Published:Updated:

`கொடுத்த வாக்கு என்ன ஆச்சு?' - மலைக்கிராம மக்களை ஏமாற்றுகிறாரா ஓ.பி.எஸ்?!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட ராசிமலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்ற கொதிப்பு கிராமம் முழுக்க இருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் கரையில் உள்ளது ராசிமலை. சுமார் 35 பழங்குடியின குடும்பங்கள் வசித்துவரும் இந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வீடுகளும் இல்லாத நிலையில், மழைக்கும் வன விலங்குகளுக்கும் அஞ்சி தினம்தினம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இந்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அம்மக்கள் படும் துயரத்தைச் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராசிமலைக்குச் சென்று அம்மக்களுக்கு உதவித்தொகை வழங்கினார். விரைவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், துணை முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் ராசிமலை மக்கள்.

ராசிமலை
ராசிமலை

கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ள டம்டம் பாறைதான் இம்மக்களின் பூர்வீக இருப்பிடம். மலைத்தேன் எடுத்தல், கிழங்குகள் பறித்தல், மூலிகைச் செடிகளைச் சேகரித்தல் போன்றவையே பிரதான தொழில். காட்டிற்குள் கூரைகட்டி, மழையிலும் வன விலங்குகளின் அச்சத்திலும் வாழ்ந்துவந்தனர். 19 ஆண்டுகளுக்கு முன்னர், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த அதுல் ஆனந்த், மஞ்சளாறு அணையைப் பார்வையிட வந்தபோது இம்மக்களின் நிலையைக் கண்டு வருவாய்த்துறையினர் மூலம் பட்டா வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி மஞ்சளாறு அணை கரையில் இருந்த வருவாய்துறைக்குச் சொந்தமான இடத்தில் பட்டா வழங்கப்பட்டது. அவ்விடமே இப்போதைய ராசிமலை.

`நவ் ஆர் நெவர்... ஆபரேஷன் எக்ஸ்போஸ்’ - ரஜினியின் 30 நாள் டார்கெட்!

ஜி.கல்லுப்பட்டியில் இயங்கிவரும் ஆ.டி.யூ என்கிற தனியார் தொண்டு நிறுவனம் அந்த இடத்தில் 28 வீடுகளைக் கட்டிக்கொடுத்தது. தொடர் பராமரிப்பு இல்லாததாலும், மலையிலிருந்து உருண்டுவரும் பாறைகளாலும் நாளடைவில் வீடுகள் மொத்தமும் சேதமடைந்தன. ’பாதுகாப்பான வீடு ஒன்றைக் கட்டிக்கொடுக்க வேண்டும்’ என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் மனு கொடுத்தனர் ராசிமலை மக்கள். உடனடி நடவடிக்கையாக, குடிசை மாற்று வாரியம் மூலம் சேதமடைந்த அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. இதனால், அருகில் உள்ள பட்டா நிலத்தில், தற்காலிகமாகப் பழைய தார்ப்பாய்கள் மற்றும் தென்னை ஓலைகள் மூலம் குடிசை அமைத்துக் குடியிருந்து வருகின்றனர் மக்கள்.

ராசிமலை
ராசிமலை

``இடியும் நிலையில் இருக்கு… புது வீடு கட்டிக்கொடுங்க.. இல்ல, இருக்குற வீட்டையாவது சரிபண்ணிக் கொடுங்கனுதான் கேட்டோம். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் வந்தாங்க… பாத்தாங்க.. ஒரே நாளில் மொத்த வீட்டையும் இடிச்சு தரைமட்டமா ஆக்கிட்டுப் போயிட்டாங்க. மலையில இருந்த மாதிரி, குடிசை போட்டு வெயிலும், மழையுமா இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கோம்.”

“கொஞ்ச நாளைக்கு முன்னால, காட்டுமாடு ஒண்ணு வந்து ஒரு ஆளைக் குத்திடுச்சு.. குழந்தைகளை வெச்சுக்கிட்டு ராத்திரி நேரத்துல வெளிய வரமுடியல. துணைமுதல்வர் வந்தாரு. சீக்கிரமே வீடு கட்டிக்கொடுக்குறேன்னு சொன்னாரு. சொல்லி பல மாசம் ஆச்சு. இன்னும் பேஸ்மட்டம் கூட போடல.. கொடுத்த வாக்கு என்ன ஆச்சு?” எனக் கோபத்தோடு கேட்டனர் ராசிமலை மக்கள்.

ராசிமலை மக்கள்
ராசிமலை மக்கள்

இது தொடர்பாக மாவட்ட குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, “எங்கள் பக்கம் எந்தப் பிரச்னையும் இல்லை. வேலை ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கான்ட்ராக்டர் கூறுகிறார். விரைவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு