Published:Updated:

“தெரியாது... தெரியாது... தெரியாது!” - ஆணையம் கேட்டு அம்பலப்பட்டு நிற்கும் பன்னீர்...

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

‘மருத்துவர்களிடம் கலந்து பேசி, பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம்’ என்று விஜயபாஸ்கர் சொன்னார்.

“தெரியாது... தெரியாது... தெரியாது!” - ஆணையம் கேட்டு அம்பலப்பட்டு நிற்கும் பன்னீர்...

‘மருத்துவர்களிடம் கலந்து பேசி, பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம்’ என்று விஜயபாஸ்கர் சொன்னார்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராகாமல் நீண்டகாலம் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்பதாவது முறையாக சம்மன் அனுப்பிய பிறகு முதன்முறையாக, கடந்த மார்ச் 21-ம் தேதி ஆஜரானார். ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது’ என்று கூறி, விசாரணை ஆணையம் அமைப்பதற்குக் காரணமான பன்னீர், ஆணையம் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, ‘தெரியாது... தெரியாது’ என்று பதிலளித்ததுதான் அவர்மீது கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது!

உடல்நலக்குறைவு காரணமாக 2016, செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நிழல் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தது, மெரீனாவில் தர்மயுத்தம் நடத்தியது, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது... என அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறின.

“தெரியாது... தெரியாது... தெரியாது!” - ஆணையம் கேட்டு அம்பலப்பட்டு நிற்கும் பன்னீர்...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பன்னீர்செல்வம் உட்பட அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டினார்கள். குறிப்பாக, பன்னீர் நடத்திய தர்ம யுத்தத்தின் முக்கிய கோரிக்கையே, ‘ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகும் வகையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். அவரது கோரிக்கையை ஏற்ற அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017, செப்டம்பர் 25-ம் தேதி விசாரணை ஆணையம் அமைத்தார். தொடர்ந்து ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதற்கிடையே, ‘மருத்துவர்களை விசாரிக்கும்போது மருத்துவ வல்லுநர்கள் குழு உடனிருக்க வேண்டும்’ என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை தடைப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஆறு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, மீண்டும் விசாரணை தொடங்கியிருக்கிறது.

“தெரியாது... தெரியாது... தெரியாது!” - ஆணையம் கேட்டு அம்பலப்பட்டு நிற்கும் பன்னீர்...

பன்னீருக்கு இதுவரை எட்டு முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது. ஆனால், மார்ச் 21-ம் தேதிதான் முதன்முறையாக அவர் ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலை செய்யப்பட்ட சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், ‘‘கடந்த 1992-ம் ஆண்டு சசிகலா மூலமாகத்தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தாலும், என்னிடம் அவர் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்ததில்லை. வீடு, குடும்பம் தொடர்பாக மட்டுமே என்னிடம் பேசுவார். 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சிறைக்குச் சென்றேன். அப்போது அவர் உடல்நலக் குறைபாடுகளோடும் மன உளைச்சலிலும் இருந்தார். 2016 தேர்தலின்போதும் உடல்நலக்குறைவுடனேயே இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக்கொண்டார். நான் 75 நாள்களில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே’’ என்றார் அவர்.

அடுத்ததாக ஆஜரான பன்னீர் அளித்த பதில்கள் பெரும்பாலும் ‘தெரியாது’ என்பவையாகவே இருந்தன... ‘‘2016 செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எனக்குத் தெரியாது. நான் சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் என் உதவியாளர் சொல்லித்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும். மறுநாள் மதியம் அப்போலோ சென்றபோது, அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களைக் கேட்டறிந்தேன்.

“தெரியாது... தெரியாது... தெரியாது!” - ஆணையம் கேட்டு அம்பலப்பட்டு நிற்கும் பன்னீர்...

