கட்டுரைகள்
Published:Updated:

நிர்வாகிகள் நியமனம்... பன்னீருக்கு பலன் தருமா?

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் ஆணையத்தின்படி இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற நடைமுறைதான் இருக்கிறது

அ.தி.மு.க-வின் பொதுக்குழு தொடர்பான வழக்கு, வரும் நவம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம், முக்கியமான தீர்ப்பும் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்’ என்கிற அடையாளத்தோடு, நிர்வாகிகள் நியமனத்தில் வேகம் காட்டுகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவைத்தலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர், இளைஞரணி, மாணவரணி, வர்த்தக அணி என அனைத்து அணிகளுக்குமான செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாகவும் செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ‘இந்தப் புதிய நியமனங்கள் பன்னீரின் அரசியல் நகர்வுகளுக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும், எடப்பாடி தரப்புக்கு நெருக்கடியைக் கொடுக்குமா?’ கேள்விகளுடன் அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

நிர்வாகிகள் நியமனம்...
பன்னீருக்கு பலன் தருமா?

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன்,

“உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என எடப்பாடி தரப்பு எழுப்பும் கேள்விக்கும் ஓ.பி.எஸ் பதில் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது. `எனக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள், அமைப்புரீதியாகவும் என்னால் உங்களுடன் வலுவாக மோத முடியும்’ என்று காண்பிப்பதற்காகவே நிர்வாகிகளை நியமித்துவருகிறார் அவர். இதனால், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க வாக்குகள் பிளவுபடும். ஓ.பி.எஸ்., தினகரனை மீறி எடப்பாடியால் வெற்றிபெற முடியாது. நிச்சயமாக இந்த நிர்வாகிகள் நியமனம் எடப்பாடி தரப்புக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதுதான் யதார்த்தம்’’ என்றார்.

ஆனால், “தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகத்தான் இது போன்ற வேலைகளை பன்னீர் செய்துவருகிறார். இதனால் ஒரு பயனும் இல்லை’’ என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

இது குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் பேசுகையில், “எல்லா இயக்கங்களிலும் அதிருப்தியாளர்கள் என ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க, `நான் இருக்கிறேன்’ என தவறான நம்பிக்கையைக் கொடுத்து பதவியைக் கொடுத்துவருகிறார் ஓ.பி.எஸ். இவர்களில் பெரும்பாலானவர்கள், ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போது அவர் கையெழுத்திட்டு கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள். தன்னைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இன்றளவும் ‘க்ளெய்ம்’ செய்துகொள்ளும்

ஓ.பி.எஸ்., ஒழுங்கு நடவடிக்கையால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்களுக்கு, தற்போது பதவி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது நகைமுரணாக இருக்கிறது. இவரின் நியமன அறிவிப்புகள் இந்த நேரத்தில் ஒரு பேசுபொருளாக இருக்குமே தவிர, மாபெரும் இயக்கமான அ.தி.மு.க-வுக்குள் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்றார் நம்பிக்கையோடு.

ப்ரியன், ஷ்யாம்
ப்ரியன், ஷ்யாம்

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். “சட்டரீதியாக ஓ.பி.எஸ் செய்யும் இந்த நியமனங்கள் எதுவும் செல்லாது’’ என்றபடி பேசினார் ஷ்யாம். “அ.தி.மு.க-வில் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்கிற தோற்றத்தை உருவாக்குவதற்காகவே ஓ.பி.எஸ் இந்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், அவரின் ஒருங்கிணைப்பாளர் பதவி செப்டம்பர் 2021-லேயே காலாவதியாகிவிட்டது. 2021 தீர்மானத்தை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவே இல்லை. அதனால் இந்த நியமனங்கள் எதுவும் செல்லாது. எடப்பாடி தரப்புக்கும் இது எந்த நெருக்கடியையும் உருவாக்காது. காரணம், ஓ.பி.எஸ் தரப்பில் நியமனம் செய்யப்படுபவர்கள் யாரும் உள்ளூரில் செல்வாக்கு இருப்பவர்களைப் போலவோ, பெரிய தலைவர்களாகவோ தெரியவில்லை’’ என்றார்.

இறுதியாக இந்த விமர்சனங்கள் குறித்து ஓ.பி.எஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம். “தேர்தல் ஆணையத்தின்படி இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற நடைமுறைதான் இருக்கிறது. அதன்படி ஓ.பி.எஸ் இப்போது புதிய நிர்வாகிகளை நியமித்துவருகிறார். கட்சியைவிட்டு யாரையும் நிரந்தரமாக நீக்கவில்லை. அவர்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதில் எந்தத் தவறும் இல்லை. தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, சுற்றுப்பயணம் செல்லவும் அண்ணன் ஓ.பி.எஸ் முடிவெடுத்துவிட்டதால் எடப்பாடி தரப்புக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது’’ என்கிறார் விடாப்பிடியாக.

பன்னீரின் நியமனங்கள் செல்லுமா, செல்லாதா என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டியே இருக்கிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, தனக்கென ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதில் வேகம் காட்டுகிறார் பன்னீர். காலம் என்ன விடையை ஒளித்துவைத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.