கட்டுரைகள்
Published:Updated:

தனிக்கட்சி ரூட்... கரை சேர்வாரா ஓ.பி.எஸ்.?

பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர்செல்வம்

கட்சி சின்னம் முடங்கிவிடும், அப்படி நடந்தால் எடப்பாடி தானாக முடங்கிவிடுவார் என திடமாக நம்புகிறது பன்னீர் தரப்பு.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மோதல், பன்னீர் - எடப்பாடிக்கு இடையே இன்னும் தீர்ந்தபாடில்லை. இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட அ.தி.மு.க-வின் வரவு - செலவுக் கணக்குகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றிருப்பதன் மூலம், அ.தி.மு.க-வின் சட்டவிதிகள், தலைமை மாற்றங்களையும் மறைமுகமாக ஏற்றிருக்கிறது தேர்தல் ஆணையம். இந்தச் சூழலில்தான், தனிக்கட்சி மூடுக்கு பன்னீரும் வந்திருக்கிறார். அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டம், சுற்றுப்பயணம் என்று அவர் திட்டமிடுவதால், களைகட்டியிருக்கிறது பன்னீரின் முகாம்.

கடந்த டிசம்பர் 21-ம் தேதி, தான் நியமித்த புதிய 88 மாவட்டச் செயலாளர்களுடனும், 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் பன்னீர். ஆலோசனைக் கூட்டத்தின்போது நிர்வாகிகளிடம் பேசிய பன்னீர், ‘‘நான்கரை வருடம் என்னை நானே வருத்திக்கொண்டு செயல்பட்டேன். கட்சியை எடப்பாடி கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. நாங்கள் விட மாட்டோம். தொண்டர்களின் செல்வாக்கை எடப்பாடி இழந்துவருகிறார். தனிக்கட்சி தொடங்க எடப்பாடிக்குத் தைரியம் இருக்கிறதா?” என்று எடப்பாடிக்குச் சவால்விட்டார்.

மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மூத்த நிர்வாகிகளுடன் தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் பன்னீர்செல்வம் நடத்தினார். அப்போது, பொதுக்குழு வழக்கு, தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, சசிகலாவுடன் இணைந்து செயல்படவும் சில நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தனிக்கட்சி ரூட்... கரை சேர்வாரா ஓ.பி.எஸ்.?

இது குறித்து நம்மிடம் பேசிய பன்னீருக்கு நெருக்கமான சிலர், ‘‘எடப்பாடி தரப்பு அனுப்பிய அ.தி.மு.க வரவு, செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருப்பதால் எங்களுக்கு ஏதோ சரிவு ஏற்பட்டுவிட்டதாகப் பிரசாரங்கள் பரப்பப்பட்டுவருகின்றன. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை யார் வரவு, செலவு கணக்கைத் தாக்கல் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். இரு அணிகளும் ஒன்றிணையாத பட்சத்தில் கட்சி சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அத்தகைய நிலை ஏற்படும்போது தனிச் சின்னத்தில் போட்டியிட நேரிடும். இதை எதிர்கொள்வதற்காகவே, புதிய நிர்வாகிகளைப் பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார். இதில், பெரும்பாலான நிர்வாகிகள் பழனிசாமியால் தூக்கியெறியப்பட்டவர்கள். ஏற்கெனவே, பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நாங்கள் தனியாக ஒரு பொதுக்குழுவை நடத்த வேண்டாம் என நினைக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் கண்டிப்பாக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவோம்” என்றார்கள்.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அவர் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ், ‘‘அம்மா நியமித்த 14 ஆயிரம் ஊராட்சிச் செயலாளர்களை எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கினார். இந்தப் பதவிகளை நாங்கள் முழுமையாக நிரப்பவிருக்கிறோம். இதுவரை, கிட்டத்தட்ட 15 ஆயிரம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து கிளைக் கழகம் முதல் ஊராட்சி வரையில் நிர்வாகிகளை நியமிக்கவிருக்கிறோம். எத்தனையோ முறை அ.தி.மு.க முடங்கியிருந்திருக்கிறது. அப்போதெல்லாம் தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியும், சின்னமும் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கட்சிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும்பட்சத்தில் தொண்டர்களின் ஆதரவுடன் சின்னத்தை மீட்டெடுப்போம். பொதுக்குழு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர், நாங்கள் தொண்டர்களையும், மக்களையும் நேரடியாகச் சந்திப்போம்” என்றார்.

தனிக்கட்சி ரூட்... கரை சேர்வாரா ஓ.பி.எஸ்.?

கட்சி சின்னம் முடங்கிவிடும், அப்படி நடந்தால் எடப்பாடி தானாக முடங்கிவிடுவார் என திடமாக நம்புகிறது பன்னீர் தரப்பு. ஆனால், டெல்லியின் கூட்டல்-கழித்தல் கணக்குகள்படி பார்த்தால், பன்னீர் தரப்பின் ஆசை உடனடியாக நிறைவேறும் அறிகுறி ஏதும் தென்படவே இல்லை. ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு, தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் என அடுத்தடுத்து எடப்பாடிக்குச் சாதகமான நகர்வுகளே டெல்லியிலிருந்து நகர்த்தப்படுகின்றன.

தனிக்கட்சி ரூட்டுக்கு மாற ஆரம்பித்திருக்கிறார் பன்னீர். இந்த ரூட்டாவது அவரைக் கரை சேர்க்குமா என்பது, போகப் போகத் தெரிந்துவிடும்.