ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், நாளை நிகழவுள்ள அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதாக, அனைத்து அமைச்சர்களும் தங்களின் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். மேலும், அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சர்கள் நாளை 12 மணியளவில், ராஜ்பவனில் பதவியேற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஜூன் 10-ல் நடைபெறவிருந்த, ஒடிசா மாநிலத்துக்கான மூன்று ராஜ்ய சபா எம்.பி தேர்தலில், சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால், பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதன் மூலம், ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சார்பில் மூன்று பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஒடிசா சட்டப்பேரவையில், ஆளும் பி.ஜே.டி 113 இடங்களும், பா.ஜ.க 22 இடங்களும், காங்கிரஸ் 9 இடங்களும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒடிசாவில் பிரஜ்ராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பி.ஜே.டி வேட்பாளர் அலகா மொகந்தி, பாஜக வேட்பாளரை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
