Published:Updated:

சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்?

சசிகலா - பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிப்பதற்கான வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார்.

சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்?

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிப்பதற்கான வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார்.

Published:Updated:
சசிகலா - பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் போலப் புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பரிதாப நிலைக்குத் தள்ளியிருக்கிறது காலம். ‘‘எந்த சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினாரோ... அதே சசிகலாவின் தலைமையைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்துவிட்டார் ஓ.பி.எஸ்’’ என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தமிழகத்தின் துணை முதலமைச்சர், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் வசம் பவர்ஃபுல் பதவிகள் இருந்தாலும், அந்த பவரை அவரால் பயன்படுத்த முடியவில்லை. சமீபத்தில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் ஓ.பி.எஸ். அப்போது அவரைச் சந்திக்கச் சென்றவர்களிடம் தனது மனக்குமுறல்களைக் கொட்டியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஒருவர், ‘‘அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிப்பதற்கான வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டார். அதற்காகக் கட்சியின் கட்டமைப்புகளை மாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். ஏற்கெனவே கட்சியின் அடிமட்டப் பதவியாக இருந்த ஊராட்சிச் செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் மாற்றம் நடக்கப்போகிறது. இந்த நடவடிக்கைகளில் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை. நடப்பதையெல்லாம் அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

அணிகள் இணைப்பின்போது, ‘ஆட்சிக்கு பழனிசாமி, கட்சிக்கு பன்னீர்செல்வம்’ என்றுதான் பேசப்பட்டது. ஆனால், சில காலம் மட்டுமே அதைக் கடைப்பிடித்தனர். ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சியிலும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்துகிறார் எடப்பாடி. பல மாதங்களாகப் பன்னீருக்கு இந்த வருத்தம் இருந்தது. ஆனால், `ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்’ என அமைதியாக இருந்துவிட்டார். இனியும் அமைதியாக இருந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்’’ என்றார்.

என்ன மாதிரியான முடிவுகள்? ஓ.பி.எஸ் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தோம்... ‘‘தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால்தான் பன்னீரை ஆதரித்தார் சசிகலா. ஆனால், இப்போது அ.தி.மு.க-வில் பன்னீர் உட்பட முக்குலத்தோர் சமுதாயத்தினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இது தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊராட்சிச் செயலாளர்கள் பதவி ரத்து, ஐ.டி பிரிவுக்கு நான்கு மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் என எந்த நடவடிக்கை பற்றியும் பன்னீருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் போராடி சிங்கை ரவிச்சந்திரன் பெயரை பட்டியலில் இடம்பெறச் செய்யும் அளவுக்கு பன்னீரின் நிலைமை மாறிவிட்டது. இதனால், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் எதையும் செய்ய முடியாத சூழலுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.

எனவே, சசிகலாவின் வருகையை வைத்து தனது அரசியல் கணக்கை ஆரம்பிக்கவிருக்கிறார் பன்னீர். அதற்கு பலமாக அவர் கருதுவதே அவரது சமூகத்தைத்தான். இப்போது பொறுப்பிலுள்ள மற்றும் பொறுப்பில் இல்லாத இந்நாள், முந்நாள் கட்சி நிர்வாகிகள் பலரும் சசிகலாவுக்குக் கடிதம் எழுதி வருகின்றனர். அதுவும் பன்னீருக்குத் தெரியவந்திருக்கிறது. இனியும் தாமதிக்காமல் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அரசியல் ஆட்டத்தை வேறுவிதமாக விளையாட நினைக்கிறார்.

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

`ஓ.பி.எஸ்-ஸும் அவர் மகனும் பா.ஜ.க-வுக்குப் போய்விடுவார்கள்’ என்று செய்திகள் கசிகின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. பா.ஜ.க-வுக்கு நெருக்கமான வி.ஐ.பி ஒருவரை சமீபத்தில் சந்தித்த பன்னீர், ‘எனக்கு மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. அம்மா இருந்தபோது எனக்கு இருந்த மரியாதைகூட இப்போது இல்லை. முதல்வரும் எஸ்.பி.வேலுமணியும்தான் கட்சிக்குள் பவர்ஃபுல்லாக இருக்கின்றனர். `துணை முதல்வர்’ என்ற அடிப்படையில்கூட என்னிடம் எந்த விவகாரத்தையும் முதல்வர் ஆலோசிப்பது கிடையாது. கட்சி விவகாரங் களிலும் அவரே முடிவெடுக்கிறார். ஆனால், ஒருபோதும் கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமில்லை’ என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்’’ என்றனர்.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்குப் பக்கபலமாக நின்ற முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். ‘‘பன்னீர் பின்னால் இனி ஒருவரும் செல்ல மாட்டார்கள். அவர் பின்னால் சென்ற எங்களை அணிகள் இணைப்பின்போது அடமானம்வைத்து அவர் பலன் அடைந்துகொண்டார். இப்போது அவருக்கே அங்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இனி, சசிகலா வந்தால்கூட அவருக்குக்கீழ் பணியாற்றவும் ஓ.பி.எஸ் தயாராக இருக்கிறார். பி.ஜே.பி-யில் அவர் இணைய வாய்ப்பில்லை. முக்குலத்தோர் சமூகத்தின் மதிப்பையும் அவர் இழந்துவிட்டார். அதனால், இரண்டாம்கட்ட தலைவராகவே அவரது அரசியல் பயணம் அமையும்” என்றார்.

என்ன செய்யப்போகிறார் பன்னீர்?