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடந்த காவிரி நதிநீர் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக எதுவும் தெரியாது... அறிக்கை வந்த பிறகுதான், அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரிந்துகொண்டேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரது உடல்நலன் குறித்து எந்தத் தகவலும் நேரடியாக எனக்குத் தெரிய வராது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மூலமே தெரிந்துகொள்வேன். ஜெயலலிதாவுக்கு இதயப் பிரச்னையால் உடல்நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் விஜயபாஸ்கர் அது பற்றி என்னிடம் கூறினார். ஜெயலலிதாவுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை குறித்து யார் முடிவு செய்தார்கள் என்பதும் எனக்குத் தெரியாது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 35-வது நாளில், ‘அண்ணா, எம்.ஜி.ஆரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றதைப்போல, ஜெயலலிதாவையும் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன். ‘மருத்துவர்களிடம் கலந்து பேசி, பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம்’ என்று விஜயபாஸ்கர் சொன்னார். மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியைச் சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன். ‘ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்’ என்று விஜயகுமார் ரெட்டி கூறியதால் அந்த முடிவு கைவிடப்பட்டது’’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போலோ மருத்துவர்கள் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குமூலத்தில் ‘தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், ஜெயலலிதாவைச் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்து அமைச்சரவையைக் கூட்டச் சொன்னார். ஆனால், நான்கு நாள்கள் பரபரப்பாகப் பேசி அமைதியாகிவிட்டனர்’ என்று சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, ‘‘ராம்மோகன் ராவ் அது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவில்லை. அவ்வாறு கேட்டிருந்தால், உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன்’’ என்று பதில் சொன்னார் பன்னீர்.

மேலும் ‘‘எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் ஆகியோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்கள்’’ என்று சொன்ன பன்னீர், ‘‘சசிகலாவின் அழைப்பின் பேரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கச் சொல்லியிருந்தார். ஆனால், அந்தச் சிகிச்சை நடந்ததா, சமின் சர்மா சிகிச்சை அளித்தாரா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்றும் சொல்லியிருக்கிறார்.

சசிகலா, விஜயபாஸ்கர், ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன்
சசிகலா, விஜயபாஸ்கர், ராம்மோகன் ராவ், ராதாகிருஷ்ணன்

அன்றைய தினம் காலையும் மதியமும் பன்னீரிடம் மொத்த மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ‘தெரியாது’ என்றே சொன்னார். இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ் பேக்... 2017-ல் பன்னீர் தர்மயுத்தம் நடத்திய காலகட்டத்தில், சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர், “அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனையின் இரண்டாவது தளத்தில் ஏழு பேரைப் பணிக்கு நியமித்திருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அம்மாவை யார் பார்க்க வருகிறார்கள் என்பதைக் கணக்கெடுப்பதுதான் அவர்களுக்கு வேலை. ‘நீதி விசாரணை நடந்தால், முதலில் மாட்டப்போவது பன்னீர்செல்வம்தான்’ என்கிறார் விஜயபாஸ்கர். நான் ஏன் மாட்டப் போகிறேன்? அம்மாவின் மரணத்தில் சி.பி.ஐ விசாரணையைக் கேட்பதே நான்தானே... விசாரணை வரட்டும், என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். உண்மையிலேயே நீதி விசாரணை நடந்தால், சிக்கப்போவது விஜயபாஸ்கர் தான்” என்றார். இப்போது அவர் கேட்ட நீதி விசாரணையும் நடக்கிறது... பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது’ என்றே பதில் அளித்த பன்னீர், விஜயபாஸ்கர் விவகாரத்தில் மட்டும் அவரைச் சிக்கவைப்பதுபோல பதில் சொல்லியிருப்பது கட்சியிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அது மட்டுமல்ல... ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ‘‘அம்மா இட்லி சாப்பிட்டார், கையெழுத்து போட்டார், ஆலோசனை நடத்தினார்” என்றெல்லாம் அ.தி.மு.க தலைவர்கள் பேசிய போது அவர்கள் அருகிலிருந்த பன்னீர், எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால், இப்போது ‘சசிகலா, முன்னாள் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும். எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்பதுபோல பதிலளித்திருக்கிறார். இந்த ஆணையம் அமைக்கக் காரணமாக இருந்ததே பன்னீர் நடத்திய தர்மயுத்தம்தான் என்பது உலகறிந்தது. “மொத்தத்தில் எப்போதும்போல பன்னீர் தனது வழக்கமான பல்டியை இந்த விவகாரத்திலும் அடித்துவிட்டார்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism