்திக்குறிப்பில் அ.தி.மு.க-வின் கொடி வண்ணத்தை பார்டர் கட்டி, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்களைப் போட்டிருக்கிறார். ``முழுக்க முழுக்க கட்சி சார்பாக இருக்கும் அந்த செய்திக் குறிப்பில் மோடியின் போட்டோ எதற்கு? ''பி.ஜே.பி விசுவாசத்துக்கு அளவே இல்லையா'' எனக் கிண்டல் அடிக்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

நாடாளுமன்றத்தில் நேற்று, நேரமில்லா நேரத்தில் ``தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கவேண்டும்'' எனக் கேள்வி எழுப்பினார். அதுதொடர்பான செய்தியை ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்தார். அப்படி அனுப்பிவைக்கப்பட்ட செய்திக் குறிப்பில்தான் மோடியின் படம் இடம்பெற்றிருக்கிறது.

ரவீந்திரநாத்குமார்
ரவீந்திரநாத்குமார்
Photo: Vikatan

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர் எழுப்பிய கேள்வி தொடர்பான விஷயத்தில், எதற்கு பிரதமரின் படம்? அப்படியே படம் போடுவதாக இருந்தால் நாடாளுமன்றத்தின் படத்தை வைத்திருக்கலாம். ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்தால் மோடியின் படத்தைப் போடத் துணிச்சல் வருமா? தேர்தல் காலத்தில்தான் கூட்டணிக் கட்சித்தலைவர்களின் படங்களை வைப்பார்கள். இது தேர்தல் நேரமும் அல்ல. நாடாளுமன்றம் தொடர்பான செய்தியில்கூட மோடி பாசத்தை ரவீந்திரநாத்குமார் வெளிப்படுத்துவது எதற்கு என்பது அவருக்கே வெளிச்சம்.

``பன்னீர்செல்வம் பி.ஜே.பி-யில் சேரப்போகிறார், கவர்னர் ஆகப் போகிறார்'' எனச் செய்திகள் கிளம்பிய நேரத்தில், மே 2-ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையை மீண்டும் படிப்போம்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்
Photo: Vikatan
``அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியது!” - தேனியில் ஓ.பி.எஸ்

``அ.தி.மு.க-வை விட்டு நான் பா.ஜ.க-வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாகப் பரப்பப்படுகிறது. சில குள்ள நரிகள் என்மீது வதந்திகளைப் பரப்பி, என்னையும் என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து மிகுந்த வேதனைகொள்கிறேன். என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க-வின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாகக் கொண்டு வாழும் இந்த எளியவனைக் கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்குப் போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி, அதை ஊடகங்கள் யாருக்கோ வால் பிடித்து புரளியால் குரளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.''

இதுதான் பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை. ஆனால், ரவீந்திரநாத்குமாரின் செயல்பாடுகள், அப்பாவின் அறிக்கைக்கே சவால் விடுவதாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு