Published:Updated:

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தைவைத்து விளையாடியதுபோல, சிறையிலிருந்து சசிகலா வெளிவந்த நாளிலிருந்து அவரை எடப்பாடிக்கு எதிரான துருப்புச்சீட்டாகவைத்து ஆட ஆரம்பித்தார் பன்னீர்.

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தைவைத்து விளையாடியதுபோல, சிறையிலிருந்து சசிகலா வெளிவந்த நாளிலிருந்து அவரை எடப்பாடிக்கு எதிரான துருப்புச்சீட்டாகவைத்து ஆட ஆரம்பித்தார் பன்னீர்.

Published:Updated:
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

மிகப் பிரபலமான காமெடிக் காட்சி அது. `சூனாபானா’ என்கிற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருப்பார். தனது ஆட்டை வடிவேலு திருடிவிட்டதாக ஊர்ப் பஞ்சாயத்தில் புகார் அளித்திருப்பார் நடிகர் திடீர் கண்ணையா. அதற்கான பஞ்சாயத்தில், வடிவேலு செய்யும் அலப்பறைகளைக் கண்டு பயந்துபோய், “ஆடு காணாமல் போகலை, அப்படி நான் கனவுதான் கண்டேன்” என மொத்தமாக அந்தர் பல்டி அடிப்பார் கண்ணையா. ‘அப்படியொரு காட்சியைத்தான் அரங்கேற்றியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்’ என்று கலகலப்பும் கடுகடுப்புமாகப் பேசிக்கொள்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்!

மறைந்த முன்னாள் முதல்வர் ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது, நீதி விசாரணை வேண்டும்’ என தர்மயுத்தம் என்கிற பெயரில் உண்ணாவிரதம், ஊர் ஊராகப் பொதுக்கூட்டம் எனப் பல சம்பவங்களால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அதிரடித்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம். அவரது குற்றச்சாட்டுகள் அப்போது சசிகலாவை மையமிட்டே முன்வைக்கப்பட்டன. ஆனால், இன்று அவரே, ‘சசிகலா எந்தச் சதித்திட்டமும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில், எனக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு’ எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார். கூலாகச் சிரித்துக்கொண்டே அடுத்த நாள் அவர் சட்டமன்றத்துக்கும் சென்றுவிட்டார். ஆனால், பன்னீரின் இந்த அதிரடி பல்டியை அ.தி.மு.க முன்னணித் தலைவர்களால், நிர்வாகிகளால், தொண்டர்களால் அவ்வளவு எளிதாகக் கடக்க முடியவில்லை!

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

‘தர்மயுத்தம்’ ஒரு ஃப்ளாஷ் பேக்!

2016, டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார். ஆனால், அதிக நாள்கள் அவரால் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. 2017, பிப்ரவரி 5-ம் தேதி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில், “அவமானப்படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள்’’ எனச் சொல்லி சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார் பன்னீர்செல்வம். அதுமட்டுமல்லாமல், “அம்மா மரணத்துக்கு நீதி வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ‘தர்மயுத்தத்தை’ ஆரம்பித்தார். கண்ணீருடன் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்தார். பன்னீரின் இந்த ‘பரிதாபம் கோரும்’ அரசியல், அவருக்குத் தமிழகம் முழுவதும் ஓரளவு அனுதாபத்தைப் பெற்றுக்கொடுத்தது. மற்றொருபுறம் `சசிகலா தரப்புதான் ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம்’ என்கிற எண்ணம் தமிழக மக்களிடம் பரவ இந்தச் சம்பவங்கள் காரணமாகின.

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இந்த விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆதங்கத்தோடு கொட்டித் தீர்த்தனர். “அம்மாவின் மரணத்துக்குப் பிறகு வந்த அவருடைய முதல் பிறந்தநாள்விழா, ஆர்.கே.நகரில் பன்னீர் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய பன்னீர், ‘அம்மாவின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கைகளுக்குள் சென்றுவிட்டன. அ.தி.மு.க-வை மீட்டெடுக்கத்தான் தர்மயுத்தம் நடக்கிறது. இதில் வெற்றிபெறப்போவது நாம்தான். மத்திய, மாநில அரசுகள், அம்மாவின் மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்கள் குறித்து உரிய நீதி விசாரணை செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அம்மாவின் மரணத்திலிருக்கும் சந்தேகங்கள் தொடர்பாகச் சில நடவடிக்கைகளை நான் தொடங்கியதாலேயே, என்னுடைய பதவிக்குச் சிக்கல் ஏற்பட்டது. அம்மாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்’ என்று வீராவேசமாகப் பேசினார்.

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

சசிகலா வெளியே... பன்னீர் உள்ளே!

எதிர்பாராதவிதமாக, சசிகலாவின் ‘முதல்வர் கனவு’ தகர்க்கப்பட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். சிறை செல்வதற்கு முன்பாக, பன்னீர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமியை அமரவைத்து அழகு பார்த்தார். சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போன சில மாதங்களில் காட்சிகள் மாறின. பன்னீருடன் சமாதானம் பேச முடிவெடுத்தார் பழனிசாமி. இரண்டாம் கட்டத் தலைவராகவே இருந்து பழக்கப்பட்ட பன்னீர் ‘எந்தப் பதவியும், பவரும் இல்லாமல் எத்தனை நாள்கள் ஓட்டுவது’ என்கிற மனநிலையில் இருந்தார். அதனால், கோரிக்கைகள் சிலவற்றை மட்டும் முன்வைத்து தனது அணியை எடப்பாடி அணியுடன் உடனே இணைத்துக்கொண்டார். அதற்குப் பிரதிபலனாக, `கட்சியின் ஒருங்கிணைப்பாளர்’ என்கிற முக்கியப் பதவியைத் தனக்குப் பெற்றுக்கொண்டார். ஆனால், பன்னீரை நம்பி அவர் பின்னால் படையெடுத்த பலருக்கு அப்போதே கல்தா கொடுக்கப்பட்டது. அதைக் கண்டும் காணாமல் அமைதியாகவே வேடிக்கை பார்த்தார் பன்னீர். ‘உடனடியாகக் கட்சிக்குள் எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணன் பொறுமையாக இருக்கிறார்’ என அவரை நம்பிச் சென்ற நிர்வாகிகள் அப்போது அமைதி காத்தனர். ஆனால், பன்னீரின் ஆட்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டபோதும், பன்னீர் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. இதனால், `பன்னீரை நம்பினால் இனி நாம் அம்போவாகிவிடுவோம்’ என்று பலரும் பழனிசாமி பக்கம் பாதை மாறினார்கள். அவருடன் நெருக்கமாக இருந்த கே.சி.பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட பன்னீர்செல்வமே கையெழுத்திட்டார். லெட்சுமணன், சுந்தரம் உள்ளிட்டவர்கள் கட்சியைவிட்டே விலகி தி.மு.க-வில் சேரும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்தே பன்னீருக்குப் பக்கபலமாக இருந்த கே.பி.முனுசாமியும் எடப்பாடி பக்கம் சென்றார். பன்னீரின் விசுவாசியாக இருந்த மைத்ரேயன், அ.தி.மு.க-வில் இருக்கிறாரா, இல்லையா என்பதே இன்றைக்கு வரை கேள்விக்குறியாக இருக்கிறது. தன்னை நம்பியவர்களையெல்லாம் நட்டாற்றில்விட்ட பன்னீர், தன்னுடைய மகன் ரவிந்தீரநாத்துக்கு மட்டும் மன்றாடி சீட் வாங்கி, அவரை தேனி தொகுதியின் எம்.பி-யாக அமரவைத்தார். அதேநேரம், பன்னீர் தர்மயுத்தம் தொடங்கிய காலம் முதல் அவரை நம்பி, பின்னால் வந்த பத்து எம்.பி-க்களுக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட்கூட கிடைக்காமல் போனது. அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை பன்னீர்.

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

ஆணையத்தைப் பயன்படுத்திக்கொண்ட பன்னீர்!

தனி அணி அமைத்தபோது, எதிர்த்தரப்பை அச்சுறுத்தும்விதமாக எழுப்பிய விசாரணை ஆணைய கோரிக்கையை, அ.தி.மு.க-வுக்குள் வந்த பிறகு சசிகலாவுக்கு வைத்த செக்காகப் பயன்படுத்திக்கொண்டார் பன்னீர். அவரைப் பொறுத்தவரை ஆறுமுகசாமி ஆணையம் என்பது ஒரு ஸ்ட்ராட்டஜி. அந்த ஆணையத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், ஆணையம் உருவாகக் காரணமாக இருந்தவரும், பிரதான சாட்சியாகக் கருதப்பட்டவருமான பன்னீருக்கு எட்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அது குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோதும், அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யவே இல்லை. ஆனால், ஆட்சி மாற்றம் வந்த பிறகு, அவரால் பழையபடி ஆணையத்துக்கு மட்டம் போட முடியவில்லை. கடைசியாக, ஒன்பதாவது சம்மனுக்கு ஆணையத்தில் ஆஜரானார். விசாரணையில் ‘ஆணையம் அமைக்கப்பட்டதே அவசியமில்லாதது’ என்பது போன்ற கருத்தைப் பதிவுசெய்து அந்தர் பல்டி அடித்ததோடு ‘சின்னம்மா எந்தச் சதித் திட்டமும் தீட்டவில்லை. அவர்மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு’ என்று மொத்தமாக ஆணையத்தின் நோக்கத்தையே குழப்பியடித்துவிட்டார். இரண்டு முறை தன்னை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த அம்மாவின் மரணத்தை, தனது பதவிக்கான ‘முதலீடாக’ பயன்படுத்திக்கொண்ட பன்னீரின் சந்தர்ப்பவாத அரசியல் என்பது, அம்மாவின் ஆன்மாவுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம்.

சசிகலா எனும் துருப்புச்சீட்டு!

சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தைவைத்து விளையாடியதுபோல, சிறையிலிருந்து சசிகலா வெளிவந்த நாளிலிருந்து அவரை எடப்பாடிக்கு எதிரான துருப்புச்சீட்டாகவைத்து ஆட ஆரம்பித்தார் பன்னீர். எப்போதெல்லாம் அ.தி.மு.க-வில் தனக்கு முக்கியத்துவம் குறைவது போன்று அவருக்குத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சசிகலா என்கிற துருப்புச்சீட்டைக் கையிலெடுப்பது அவரின் வாடிக்கையானது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவரைக் கட்சிக்குள் இணைப்பது குறித்து அவ்வப்போது ஏதாவது கருத்துகளைப் பற்றவைத்து கட்சியைப் பதம் பார்ப்பார். ‘சசிகலா மீது எனக்குச் சந்தேகமும் இல்லை; வருத்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான்காண்டுக் காலம் சசிகலா சிறையில் இருந்திருக்கிறார். தற்போதைய கட்சி அமைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டால் அவரை இணைத்துக்கொள்வதைப் பற்றிப் பரிசீலிக்கலாம்’ என்று கடந்த ஆண்டு, மார்ச் மாதம்கூட மீண்டும் பற்றவைத்தார். அதற்குக் காரணம் அடுத்த சில மாதங்களில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவிருந்தது. தனக்குச் சாதகமான சில காரியங்களை முடித்துக்கொள்ள பன்னீருக்கு சசிகலா அடிக்கடி தேவைப்பட்டார். ஆனாலும், சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாரா அல்லது எதிராகச் செயல்படுகிறாரா என்பது யாருக்கும் புரியாதபடி பார்த்துக்கொண்டார் பன்னீர். சமீபத்தில் அவருடைய சொந்த மாவட்டத்தில், அதுவும் அவரது பண்ணை வீட்டில்வைத்தே ‘சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்’ என நிர்வாகிகள் போட்ட தீர்மானத்தைப் புன்னகையோடு பெற்றுக்கொண்டார். அண்ணனே ஆதரிக்கத் தயாரிக்கவிட்டார் என்கிற நம்பிக்கையில், சசிகலாவைச் சந்திக்கச் சென்றார் பன்னீரின் சகோதரர் ஓ.ராஜா. கடைசியில் சொந்தத் தம்பியையே பலிகடாவாக்கி அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார் பன்னீர். விடிந்தால் ஒரு பேச்சு, இருண்டால் ஒரு பேச்சு என்பதுதான் பன்னீரின் அரசியல். கடந்த ஐந்து ஆண்டுகளில் பன்னீர் அடித்த பல்டிகளைக் கணக்கிட வேண்டிமென்றால் கால்குலேட்டர் வேண்டும். ஆணைய விசாரணையில் ‘சின்னம்மா நல்லவர்’ என்று சொன்னாலும் அதை சசிகலா முழுமையாக நம்ப மாட்டார். ஏனென்றால், ஆணையமாக இருக்கட்டும், சசிகலா வெளியேற்றமாக இருக்கட்டும்... இரண்டுமே பன்னீர் பற்றவைத்த நெருப்பு. இப்போது அவை இரண்டையும் அக்கறையோடு ஊதி அணைப்பதாக பாவிக்கிறார். ஆனால் அவரை யாரும் நம்ப மாட்டார்கள்” என்றார்கள் கோபத்தோடு.

சந்தர்ப்பவாதம்... துரோகம்... குழப்பியடிக்கும் பன்னீர்!

“நாங்கள் பலியாகத் தயாரில்லை!”

ஆணையத்தில் பன்னீரின் பேச்சு குறித்து சசிகலா ஆதரவாளர்களிடம் கேட்டோம். “பன்னீரை நம்பிப் போனவங்க எல்லாருமே இன்னிக்கு நட்டாத்துல நிற்கிறாங்க. இனிமே, அவர் பின்னாடி போக யாரும் தயாராக இல்லை. 2017 காலகட்டத்துல பதவிக்காக, பொதுவெளியில பன்னீர் என்ன வேணா பேசியிருக்கலாம். ஆனா, ஆணையத்துல அப்படிப் பேசினா அவர் மாட்டிக்குவாருன்னு அவருக்குத் தெரியும். இப்போ அவருக்கு சின்னம்மாவோட ஆதரவு தேவை. அதனால, சின்னம்மா பேரைச் சொல்லி, சமூகரீதியாகத் தனக்கு ஆதரவு தேட முயல்கிறார். நாளைக்கு எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் பெரிய பிரச்னைகள் வந்தால், தனக்கு ஆதரவா யாரும் இல்லாமப் போயிடக் கூடாதுங்கிறதுக்கான தற்காப்பு ஏற்பாடுதான் இது. அவரின் குழப்பத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் நாங்கள் பலியாகத் தயாரில்லை’’ என்றார்கள்.

உஷாரான எடப்பாடி!

‘பன்னீர் எப்போது வேண்டுமானாலும் தனக்கு எதிரான வேலைகளில் ஈடுபடலாம் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான வேலைகளைத் துரிதமாக்கியிருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வட மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘நிர்வாகரீதியாக பன்னீரை ஒருபோதும் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து தூக்கவோ, கட்சியிலிருந்து ஓரங்கட்டவோ முடியாது என்பது எடப்பாடிக்குத் தெரியும். அதனால், பன்னீரின் ஆதரவு வட்டத்தைக் குறைத்து, தனது ஆதரவு வட்டத்தை விரிவாக்க முடிவுசெய்துவிட்டார் எடப்பாடி. கட்சியில் கிளைக்கழக அளவில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மார்ச் 27-ம் தேதி முதற்கட்டமாக 25 மாவட்ட நகரம், ஒன்றியம், வட்டம், பகுதிச் செயலாளர் பொறுப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அந்தத் தேர்தல்கள் முடிந்ததும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்படும். கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், மேற்கண்ட தேர்தல்களில் எடப்பாடி மொத்தமாக ஸ்கோர் செய்தாக வேண்டும். ஏற்கெனவே கட்சியிலிருக்கும் மாவட்டச் செயலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் என்றாலும், கொஞ்ச நஞ்சம் இருக்கும் பன்னீர் மற்றும் சசிகலா ஆதரவாளர்களையும் வரும் உட்கட்சித் தேர்தலில் கடுமையாக ஃபில்டர் செய்ய வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். அதேபோல, பொதுக்குழுவிலும் தன் ஆள்களை நிரப்பி, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார் எடப்பாடி. இப்போதைய சூழலில் இந்த உட்கட்சித் தேர்தல் நடந்தால், தனக்குக் கட்சிக்குள் எதுவும் மிஞ்சாது என்பதை உணர்ந்து, அதைத் தடுக்க முயன்றுகொண்டிருக்கிறார் பன்னீர்’’ என்றார்கள்.

“ஜெயலலிதாவின் மரணத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டது, சசிகலாவை வெளியேற்றக் காரணமாக இருந்தது, தன்னை நம்பி வந்தவர்களைக் கைவிட்டது, கட்சிக்குள் அவ்வப்போது குட்டிக் கலகங்களை உண்டாக்கி நிர்வாகிகளை நிம்மதியிழக்கச் செய்வது, கட்சியின் வீழ்ச்சியைக்கூட தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது, எதிலும் உறுதியான கருத்து இல்லாதது என பன்னீரின் சந்தர்ப்பவாதத்தால், அவர் யாருக்கும் நம்பிக்கைக்குரியவராக இல்லை. அவருக்கும்கூட!” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பன்னீர் தன்னைப் பரிசீலித்துக்கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது!