Published:Updated:

சசிகலா வர வேண்டும் என ஓ.பி.எஸ் விரும்புகிறார்... பழிவாங்கப்படுவோம் என இ.பி.எஸ் பயப்படுகிறார்!

ஓ.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஓ.ராஜா

- ஓங்கியடிக்கும் ஓ.ராஜா

சசிகலா வர வேண்டும் என ஓ.பி.எஸ் விரும்புகிறார்... பழிவாங்கப்படுவோம் என இ.பி.எஸ் பயப்படுகிறார்!

- ஓங்கியடிக்கும் ஓ.ராஜா

Published:Updated:
ஓ.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
ஓ.ராஜா

அ.தி.மு.க-வில் சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பாக தேனி மாவட்டம், பெரியகுளத்திலுள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் வைத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுடன் அவரைச் சந்திக்கப் பெரியகுளம் சென்றோம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தரவிருந்த சசிகலாவை வழியனுப்பக் கிளம்பிக்கொண்டிருந்தார். ‘‘வாங்க... கார்ல போய்க்கிட்டே பேசலாம்’’ என்று நம்மையும் காரில் ஏற்றிக்கொண்டார். நாம் கேள்விகளை முன்வைத்தொம்...

‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க பின்னடைவைச் சந்தித்ததற்கு என்ன காரணம்?”

‘‘ஒற்றுமையின்மைதான் காரணம். அந்தந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ராஜாவாக இருக்கிறார்கள். யாரும், யார் பேச்சையும் கேட்பதில்லை. கட்சியில் கட்டுப்பாடு இல்லாததால்தான் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ என ஒவ்வொருவரும் இஷ்டத்துக்குப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஏற்கும் முன்பாகவே இ.பி.எஸ் தன்னை முதல்வர் என்று அறிவித்துக்கொண்டார். இரட்டைக்குழல் துப்பாக்கி என்று கூறிக்கொள்ளும் இவர்கள், தீபாவளி துப்பாக்கிகளாகவே இருக்கிறார்கள். நிர்வாகத்தைத் திறமையாக நடத்துவதில் எவ்விதக் குறையுமில்லை. ஆனால், இருவருக்குமிடையே போட்டி உள்ளது. இவர்கள் இருவரிடமும் அ.தி.மு.க சிக்கி, படாத பாடு படுகிறது.’’

‘‘உங்கள் சகோதரருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் போட்டிக்குக் காரணமா?’’

‘‘கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதே பெரிய அங்கீகாரம்தான். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருந்தாலும், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இ.பி.எஸ் விடுவதிவில்லை. இ.பி.எஸ்-ஸுடன் நான்கைந்து பேர் இருந்துகொண்டு கெடுக்கிறார்கள். ஓ.பி.எஸ்-ஸை புகழ்ந்து பேசியதால்தான் புகழேந்தி, அன்வர் ராஜா, பஷீர் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இ.பி.எஸ் கூட்டத்துக்கு அதிக ஆட்கள் சேர்ப்பதும், ஓ.பி.எஸ் கூட்டமென்றால் ஆட்களைச் சேர்க்காமலும் பார்த்துக்கொண்டார்கள். இ.பி.எஸ் சர்வாதிகாரத்தோடு செயல்படுகிறார்.’’

‘‘நீங்கள் இரண்டாவது முறையாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறீர்களே?’’

‘‘நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை. என்னைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது. சசிகலாவைச் சந்திக்கக் கூடாது என்று எப்படி கட்டுப்பாடு விதிக்க முடியும்? சசிகலா அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார். காரில் அ.தி.மு.க கொடி கட்டிக்கொண்டு தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். அவரை அடிமட்டத் தொண்டர்கள் வரவேற்கிறார்கள். நான் என்ன முதல்வர் மு.க.ஸ்டாலினையா சந்தித்தேன்? மதுரை ஆவின் சேர்மனாகப் பதவியேற்றபோது, இதேபோல வெள்ளிக்கிழமை கட்சியிலிருந்து நீக்கினார்கள். மீண்டும் திங்கள்கிழமை இணைத்துக் கொண்டார்கள். ஏன், எதற்கென்றே தெரியவில்லை. குழு அமைத்து, குற்றச்சாட்டு இருந்தால் விசாரித்து நீக்க வேண்டும். ஜெயலலிதா காலத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருப்பார். அவரின் விசாரணைக்குப் பிறகே நீக்கம் நடக்கும். ஆனால், தற்போது எவ்வித விசாரணையும் இன்றி கட்சியினர் நீக்கப்படுகிறார்கள்.’’

சசிகலா வர வேண்டும் என ஓ.பி.எஸ் விரும்புகிறார்... பழிவாங்கப்படுவோம் என இ.பி.எஸ் பயப்படுகிறார்!

‘‘சசிகலா இணைப்பு தொடர்பாக ஓ.பி.எஸ் முன்னிலையில்தானே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?’’

‘‘தீர்மானம் நிறைவேற்றியதில் ஓ.பி.எஸ் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அறிவிப்பு வெளியானபோதே, ‘அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருக்க மாட்டார்’ என்று கட்சியினர் பேசினார்கள். அதேபோல அவர் உறுதியாக இல்லை. ‘மீண்டும் கூட்டம் நடத்தி பெரிய அளவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்’ என்று மாவட்டச் செயலாளர் அறிவித்திருந்தார். அறிவிப்புக்கு மறுநாள் ஓ.பி.எஸ்-ஸை கைலாசபட்டியிலுள்ள பண்ணை வீட்டில் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார். அவர் இ.பி.எஸ்-ஸிடம் போன் போட்டுக் கொடுத்திருப்பார். அதன் பிறகு, தீர்மானம் போடுவது தொடர்பான கூட்டம் ரத்தாகிவிட்டது. ஓ.பி.எஸ் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை. சசிகலா வரவை ஒருபோதும் ஓ.பி.எஸ் எதிர்க்கவில்லை. அவர் வர வேண்டும் என்றே விரும்புகிறார். வரக் கூடாது என நினைப்பது இ.பி.எஸ்-தான். ‘சசிகலா தலைமையேற்றால் நாம் பழிவாங்கப்படுவோம்’ என்று பயப்படுகிறார். ஆனால், பழிவாங்கும் நடவடிக்கையில் சசிகலா ஈடுபட மாட்டார்.’’

‘‘ஏன் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறீர்கள்?’’

‘‘சசிகலாவின் பின் அனைவரும் செல்ல வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அவர், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்துவிட்டார். ஆனால், அவரையே இன்று கட்சிக்குள் வரக் கூடாது என்கிறார்கள். இவர்களால் கட்சியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, சசிகலாவிடம் கட்சியை ஒப்படைப்பதுதான் சரியானதாக இருக்கும். ‘ஒரே குடும்பத்தின் பிடிக்குள் கட்சி செல்வதை அனுமதிக்க மாட்டோம்’ என்று ஓ.பி.எஸ் கூறுகிறார். குடும்பம் என நினைத்திருந்தால், சசிகலா முதல்வர் பதவியை தினகரனுக்குத்தானே வழங்கியிருக்க வேண்டும்? அவர் அவ்வாறு செய்யவில்லையே... எடப்பாடிக்குக் கொடுத்தல்லவா மாட்டிக்கொண்டார். ஓ.பி.எஸ்-ஸுடன் நான் முரண்படவில்லை. கட்சி வீணாக அழிந்துகொண்டிருக்கிறது, எல்லோரும் ஒன்றாகச் சேரவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.’’

‘‘சசிகலாவிடம் உங்களை ஓ.பி.எஸ் தூது அனுப்பியதாகத் தகவல் பரவுகிறதே?’’

‘‘தேனியில் சசிகலா, தினகரன் இணைப்பு தொடர்பாகத் தீர்மானம் போட்டதே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பாகவே நான் சசிகலாவைச் சந்திக்க முடிவெடுத்திருந்தேன். ‘சசிகலாவைச் சந்திக்க வேண்டாம்’ என அண்ணன் என்னிடம் மூன்று முறை கூறினார். நான் கேட்கவில்லை. என்னை அவர் தூது அனுப்பியிருந்தால், ஏன் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட வேண்டும்... அதில் கையெழுத்து போட வேண்டும்... ‘என் தம்பி என்ன தப்பு செய்தார்? பொறுமையாக இருங்கள்’ என்று பேசியிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. இது எனக்கு அசிங்கம்தான். நான் சொல்லவருவது இதுதான், சசிகலாவிடம் கட்சியைக் கொடுத்துவிட்டு, வெளியே சென்று ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் சண்டை போட்டுக்கொள்ளட்டும்!’’