Published:Updated:

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலிருந்து ஆத்தூர் தொகுதிக்கு மாற்றப்பட்ட நத்தம் விசுவநாதன் படுதோல்வியடைந்தார்.

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலிருந்து ஆத்தூர் தொகுதிக்கு மாற்றப்பட்ட நத்தம் விசுவநாதன் படுதோல்வியடைந்தார்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

மூன்று முறை முதல்வராகவும், ஒன்றரைக் கோடி தொண்டர்களைக்கொண்ட அ.தி.மு.க-வின் தலைமை பீடத்தை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று ஒரு கோஷ்டியின் தலைவராகியிருக்கிறார். எப்படி நிகழ்ந்தது இந்தச் சரிவு?!

இரண்டாம் முறை முதல்வர்... ரசிக்காத சசிகலா...

அ.தி.மு.க அதிகார மட்டத்தின் முக்கியப் புள்ளியான டி.டி.வி.தினகரன் 1999-ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது வெற்றிக்காக உழைத்து, சசிகலா குடும்பத்தின் நற்பெயரைச் சம்பாதித்தார். இங்கிருந்துதான் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஏறுமுகம் தொடங்கியது.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓ.பி.எஸ்-ஸுக்கு சீட் கிடைத்து, வெற்றியும் பெற்றார். ஆனால், டான்சி வழக்கால் பதவியைத் தொடர முடியாத ஜெயலலிதா, ஓ.பி.எஸ்-ஸை முதல்வராக்கினார். 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, மீண்டும் முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்-ஸுக்குக் கிடைத்தது. ஆனால், இரண்டாவது முறை அவர் முதல்வரானதை சசிகலா தரப்பு ரசிக்கவில்லை.

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!
பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

சமூகத்தாரின் பகையைச் சம்பாதித்த ஓ.பி.எஸ்!

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பி.எஸ்-ஸுக்குக் கிடைத்த முதல்வர் பதவி சவால் நிறைந்ததாக மாறியது. ஏற்கெனவே சசிகலாவின் ‘பிளாக் லிஸ்ட்டில்’ இருந்த ஓ.பி.எஸ்., அவரால் பதவியிழந்து தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்குப் பக்கபலமாக இருந்த கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை போன்றவர்களில் பலரும் எடப்பாடி பக்கம் சென்றதற்கான கதை நீளமானது.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலிருந்து ஆத்தூர் தொகுதிக்கு மாற்றப்பட்ட நத்தம் விசுவநாதன் படுதோல்வியடைந்தார். வீட்டில் வருமான வரிச் சோதனை, கட்சிப் பொறுப்புகள் பறிப்பு என்று அடிமேல் அடி வாங்கினார் நத்தம். இதற்குப் பின்னால், சசிகலா தரப்பு வேலை பார்த்ததை அறிந்ததாலேயே, அவர் தர்மயுத்தத்தின்போது ஓ.பி.எஸ்-ஸுக்குத் துணையாக நின்றார். பின்னர் நடைபெற்ற தேர்தலின்போதும், கட்சி செயல்பாட்டிலும் ஓ.பி.எஸ்-ஸின் அணுகுமுறை சரியில்லாததால் அதிருப்தியடைந்த விசுவநாதனுக்கு எடப்பாடி கைகொடுத்திருக்கிறார்.

தர்மயுத்தத்தின்போது ஓ.பி.எஸ் பக்கமிருந்த 10 எம்.பி-க்களில் ஒருவருக்குக்கூட 2019 மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. ஆக, அப்போதே ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராக காய்நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, ஓ.பி.எஸ் டீக்கடை வைத்திருந்தபோதே எம்.பி-ஆக இருந்தவர். அவருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் வளர்ச்சி மீது ஈகோ இருந்திருக்கிறது. அது நாளடைவில் இருவருக்கும் பகையாகவே மாறியிருக்கிறது. மறுபுறம் 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்து, பின்னர் பறிக்கப்பட்டது. அதன் பின்னணியில் ஓ.பி.எஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்திலிருந்தே சி.விஜயபாஸ்கருக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் ஏழாம் பொருத்தம்தான். இப்படி, சொந்தச் சமூகத்தாரிடமே இணக்கமான உறவைப் பேணத் தவறினார் ஓ.பி.எஸ்!

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!
பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஒருங்கிணைப்பாளர்!

அணிகள் இணைந்து, தேர்தல் முடிந்ததும், சொத்துக்குவிப்பு வழக்கும், கொடநாடு வழக்கும் எடப்பாடியின் கழுத்தை நெருக்கத் தொடங்கின. இதைப் பயன்படுத்திக்கொண்டு உட்கட்சித் தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்குப் பொறுப்புகள் பெற, ஓ.பி.எஸ் முனைப்புக் காட்டினார். இதை சரியாகச் செய்திருந்தால்கூட, அவர் தன் ஆதரவாளர்களைத் தக்கவைத்திருக்கலாம்.

ஓ.பி.எஸ்-ஸின் நகர்வைப் புரிந்துகொண்ட எடப்பாடி, ஒற்றை வாக்கு அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்வுசெய்யும் முடிவுக்கு வந்தார். தனது பதவிக்கு எப்போதும் பாதிப்பு இருக்காது என்று தப்புக்கணக்கு போட்ட ஓ.பி.எஸ் அதற்குச் சம்மதித்தார். மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஓ.பி.எஸ் ஆர்வம் காட்டாத நேரத்தில், எடப்பாடி சிறப்பாகக் கட்சிப் பணியாற்றி, ஊர் ஊராகப் பிரசாரத்தில் ஈடுபட்டு ஒற்றைத் தலைமைக்காகத் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டார்.

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!
பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

‘முக்குலத்தோர் புரட்சி அணி’

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கை வெட்டவெளிச்சமாக்கின. அவரது சொந்த மாவட்டத்திலேயே அவர் போட்டியிட்ட தொகுதியைத் தவிர அத்தனை தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றியது. ஆனால் எடப்பாடியோ, கொங்குப் பகுதியில் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளியிருந்தார். இதுதான் சரியான தருணம் என்று எடப்பாடி தரப்பு, சமூகரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியது.

ஓ.பி.எஸ் மீது அதிருப்தியிலிருந்த நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, விஜயபாஸ்கர், கிருஷ்ண முரளி, திண்டுக்கல் சீனிவாசன், ராமநாதபுரம் முனியசாமி உள்ளிட்டவர்களைக்கொண்டு, ‘முக்குலத்தோர் புரட்சி அணி’யை உருவாக்கியது ஒரு டீம். அதேபோல வேலுமணி தலைமையில் ‘ஆபரேஷன் சவுத்’ தொடங்கப்பட்டு, தென் மாவட்ட மா.செ-க்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் வளைக்கப்பட்டனர். இரு அணிகளும் தங்கள் பணிகளை செவ்வனே செய்ய, உட்கட்சித் தேர்தலிலும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் அருகிலிருந்து உற்று நோக்கிய கே.பி.முனுசாமியின் மனம் மெல்ல மெல்ல மாறி எடப்பாடி பக்கம் சாய்ந்தது.

அதேநேரத்தில், எடப்பாடியுடனான ஈகோ காரணமாக விலகியிருந்த வைத்திலிங்கத்தை மட்டுமே தன் பக்கம் இழுத்திருந்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் மாநிலங்களவைக்கான அ.தி.மு.க வேட்பாளர் தேர்வுக்காக 21 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளருக்கு ஒன்று, ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு ஒன்று என முடிவானது. ஆனால், சி.வி.சண்முகத்துக்கு ஒரு சீட், ராஜன் செல்லப்பா மகன் சத்யனுக்கு ஒரு சீட் என்று திட்டமிட்டது எடப்பாடி தரப்பு. ஆனால், ‘இந்த முறை அமைதி வழி செல்லாது’ என்று உணர்ந்த ஓ.பி.எஸ்., போராடி தர்மயுத்தத்தில் தன்னுடன் இருந்த தர்மருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார்.

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!
பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

க்ளைமாக்ஸ்...

இனிமேலும், ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியில் வைத்திருந்தால், இதேபோல ஒவ்வொரு விஷயத்திலும் அவருடன் மல்லுக்கட்டியே முடிவெடுக்கவேண்டியிருக்கும் என்று உணர்ந்த எடப்பாடி தரப்பு, முக்குலத்தோர் புரட்சிப் படையை ஆக்டிவ் செய்தது. ஏற்கெனவே பழைய பகையிலிருந்த ராஜன் செல்லப்பா, உதயகுமார், நந்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் களத்தில் இறங்கினர். இப்படி வடமாவட்டங்களுக்கு சி.வி.சண்முகம், கொங்கு மண்டலத்துக்கு மணி & மணி டீம் வசம் பொறுப்பை ஒப்படைத்த எடப்பாடி, சிலரிடம் தானே நேரடியாகவும் பேசியிருக்கிறார். “இரட்டைத் தலைமை பிரச்னைக்கு முடிவுகட்டி, எடப்பாடியின் கை ஓங்கினால்தான் அ.தி.மு.க தன் எதிர்க்கட்சிச் செயல்பாடுகளைத் தொடங்க முடியும்” என்று அவர்களிடம் பேசப்பட்டது.

இதே சமயத்தில், சட்டசபையில் கருணாநிதியைப் பாராட்டி ஓ.பி.எஸ் பேசியது, அவரின் மகன் ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கருத்து கூறியது போன்றவை நிர்வாகிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது. எடப்பாடி தரப்பு, ஓ.பி.எஸ்-ஸுக்கு துரோகிப் பட்டம் சூட்டவும் வாய்ப்பளித்தது.

பகை... சமரசம்... மெத்தனம்... ஓ.பி.எஸ் சரிந்த கதை!

வழக்கறிஞர்களை மட்டுமே நம்பிய ஓ.பி.எஸ்!

இந்த நிலையில்தான், ஜூன் 14-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு குறித்து மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானது. அதை வழக்கறிஞர்களைக்கொண்டு தகர்த்தார் ஓ.பி.எஸ். ஜூன் 23 பொதுக்குழுவுக்கும், ஜூலை 11 சிறப்பு பொதுக்குழுவுக்கும் இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி கட்சி நிர்வாகிகளிடம் பேச முயலாமல், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட வக்கீல்களிடமே பேசிக்கொண்டிருந்தார் ஓ.பி.எஸ். அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததன் விளைவாக, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களோடு கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓ.பி.எஸ் தலைமைப் பதவியை எட்டிப்பிடிக்க நினைக்கவே இல்லை. இரட்டைத் தலைமையில் ஓர் ஆளாகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளவே முயன்றார். இதனால்தான் எடப்பாடிமீது அதிருப்திகொண்ட நிர்வாகிகளும்கூட, ஓ.பி.எஸ்-ஸின் பின் நிற்கத் தயக்கம் காட்டுகின்றனர்.

ஜெயலலிதாவின் நிழலில் அதிகாரமிக்க இடத்தில் இருந்தபோது வளர்த்த பகை, தன் பதவிக்காகச் செய்த சில சமரசங்கள், ஒற்றைத் தலைமைக்காக எடப்பாடி செய்த முயற்சிகளைச் சரியான நேரத்தில் முறியடிக்காதது... என அனைத்திலும் மெத்தனமாக இருந்ததன் பலனை மொத்தமாக அனுபவிக்கிறார் ஓ.பி.எஸ்!