Published:Updated:

“தலைவரு... திமிங்கிலம்தானுங்கோ!” - அ.தி.மு.க முகாமின் ‘தில்லாலங்கடி’ கணக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியை முதல்வர் வேட்பாளரா ஏத்துக்குறதுல எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, வழிகாட்டுதல்குழுவை உடனே அமைச்சாகணும்.

பிரீமியம் ஸ்டோரி
“உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயகச் சாட்சியாக, இந்தச் சாமானியனை ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தியிருக்கிறது. இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்துக்கு நான் நன்றி சொல்லிக்கொண்டேயிருப்பேன்...” அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி உருகியிருக்கிறார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. தேனொழுகும் இந்த அறிவிப்புக்குப் பின்னாலிருக்கும் அரசியல் கொஞ்சநஞ்சமல்ல... ‘பதவி வேட்டை’ என்னும் அரசியல் சூறாவளி சுழன்றடிக்கும் பெருங்கடலில் பல சுறாக்களை வீழ்த்திய பிறகே ‘தலைவரு திமிங்கிலமாக’ உருவெடுத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்!’’

தேனியிலிருந்து அக்டோபர் 5-ம் தேதி சென்னைக்குக் கிளம்பிய பன்னீரின் கார் மேல்மருவத்தூரைத் தாண்டிய அந்த மாலைமங்கிய பொழுதில் அவரது அலைபேசி ஒலித்தது. பவ்யமாக போனை எடுத்துக் காதில்வைத்தவர், “நீங்க சொன்னாச் சரிங்க...” என்கிறரீதியில் மட்டும் பதில் தந்தாராம். அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத்தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்கள் சிலரும் சந்தித்துப் பேசியிருந்தார்கள். எதிர்த்திசையிலிருந்து வரும் வாகனங்களை வெறித்துப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்த அந்த நிமிடங்களில்தான் ‘முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடிக்கு விட்டுக்கொடுப்பது... அதேநேரம் வழிகாட்டுதல்குழு அமைப்பதில் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது’ என்று முடிவெடுத்தாராம் பன்னீர்.

திண்டுக்கல் சீனிவாசன் - நத்தம் விஸ்வநாதன் - வளர்மதி
திண்டுக்கல் சீனிவாசன் - நத்தம் விஸ்வநாதன் - வளர்மதி

கொந்தளித்த சீனிவாசன் - கண்ணீர்விட்ட வளர்மதி!

அதன் பிறகே மளமளவெனக் கட்டளைகளைப் பிறப்பிக்கத் தொடங்கினார் பன்னீர். “எடப்பாடியை முதல்வர் வேட்பாளரா ஏத்துக்குறதுல எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, வழிகாட்டுதல்குழுவை உடனே அமைச்சாகணும். பட்டியலோடு வந்தா மட்டும் என்கிட்ட பேசச் சொல்லுங்க” என்று வைத்திலிங்கத்திடம் கறாராகச் சொல்லியனுப்பினார். எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் வேலுமணியும், பன்னீர் தரப்பில் கே.பி.முனுசாமியும் வழிகாட்டுதல்குழு உறுப்பினர் நியமனங்களுக்கான பேச்சுவார்த்தையைச் சுமுகமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். வைத்திலிங்கமும், அமைச்சர் சி.வி.சண்முகமும் மத்தியஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

முதல் பட்டியல் தயாரானபோது, நத்தம் விஸ்வநாதனின் பெயர் இருந்திருக்கிறது. வெகுண்டெழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “என்கிட்ட இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை ரெண்டாகப் பிரிச்சு அவர்கிட்ட பாதி கொடுத்தீங்க... இப்ப வழிகாட்டுதல்குழுவிலும் அவர் உறுப்பினர்னா, சீனியரான எனக்கென்ன மரியாதை?” என்று ஆவேசம்காட்ட, நத்தத்தின் பெயரை அடித்துவிட்டு சீனிவாசனின் பெயரை எழுதியிருக்கிறார் எடப்பாடி. இந்தப் பட்டியல் பன்னீரின் பார்வைக்குச் சென்றது. அதில், அன்வர் ராஜாவின் பெயரைப் பார்த்ததும் உதட்டைப் பிதுக்கினாராம் பன்னீர். சமீபத்தில், சசிகலா விடுதலை தொடர்பாக அன்வர் பேசியது பன்னீரை உசுப்பிவிட்டிருக்கிறது என்கிறார்கள். அன்வரின் பெயர் நீக்கப்பட்டது.

இதற்கிடையே, வழிகாட்டுதல்குழுவில் இடம்பிடிப்பதற்காகத் தன்னை அணுகிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை, “என் கோட்டா முடிஞ்சுது. எடப்பாடிகிட்ட கேளுங்க” என்று அனுப்பினார் பன்னீர். அங்கு எடப்பாடியும் கையை விரிக்க... “செட்டியார் சமூகமெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்று எகிறியிருக்கிறார். எடப்பாடி ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பு வதற்குள், முன்னாள் அமைச்சர் வளர்மதி முதல்வர் வீட்டில் தர்ணா உட்காராத குறையாக அமர்ந்துவிட்டாராம். “அம்மா இருந்தவரைக்கும் மகளிரணிச் செயலாளர் பொறுப்பு கொடுத்து கெளரவமாவெச்சிருந் தாங்க. இப்ப பத்தோட பதினொண்ணா நிக்க வெச்சிட்டீங்க. குழுவுல எனக்கும் இடம் வேண்டும்” மூக்கைச் சிந்தி அழவே ஆரம்பித்துவிட்டாராம். `இதென்னடா வம்பா போச்சு!’ என்று அவரைத் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் எடப்பாடிக்கு!

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பிடிவாதம் - ஓரங்கட்டப்பட்ட சீனியர்கள்

வழிகாட்டுதல்குழுவில் கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் சமூகங்களுக்கு தலா இரண்டு இடங்களை ஒதுக்குவது என முடிவானது. இதில் தங்கமணி, வேலுமணி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று முதலில் முடிவெடுக்கப்பட்டு, மற்றோர் இடத்தை சீனியர்களான செங்கோட்டையன் அல்லது தம்பிதுரைக்கு வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தங்கமணி, வேலுமணி இருவரும் குழுவில் இடம்பெற வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்ததால், சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

“2016 சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட வேதரத்தினம் 37,000 வாக்குகளைப் பெற்றார். இவர் இப்போது தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இந்த முறை வேதரத்தினம் போட்டியிடும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் ஓ.எஸ்.மணியன் தேறுவது கஷ்டம் தான். சசிகலா தொடர்பிலிருந்தும் மணியன் முழுவதுமாக வெளிவர வில்லை. ஆக, காமராஜுக்கு இடமளிக்கலாம்” என்று எடப்பாடியே காமராஜ் பெயரை ‘டிக்’ அடித்தாராம்.

பண்ருட்டி ராமச்சந்திரனைக் குழுவில் உறுப்பினராகப் போடுவதற்கு பன்னீர் முதலில் முடிவுசெய்திருக்கிறார். பிறகு வயது முதிர்வைக் காரணம் காட்டி அவரை ஓரங்கட்டிவிட்டு, பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த தனது தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ப.மோகனுக்கு வாய்ப்பளித்திருக் கிறார். ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் தன் ஆதரவாளராக இருந்த லட்சுமணன் தி.மு.க-வுக்கு தாவிவிட்டதால், மோகனும் கையைவிட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அவருக்குப் பதவியை அளித்திருக்கிறார் பன்னீர்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவரும், சோழவந்தான் எம்.எல்.ஏ-வுமான மாணிக்கம், யாதவர் சமூகத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பன்னீர் ஆசியால் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள். மதுரை துணை மேயர், மதுரை எம்.பி உள்ளிட்ட பதவிகளை வகித்த கோபாலகிருஷ்ணன், பன்னீர் தர்மயுத்தம் ஆரம்பித்தபோது முதல் ஆளாக வந்து ஆதரவு தெரிவித் தாராம். அந்த விசுவாசத்துக்கு இப்போது பதவி அளிக்கப்பட்டிருக் கிறது.

கிறிஸ்தவ வன்னியரான ஜே.சி.டி.பிரபாகருக்கும், கிறிஸ்தவ நாடாரான மனோஜ் பாண்டியனுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இருவரும் பன்னீர் கோட்டா ஆட்கள். பிரதிநிதித்துவ அடிப்படையில், வன்னியரான அமைச்சர் சி.வி.சண்முகமும், மீனவர் பிரதிநிதியாக அமைச்சர் ஜெயக் குமாரும் எடப்பாடி கோட்டாவில் இடம்பிடித்திருக் கிறார்கள்.

வேலுமணி - தங்கமணி - பண்ருட்டி ராமச்சந்திரன் - காமராஜ்
வேலுமணி - தங்கமணி - பண்ருட்டி ராமச்சந்திரன் - காமராஜ்

பன்னீரிடம் உருகிய வேலுமணி!

இறுதிப் பட்டியலுடன் பன்னீரைச் சந்தித்தவர் வேலுமணி. அப்போது அவர் பன்னீரிடம், “உங்களையும் எடப்பாடியையும் இணைக்கும் வேலையை முன்னாடி நின்னு செஞ்சேன். கட்சிக்காக ஒண்ணா வந்தீங்க. இப்பவும் கட்சிக்காக ஒண்ணாகணும்” என்று உருகியிருக்கிறார். அதன் பிறகுதான் நள்ளிரவில் வழிகாட்டுதல்குழுப் பட்டியல் இறுதிசெய்யப்பட்டது.

இடையே இன்னொரு குளறுபடியும் ஏற்பட்டது. “வழிகாட்டுதல்குழுவுடன் தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வுக்குழு, பிரசாரக்குழு ஆகிய மூன்று குழுக்களை உருவாக்க முதல்வர் விரும்புகிறார். வழிகாட்டுதல்குழுவில் இடமில்லாதவர்களுக்கு இந்தக் குழுக்களில் இடமளிக்கலாம் என்கிறார்” என்று வைத்திலிங்கம் சொன்னபோது, பன்னீர் உஷ்ணமாகி விட்டார். “வழிகாட்டுதல்குழுவை டம்மியாக்க நினைக்கிறீர்களா... இந்தக் குழுதான் இனி கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது. இதோடு வேறு குழுவைச் சேர்த்து அறிவிப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்று பன்னீர் சீறியதும், வழிகாட்டுதல் குழுவை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக் கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தை முதல் வேட்பாளர் தேர்வு வரை இந்தக் குழுவின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது பன்னீரின் ‘கண்டிஷன்.’

எடப்பாடிக்கு என்ன லாபம்?

* ஆயிரம் தடைகளைத் தாண்டி, முதல்வர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டதே எடப்பாடிக்கு மிகப்பெரிய லாபம்தான். அதாவது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் ‘தலைமை’ எடப்பாடிதான் என்பதை அவர் நிலைநிறுத்திவிட்டார். அரசியல் - வரலாற்றுரீதியாக இது எடப்பாடிக்கு எக்காலமும் புகழ் சேர்க்கும்.

* என்னதான் கட்சிக்கு பன்னீர், ஆட்சிக்கு பழனிசாமி என்று சொல்லப் பட்டாலும்கூட இரட்டைத் தலைமை என்பதை உடைத்திருக்கிறார் எடப்பாடி. ஆட்சி அமைத்து, முதல்வராகிவிட்டால் மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஹாட்ரிக் அடித்த வெற்றியின் முழு அறுவடையும் எடப்பாடியையே சாரும். இதன் மூலம் கட்சி, ஆட்சி இரண்டிலும் அவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் ‘சர்வாதிகார’ முகமாக மாறுவார் எடப்பாடி.

* எடப்பாடியைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறார். 2016-ல் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, தமிழகத்திலேயே மிக அதிகமாக அவர்தான் செலவழித்ததாக ஜெயலலிதாவுக்கே ரிப்போர்ட் போனது. ‘என்ன விலை கொடுத்தாவது முதலில் ஜெயித்துவிட வேண்டும்; அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால், கொடுத்த விலைக்குப் பல மடங்காக எடுத்துவிடலாம்’ என்பது எடப்பாடியின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால்தான் தேர்தல் செலவில் கணிசமான பங்கை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்திருக்கிறாராம் எடப்பாடி. அந்தச் செலவுகளின் அடிப் படையில்தான், ‘150 தொகுதிகளுக்கும் மேல் அ.தி.மு.க வெற்றிபெறும்’ என்றும் அவர் நம்புகிறார். மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால், செம்மலை, நத்தம் விஸ்வநாதனை வளைத்த பாணியில் குழுவில் இடம்பிடித்திருக்கும் பன்னீரின் ஆதரவாளர்களை வளைத்துவிடலாம். அவ்வளவு ஏன்... பன்னீரையே விலைக்கு வாங்கிவிடலாம் என்பதுதான் எடப்பாடியின் உச்சபட்சக் கணக்கு!

மனோஜ் பாண்டியன் - ஓ.எஸ்.மணியன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - சி.வி.சண்முகம்
மனோஜ் பாண்டியன் - ஓ.எஸ்.மணியன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - சி.வி.சண்முகம்

பன்னீருக்கு என்ன லாபம்?

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை நினைத்து ‘அவசரப்பட்டு விட்டோமே!’ என்று பன்னீர் வருத்தப்படாத நாளே இல்லை. பொறுமையாக இருந்திருந்தால், சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, தானே முதல்வராக நீடித்திருக்கலாம்; எடப்பாடி சீனுக்கே வந்திருக்க மாட்டார் என்று நாள்தோறும் நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்க்கிறார் பன்னீர். இந்தநிலையில் தான், இந்தமுறை பொறுமையாக இருக்க வேண்டும் என்று நிதானமாகக் காய்களை நகர்த்தியிருக்கிறார். அந்தப் பொறுமையே அவருக்கு இந்த முறை லாபங்களை அள்ளித் தந்திருக்கிறது என்கிறார்கள்.

* கட்சிக்குள் நிலவிய கொங்கு லாபியை உடைத்தது பன்னீருக்கு மிகப்பெரிய லாபம். சமூக ரீதியாக வழிகாட்டுதல்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கவைத்து, கட்சிக்குள் கபடி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் பன்னீர். குழுவில் பிரதிநிதித் துவம் கிடைக்காத சமூகத்தினர் ஆக்ரோஷமடைந் திருக்கிறார்கள். பிரதிநிதித்துவம் கிடைத்தவர்களின் கண்களில் பதவி ஆசை தெரிகிறது. இருதரப்பிலும் கோபத்தையும் ஆசையையும் தூண்டிவிட்டு, அதை எடப்பாடிப் பக்கம் லாகவமாகத் திருப்பியிருக்கிறார் பன்னீர்.

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், “வேலுமணி, தங்கமணிக்கு அமைச்சரவையிலும் பதவி... வழிகாட்டுதல்குழுவிலும் பதவி... நாங்க ளெல்லாம் எதற்காக இருக்கிறோம்?” என்று எடப்பாடியிடமே சீறியிருப்பது வெறும் தொடக்கம் தான். வேலுமணி, தங்கமணியை மட்டுமே கொங்குப் பகுதியின் பிரதிநிதிகளாக எடப்பாடி முன்னிறுத்துவது, சீனியர்களான பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோரிடம் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. தன்னுடைய சமூகரீதியிலான அரசியலால் கொங்குப் பகுதியிலேயே பிளவை ஏற்படுத்தியிருக் கிறார் பன்னீர்.

* மீண்டும் ஆட்சி அமைந்தால்தானே எடப்பாடி முதல்வராக முடியும்... அப்படியே ஆட்சி அமைந் தாலும், கட்சியைத் தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டால், தன்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைவைத்து யார் முதல்வர் என்பதை அன்றைய தேதியில் பார்த்துக்கொள்ளலாம் என்பது பன்னீரின் லாபக் கணக்கு!

* ஒருவேளை ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானால், ‘நான்தான் அப்பவே சொன்னேன்... முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்னிறுத்த வேண்டாம்னு’ என்று சொல்லி... அதேசமயம், செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட சில சீனியர்களைக் கைகாட்டி, ‘அன்றைக்கே உங்களைத் தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த துடித்தேன்... எடப்பாடி எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்’ என்று மொத்தப் பழியையும் எடப்பாடி மீது தூக்கிப்போடலாம். இதன் மூலம் எடப்பாடிக்கு எதிராகப் பெரும் அதிருப்தி கோஷ்டியை உருவாக்கி, அவர்கள் அனைவரையும் தன் பின்னால் அணிதிரளவைக்கலாம் என்பது பன்னீரின் பலே தந்திரக் கணக்கு!

* ஏற்கெனவே பன்னீர் தரப்பிலிருந்து தினகரன் - சசிகலா தரப்பில் பேசிவிட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை நாளை சசிகலா விடுதலையாகி, அவரது பின்னால் கட்சி அணிதிரளும் பட்சத்தில் சசிகலாவைக் கட்சியின் பொதுச்செயலாளராகவும், தன்னை முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்திக்கொள்ளலாம். கட்சிக்குள் தனக்கு எதிராளியாக இருக்கும் எடப்பாடிக்கு ‘துரோகம்’ பட்டம் கட்டி கட்சியிலிருந்தே ஓரங்கட்டிவிடலாம் என்பது பன்னீரின் மற்றுமொரு ‘பகீர்’ கணக்கு!

* முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை முன்னிறுத்தியதற்கு பிரதி உபகாரமாக, தேர்தல் செலவில் கணிசமான பகுதியை எடப்பாடி பக்கம் தள்ளிவிட்டிருக்கிறார் பன்னீர். இந்த முறை தனது பாக்கெட்டிலிருந்து பெரிதாகச் செலவு எதையும் செய்ய மாட்டார் என்கிறார்கள். மிகப்பெரிய லாபம் இது.

`பன்னீரை வீழ்த்திவிட்டோம்’ என்று எடப்பாடி நினைக்கலாம். `எடப்பாடியை வீழ்த்திவிட்டோம்’ என்று பன்னீர் மனப்பால் குடிக்கலாம். ஆனால், இருவருமே தொண்டர்களின் மனதை வெற்றிகொள்ளவில்லை என்பதே உண்மை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிர்வைக் கிளப்பிய வருமான வரித்துறை!

‘சசிகலா விரைவில் விடுதலையாவார்... டெல்லியுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது’ என்றெல்லாம் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கும்போதெல்லாம் வருமான வரித்துறை சசிகலா அண்ட் கோ-வின் சொத்துகளை முடக்குவது வாடிக்கையாகிவிட்டது. இப்படித்தான் சசி விடுதலை குறித்த பேச்சு ‘பீக்’கில் இருந்தபோது, ஆகஸ்ட் இறுதியில் போயஸ் கார்டன் உள்ளிட்ட 300 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது வருமான வரித்துறை. இந்த முறையும், ‘தினகரன் டெல்லி சென்றார். பா.ஜ.க தலைவர்களைப் பார்த்து, பேச வேண்டியதைப் பேசி முடித்துவிட்டார். சசிகலா விரைவில் விடுதலையாகிவிடுவார்’ என்றெல்லாம் பரபரப்பாகப் பேச்சுகள் எழுந்திருக்கும் நிலையில், அக்டோபர் 7-ம் தேதி சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்... என 2,000 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியிருக்கிறது வருமான வரித்துறை. அதேநேரம், சசிகலா அபராதத் தொகையைக் கட்டுவதை எப்படியாவது தடுத்து, அவரது விடுதலையைத் தள்ளிவைக்க வேண்டும் என்பது சிலரது லாபி என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு