Published:Updated:

``திமுக அரசு விடியல் அரசு இல்லை... விடியா அரசு!" - தேனி ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் காட்டம்!

ஓ.பன்னீர்செல்வம்
News
ஓ.பன்னீர்செல்வம்

``கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசான தி.மு.க-வை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்." - ஓ.பி.எஸ்

தி.மு.க அரசைக் கண்டித்து தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பங்களாமேடு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``அடிப்படை உறுப்பினர்களால்தான் அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி‌ஆரின் கனவை நிறைவேற்றியிருக்கிறது தற்போதைய தலைமை. இன்றைக்கு எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் அடிப்படையில்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பொறுப்பு தேந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நெற்றியில் உதயசூரியன் சின்னத்தையும், கையில் தி.மு.க கொடியுடன் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் நடித்து தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்தான் எம்.ஜி‌.ஆர். எம்‌.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்தான் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டன. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக (அ.தி.மு.க) ஆட்சி அமைத்தது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அமைந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் ஆட்சி செய்தது.‌ கொடிய நோயான கொரோனா காலத்திலும் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடைந்தன. அ.தி.மு.க ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்காக 525 வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகிறது தி.மு.க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடான பிரச்னைகளில் தமிழகத்துக்கு உரிமை கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. அதற்கு உதாரணம்தான் அண்மையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியாமல் விட்டுக்கொடுத்தது.

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அ.தி.மு.க போராட்டம் நடத்தியதால்தான், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 4-வது முறையாக 142 அடி உயர்த்தப்பட்டது.

மேலும், ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 நிவாரணம் வழங்குவோம் என்று `ஸ்டாலின்தான் வாராரு, விடியல்தான் தரப்போறாரு!' எனப் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தனர்.‌ ஆனால் விடியல் அரசு என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு ஒரு விடியா அரசாகத் திகழ்கிறது. ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தும், அதைக் குறைக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.‌

அ.தி.மு.க
அ.தி.மு.க

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தகுந்த சீருடைகள் வழங்காமல் இருக்கிறது. அரசு ஊழியர்கள் எங்கள் நண்பன் எனச் சொல்லி வாக்கு வாங்கிய தி.மு.க அரசு தற்போது அவர்களை ஏமாற்றிவருகிறது. எனவே, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசான தி.மு.க-வை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்'' என்றார்.