அலசல்
அரசியல்
Published:Updated:

ஷாக்... சாபம்... எச்சரிக்கை! - திருச்சியில் கிச்சுகிச்சு மூட்டிய ஓ.பி.எஸ் டீம்

ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

தொண்டர்களின் உழைப்பால், உதிரத்தால், உயிர் கொடுத்து வளர்க்கப்பட்ட அ.தி.மு.க எனும் இயக்கம், யார் கையில் இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.

அ.தி.மு.க எனும் முரட்டுக்காளையை இ.பி.எஸ் டீம் தும்பைப் பிடித்து அழைத்துச்செல்ல, ஓ.பி.எஸ் டீம் வாலையாவது பிடித்துவிட வேண்டும் என மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஏப்ரல் 24-ம் தேதி திருச்சி மாநாட்டுக்கு தீவிரமாகத் தயாராகிவருகிறது ஓ.பி.எஸ் தரப்பு. ‘எப்படியாவது லட்சக்கணக்கில் கூட்டத்தைக் கூட்டி, நாம் யாரென்று காட்டிவிட வேண்டும்’ என்ற இலக்கோடு அந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 10-தேதி திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் நடந்தது.

‘திருச்சி மாநாட்டை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்தான் முன்னின்று சிறப்பாக நடந்த வேண்டும்’ என எல்லோரும் பேசினார்கள். ஆனால், வெல்லமண்டி நடராஜனுக்கு, கூட்டத்தில் பேச வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. கீழே அமர்ந்திருந்த வெல்லமண்டி நடராஜனுக்கு, ஓ.பி.எஸ் வந்த பிறகுதான் மேடையில் ஏற அனுமதியே கிடைத்தது.

‘அம்மாவை வைத்து பிரமாண்ட மாநாடு நடத்திய கு.ப.கி (கு.ப.கிருஷ்ணன்), இந்த மாநாட்டையும் சிறப்பாக நடத்துவார். அவர் கு.ப.கி அல்ல துப்பாக்கி’ என பில்டப் கொடுக்க, கு.ப.கிருஷ்ணனோ மழையில் நனைந்த ஊசிப் பட்டாசுபோல அமைதியாக இருந்தார். கூட்டத்தில் மாநாடு சம்பந்தமாக அனல் பறக்கும் ஆலோசனைகள் அரங்கேறும் என நினைத்த வேளையில், நடந்தது எல்லாமே கிச்சுகிச்சு மூட்டும் காமெடிகள்தான்.

ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

முதலில் மைக் பிடித்த துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், “தொண்டர்களின் உழைப்பால், உதிரத்தால், உயிர் கொடுத்து வளர்க்கப்பட்ட அ.தி.மு.க எனும் இயக்கம், யார் கையில் இருக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. ஏப்ரல் 24-ம் தேதி திருச்சி ஸ்தம்பிக்க வேண்டும். அந்தக் குரல் டெல்லி வரை கேட்க வேண்டும். ‘மீண்டும் ஒரு தர்மயுத்தம்’, ‘அண்ணன் ஓ.பி.எஸ் அழைக்கிறார்!’ என ஊரிலுள்ள அத்தனை சுவர்களிலும் எழுதுங்கள். போஸ்டர் அடித்து ஒட்டுங்கள். தொலைக்காட்சிகளில் தினமும் 20 முறையாவது விளம்பரம் வர வேண்டும்” எனப் பேசி, நிர்வாகிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே கரன்சி ‘ஷாக்’ கொடுத்தார்.

அடுத்ததாக மைக் பிடித்த கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், “சமீபத்துல ஒருத்தன் சீர் கொண்டு போனதைப் பார்த்துருப்பீங்க... அந்தச் சீர்ல குட்கா பாக்கெட்டெல்லாம் இருந்துச்சாம். எதுக்குடா சீர்... எடப்பாடி என்ன வயசுக்கா வந்துட்டாரு... 24-ம் தேதி அண்ணன் ஓ.பி.எஸ் படை கொண்டுவருகிற சீரைப் பார்க்கத்தானே போறீங்க... அபகரிப்பு அரசியல் செய்து, இத்தனை கோடி தொண்டர்களுடைய சாபத்தைச் சுமக்கிறார் எடப்பாடி. வானகரத்தில் ஜூன் 23-ல் எடப்பாடி செய்த அயோக்கியத்தனங்களுக்கு திருச்சி தீர்ப்பெழுதும். உப்பைப் போட்டு அம்மாவினுடைய பெயரைச் சொல்லி சாப்பிடுற தொண்டன் திருச்சிக்கு வருவாண்டா... மாநாட்டுக்கு வாகனம் கொடுக்கலைன்னாக்கூட, நாங்க சிவகங்கையில இருந்து நடந்தே வருவோம். திருச்சியில் கடல் இல்லை. அந்தக் குறையை ஓ.பி.எஸ் படை மனிதத் தலைகளால் கொண்டு வந்து நிரப்பி, அலைகொண்ட கடலாக ஆர்ப்பரித்துக் காட்டுவோம். 24-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடிக்கு ஒரு மாசமாவது லூஸ்மோஷன் போகணும்” எனச் சாபம்விட்டு அமர்ந்தார். அதுவரை எனர்ஜியில்லாமல் இருந்த கூட்டம் அப்போதுதான் லேசாக சார்ஜ் ஆனது.

ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

“அம்மாவுடைய கழக நிரந்தர பொதுச்செயலாளர் பதவியைப் பிடுங்கிக்கொண்டு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போல தொப்பியை மாட்டுனா, அதற்கு அந்த இரு பெரும் தலைவர்களும் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார்கள்’ என்று துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியனும் தன் பங்குக்கு எடப்பாடிக்குச் சாபம்விட்டார்.

வேலைகளை முன்னின்று செய்யும் கு.ப.கிருஷ்ணன் பேசுகையில், “திருச்சிக்கு நடு மையத்தில் இருக்குற மலைக்கோட்டை 24-ம் தேதி அதிரணும். எல்லாருக்கும் வண்டி ஏற்பாடு செஞ்சு தர்றோம். மாநாட்டுக்கு பயங்கரமான கூட்டம் கூடணும். ஊருக்கு ஒரு வண்டியாவது புறப்பட்டு வந்தே ஆகணும். ‘நன்றி சொல்கிற வரை சீட்டைவிட்டு நகரக் கூடாது’ என மாநாட்டுக்கு வரும்போதே தொண்டர்களிடம் சொல்லி அழைத்து வாருங்கள். நமக்கு எதிரிகள் ஜாஸ்தி. காலியான சேர்களை போட்டோ எடுத்துப்போடுவார்கள். அந்த அவலநிலைக்கு நம்மைத் தள்ளிவிடாதீர்கள்” எனப் பேச, ஓ.பி.எஸ்-ஸே ஒரு கணம் பதறிப்போனார்.

ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஓ.பி.எஸ் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

“அரசியலில் நன்றியே இல்லாத ஒரு ஜென்மம் என்றால் அது எடப்பாடிதான். அவர்களுக்கு நாம் யாரென்று காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. எல்லா மாவட்டச் செயலாளர்களும் சாரை சாரையாகக் கூட்டத்தை கூட்டிவர வேண்டும். உங்களுடைய மக்கள் செல்வாக்கை, கூட்டிவரும் கூட்டத்தின் மூலம் திருச்சியில் காட்டுங்கள். 88 மாவட்டச் செயலாளர்களில் 20 மாவட்டச் செயலாளர்கள் மிதமாகத்தான் செயல்படுகிறீர்கள். எல்லாம் எனக்குத் தெரியும்” என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச, என்ன ரியாக்‌ஷன் கொடுப்பதெனத் தெரியாமல் நிர்வாகிகள் தலையைச் சொறிந்தபடி கையைத் தட்டினர்.

இறுதியாகப் பேசிய ஓ.பி.எஸ், “தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை உருவாக்கினார். உலகத்திலேயே எந்த அரசியல் இயக்கமும் தராத உரிமையாக, யார் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிற சக்தியை, தொண்டர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு சர்வாதிகாரத்தின் உச்சத்தில், ஒரு கூட்டம் அபகரிப்பு அரசியலைச் செய்கிறது. அ.தி.மு.க-வில் ஒரு சாதாரணத் தொண்டனாக இருப்பதே பெருமை என்ற நிலையை அம்மா உருவாக்கினார்கள். அதற்கு ஒன்றைரைக் கோடித் தொண்டர்களும் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச மரியாதையைத் தந்தோம். அம்மாவுக்குக் கொடுத்த அந்த மரியாதையை ரத்து செய்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., அம்மா உருவாக்கிய தொண்டர் சக்தியை திருச்சிக்கு அழைத்து வந்து, ஏப்ரல் 24-ல் நம்முடைய வலிமையைக் காட்டுவோம்” என சுரத்தில்லாமல் பேசி முடித்தார்.

மாநாடாவது சீரியஸாக இருக்குமா?!