Published:Updated:

ஹோமத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ் குடும்பம், ஏன் மாற்றப்பட்டார் ஜாபர் சேட்... கழுகார் அப்டேட்ஸ்!

ஓ.பி.எஸ் - ஜாபர் சேட்
ஓ.பி.எஸ் - ஜாபர் சேட் ( கழுகார் )

`வெக்கையாக இருக்கிறது. வீடியோ கால் வேண்டாம். வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புகிறேன்’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே வரிசைகட்டின வாட்ஸ்அப் மெசேஜ்கள்...

பதவிக்கு மட்டும் ஆசைப்பட்டால் போதுமா?

சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் அவரது தொகுதியான திருப்பத்தூர் மக்களுக்கு நிவாரணங்களை வாரி வழங்கி வருகிறார். சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த ராஜகண்ணப்பன் பெரியகருப்பனுக்கு போட்டியாக இருப்பார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தி.மு.க-வில் இணைந்ததோடு சரி, ராஜகண்ணப்பன் சிவகங்கை பக்கம் சரியாக எட்டிகூட பார்ப்பதில்லையாம். `பதவிக்கு மட்டும் ஆசைப்பட்டால் போதுமா, என்னப்பா ஆச்சு ராஜகண்ணப்பனுக்கு?’ என்று சீறுகின்றனர் சிவகங்கை உடன்பிறப்புகள்.

மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்
மதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்

எம்.எல்.ஏ-வுக்கும் எஸ்.பி-க்குமான மோதல்!

சமீபத்தில் நாகை மாவட்டம் குத்தாலம் காவல்நிலையத்தில் மணல் கொள்ளை தொடர்பாக பா.ம.க-வினர் அ.தி.மு.க-வினரிடையே மோதல் ஏற்பட்டு புகார் பதிவானது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான பவுன்ராஜின் பரிந்துரையை ஏற்று, பாதிக்கப்பட்ட பா.ம.க-வினர் மீது ஒருதலைப்பட்சமாகக் குத்தாலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் நடத்திய விசாரணையின் முடிவில், தற்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல, செம்பனார்கோயில் காவல்நிலையம் கட்டப் பஞ்சாயத்து பார்ட்டிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மசூதி தொழுகை விவகாரத்தில் பாரபட்சமாகச் செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன்மீது புகார் எழுப்பப்பட்டது. இவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். அடுத்தடுத்து மயிலாடுதுறை சப்-டிவிஷனில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதால் மற்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர். எஸ்.பி செல்வநாகரத்தினத்துக்கும் எம்.எல்.ஏ பவுன்ராஜ்க்கும் இடையிலான மோதல்தான் இப்படி வெடித்திருக்கிறதாம்.

வேலூர் அ.தி.மு.க-வில் மல்லுக்கட்டு!

வேலூர் மாவட்டமானது வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுவிட்டது. ஆனால். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி பிரிக்கப்படவில்லை. வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கே.சி.வீரமணியும் கிழக்கு மாவட்டச் செயலாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவியும் உள்ளனர். இப்போது மூன்று புதிய மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென்று அ.தி.மு.க-வினர் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

`அமைச்சர் வீரமணியை திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் சு.ரவியை ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளராகவும் அறிவிக்க வேண்டும். பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்துக்கென தனியாக மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும்’ என்று தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். வேலூர் புதிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு இப்பகுதியில் பலமாக இருக்கும் சமுதாய நிர்வாகிகளிடையே மோதலும் ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் மாற்றி மாற்றிப் போட்டுக்கொடுப்பதால் வேலூர் மாவட்ட அ.தி.மு.க வியர்த்துக் கிடக்கிறது.

 கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

பெரியசாமியின் கடைசி ஆசை நிறைவேறுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாகத் தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் வலம் வந்தவர் பெரியசாமி. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே, `என்னுடைய மாவட்டச் செயலாளர் பதவியை என் மகன் ஜெகனுக்கு கொடுங்கள். இது என் கடைசி ஆசை’ எனத் தன் மகள் கீதா ஜீவனுக்குத் தெரியாமலேயே ஸ்டாலினைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தார். அவரது மறைவுக்குப் பிறகு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கீதாஜீவனுக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மா.செ பதவி கொடுக்கப்பட்டது.

பதவி கிடைத்ததில் இருந்து கணவர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கீதாஜீவன் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அக்காவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், மா.செ பதவி மீது தற்போது வரை குறியாகவே உள்ளாராம் ஜெகன். ``தி.மு.க ஆட்சியில் அக்கா அமைச்சராகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு மா.செ பதவி வேணும்” எனச் சொல்லி ஜெகன் போராடி வருவது பெரியசாமி குடும்பத்துக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறதாம். `பெரியசாமி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது கடைசி ஆசையை எப்போது நிறைவேற்றுவீர்கள்?’ என்றபடி தலைமைக்கு கடிதம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் ஜெகனின் ஆதரவாளர்கள்.

ஜான் தங்கம் மீது பறக்கும் புகார்!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க ஐ.டி விங்க் நிர்வாகி மனோ என்பவர் டாஸ்மாக் பார் டெண்டர் சம்பந்தமாக ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபாய் பேரம் பேசிய ஆடியோ வெளியானது. அதில், `அமைச்சருக்கு பணம் கொடுக்க வேண்டும்’ என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. போன் உரையாடல் சர்ச்சையில் சிக்கியதால் கடந்த அக்டோபர் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் மனோ. இப்போது அவர் மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்துடன் நெருக்கமாக இருக்கிறார். மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் மா.செ-வுடன் மனோ கலந்துகொள்வது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல அ.தி.மு.க குமரி மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பொருளாளரன ரமேஷ், மார்த்தாண்டம் நகைக்கடைகளில் நடந்த தொடர் கொள்ளை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். அவர்மீது கட்சி ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன், அவரும் மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்துடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். இதுகுறித்து சிலர் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனராம். ஜான் தங்கத்துக்கும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நிலவுவதால் இந்தப் புகார்மீது நடவடிக்கை இருக்கும் என்கின்றனர்.

மாஃபியாக்களை விரட்டியடித்த வன அலுவலர்

நீலகிரி மாவட்டம் தெற்கு மற்றும் வடக்கு வனக்கோட்டத்தை உள்ளடக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர் குருசுவாமி. வனவிலங்கு வேட்டை, மரக்கடத்தல் உள்ளிட்ட வனக்குற்றங்களைத் தடுக்க இரவு பகலாகச் சுழன்று வருகிறார். மரம் வெட்ட அனுமதி வழங்குவதையும் தடுத்து வருகிறார். இதனால் மரக்கடத்தலில் ஈடுபடும் டிம்பர் மாஃபியாக்கள் பலரும் இவர்மீது கடுமையான காட்டத்தில் உள்ளனர்.

ஊரடங்கை சாதகமாக்கி மரங்களை வெட்டி காசாக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மரம் வெட்ட அனுமதிக்குமாறு டிம்பர் மாஃபியா கும்பல் ஒன்று பெரும் கமிஷன் தொகையுடன் இவரை அணுகியுள்ளனர். சிறையில் தள்ளிவிடுவேன் என்று எச்சரித்து அவர்களை விரட்டியடித்துவிட்டார் வன அலுவலர். இதில் மேலும் கடுப்பான அந்தக் கும்பல் நீலகிரியில் உள்ள அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் உதவியுடன் இவரை வேறு இடத்துக்கு மாற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.

அ.தி.மு.க - பா.ஜ.க இடையே சடுகுடு!

துபாயில் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்ட போடி இளைஞர் நாடு திரும்ப உதவியது இந்திய வெளியுறவுத்துறை. இதற்கு தேனி எம்.பி-யான ரவீந்திரநாத் எடுத்த முயற்சிதான் காரணம் என்று அ.தி.மு.க-வின் ஐ.டி விங் சமூக ஊடகங்களில் பெருமையோடு தகவல் பரப்பியது. ஆனால், தேனி மாவட்ட பா.ஜ.க-வினரோ, `அந்த இளைஞருக்குத் தேவையான உதவிகளைச் செய்தது நாங்கள்தான். அதை மறைத்து அ.தி.மு.க-வினர் பெயர் எடுக்கப் பார்க்கின்றனர்’ எனச் சமூக ஊடகங்களில் விமர்சிக்க இரு கட்சியினருக்கும் இடையே சடுகுடு நடந்தது.

இதையடுத்து, நாடு திரும்பிய அந்த இளைஞரை நேரில் சந்தித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், அவரின் மருத்துவ தேவைக்காக பண உதவி செய்தனர். அதை போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த நிலையில், அந்த இளைஞருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. யார் யார் அந்த இளைஞரைச் சந்தித்தது என்ற லிஸ்ட் தயார் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. இப்போது இரண்டு கட்சியினர் இருந்த இடமும் தெரியவில்லை.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்ஸுக்காக ஆயுள் விருத்தி ஹோமம்?

திடீர் நெஞ்சுவலியால் துடித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், மே 24-ம் தேதி சூளைமேட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு ஒரு இருதய அடைப்பு நீக்கப்பட்டதாம். தேவையற்ற டென்ஷன், மன அழுத்தம் முதலியவற்றால்தான் அடைப்பு ஏற்பட்டதாகவும் ஒரு மாதத்துக்கு பூரண ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓய்ந்தவுடன் ஓ.பி.எஸ்ஸுக்காக ஆயுள் விருத்தி ஹோமம் செய்ய கேரளாவிலிருந்து வேத விற்பன்னர்களை அழைத்துவர ஓ.பி.எஸ் குடும்பம் முடிவெடுத்துள்ளது.

ஜாபர்சேட் மாற்றம்
என்ன காரணம்?

சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஜி.பி-யாக இருந்த ஜாபர் சேட் அந்தப் பொறுப்பில் இருந்து திடீரென மாற்றப்பட்டு, குடிமைப் பொருள் சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில் இருந்து வந்த பிரதீப் வி.பிலிப்ஸ் சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் வட்டாரத்தில் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ள இந்தத் திடீர் பணியிட மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் மீதுள்ள கிண்டி தொழிலாளர் குடியிருப்பு ஆக்கிரமிப்பு வழக்கை விரைந்து முடித்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க ஜாபர்சேட்டிடம் ஆட்சித் தலைமை அசைன்மென்ட் கொடுத்ததாம். அதை இதுவரை ஜாபர்சேட் செய்து முடிக்கவில்லை என்கின்றனர். இரண்டாவது காரணம், ஆர்.எஸ்.பாரதி கைது தகவலை முன்கூட்டியே தி.மு.க முகாமுக்கு பாஸ் செய்தது ஜாபர்சேட்டும் மற்றொரு சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரியும் சேர்ந்துதான் என ஆளும் தரப்பு சந்தேகிக்கிறது.

அதேசமயம், ஜாபர்சேட் காய் உளவுத்துறை டி.ஜி.பி ஆவதற்கு நகர்த்தியதும் சில காவல்துறை உயரதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லையாம். இந்தக் காரணங்களால்தான் ஜாபர்சேட் குடிமைப் பொருள் பிரிவு சி.ஐ.டி-க்கு தூக்கியடிக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த வருட இறுதிவரை ஜாபர்சேட்டுக்கு பணிக்காலம் உள்ளது. அதற்குள் அதிகாரமிக்க பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று அவரும் கடுமையாக மெனக்கெடுகிறார். ஆனால், ஒரு அடி ஏறினால் அவருக்கு ஆறு அடி சறுக்குகிறது.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

கோட்டாவில் வரும் பதவி வேண்டாம்!

வி.பி.துரைசாமியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி காலியானதும் தி.மு.க-வில் சத்தமில்லாமல் மல்லுக்கட்டு நடந்துள்ளது. ஏற்கெனவே முக்கிய பதவியை எதிர்பார்த்து காத்திருந்த ஆ.ராசாவை இந்தப் பதவிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். ஆனால், `கோட்டாவில் வரும் பதவி தனக்கு வேண்டாம். பொதுவில் தரப்படும் பதவி வேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம் ஆ.ராசா. அதன் பிறகே அந்தியூர் செல்வராஜை நியமித்துள்ளனர். பொதுக்குழு கூடும்போது பதவிப் பஞ்சாயத்து வரும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு