Election bannerElection banner
Published:Updated:

ஸ்டார் தொகுதிகள்: பன்னீருக்கு போக்குக் காட்டும் போடி!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க-வின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், வீட்டுக்கு வீடு வெயிட்டாக கவனிக்கத் தயாராகிவருகிறது அ.தி.மு.க முகாம்.

போடிநாயக்கனூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தி.மு.க-வின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான மோதல் தேனி அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே பிரசித்தம். எனவே, போடி தேர்தல் களத்தில் போட்டி அனல் பறக்கிறது.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வில் இணைந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அங்கு தினகரனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால், தி.மு.க-வில் இணைந்து முதலில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், அடுத்து மாவட்டச் செயலாளராகவும் ஆனார். அ.தி.மு.க-வில் இருந்த காலகட்டத்திலேயே பன்னீருக்கும் தங்கத்துக்கும் இடையே உரசல் இருந்தது. எதிர் முகாமான தி.மு.க-வுக்கு தங்கம் வந்துவிட்டதால், இந்த உரசல் திகுதிகுவெனப் பற்றி எரிகிறது. அதனாலேயே, ஆண்டிப்பட்டி தொகுதியை எதிர்பார்த்த தங்க தமிழ்ச்செல்வனை வான்ட்டடாக போடியில் களமிறக்கியிருக்கிறது தி.மு.க தலைமை.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை காரணமாக தொகுதியிலிருக்கும் பிள்ளைமார் சமுதாய மக்கள், அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். சமீபத்தில் போடியில் வ.உ.சி சிலைத் திறப்பில் கலந்துகொண்ட பன்னீருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குச் சாட்சி. அதேபோல, DNT (சீர்மரபினர் பழங்குடியினர்) சான்றிதழ் பிரச்னை காரணமாக, முக்குலத்தோர் சமுதாய மக்களும் பன்னீர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கு நாயக்கர் சமூக வாக்குகள் கணிசமாக விழுவது வழக்கம். ஆனால், இங்கு அ.ம.மு.க வேட்பாளராக அந்தச் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி களமிறங்குவதால், நாயக்கர் சமூக வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் பிள்ளைமார், நாயக்கர் சமூகப் பெரியவர்களைத் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். பூதிப்புரம், ஆதிபட்டி உள்ளிட்ட ஊர்களிலிருக்கும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகள்தான் கடந்த முறை பன்னீரைக் காப்பாற்றின. இந்தமுறை பட்டியல் சமூக வாக்குகளைத் தனக்கு ஆதரவாகத் திரட்டவும் வியூகம் வகுத்திருக்கிறார் தங்கம்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

தி.மு.க-வின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், வீட்டுக்கு வீடு வெயிட்டாக கவனிக்கத் தயாராகிவருகிறது அ.தி.மு.க முகாம். தன் தந்தைக்காக, தேர்தல் களத்தில் ஜரூராக வேலையை ஆரம்பித்திருக்கிறார் பன்னீரின் இளைய மகன் ஜெயபிரதீப். ஆனால், ‘எந்த வார்டில் யார் யார் கையில் அ.தி.மு.க-வின் பெட்டிகள் இருக்கின்றன... அவர்கள் எந்த நேரத்தில் விநியோகத்துக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்’ உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தங்கத்திடம் சேர்ந்திருப்பதால், அதீத பதற்றத்துடனேயே காணப்படுகிறது பன்னீரின் கூடாரம்.

ஸ்டார் தொகுதிகள்: பன்னீருக்கு போக்குக் காட்டும் போடி!

அ.தி.மு.க தரப்பின் கவனிப்புகளைக் கட்டுப்படுத்த தங்க தமிழ்ச்செல்வன் திட்டமிட்டிருப்பதாலும், அ.தி.மு.க-வின் வாக்குவங்கியை அ.ம.மு.க வேட்பாளர் பிரிக்க வாய்ப்பிருப்பதாலும் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தேர்தல் களம் கடுமையாக மாறியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு