Published:Updated:

`ஒன்றரை மாத `பிளான்'; களமிறங்கிய டீம்’ - `மிஷன் காஷ்மீர்' சாத்தியப்பட்டது எப்படி?

பல நாள்கள் பக்காவாக திட்டமிட்டுதான் இந்த முடிவை அரங்கேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த பிளான் எப்போது தொடங்கப்பட்டது, அதற்கு உதவியவர்கள் யார் என்பது போன்ற விவரம்தான் தற்போது வெளிவந்துள்ளது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

எழில் கொஞ்சும் அழகு, இயற்கைச் சூழல், வளம், சீதோஷ்ண நிலை, அழகிய பள்ளத்தாக்குகள் என காஷ்மீர் குறித்து அடுக்கிக்கொண்டே போகலாம். சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த காலக்கட்டத்தில் மன்னர் ஹரிசிங் காஷ்மீரை ஆண்டு வந்தார். அப்போது, அழகிய `காஷ்மீர்' மீது பாகிஸ்தானின் கழுகுப் பார்வை பட மன்னர் ஹரிசிங், மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். அப்படி சில நிபந்தனைகளால் உருவானதுதான் சிறப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35A. நேற்று வரை இந்தச் சட்டத்தின்மூலம் இந்தியாவின் `செல்லக் குழந்தைகளாக' வலம்வந்தார்கள் காஷ்மீரிகள்.

காஷ்மீர்
காஷ்மீர்

அப்படிப்பட்ட அந்தச் சிறப்புச்சட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு திடீர் என இந்த முடிவை எடுத்துவிடவில்லை. பல நாள்கள் பக்காவாக திட்டமிட்டுதான் இந்த முடிவை அரங்கேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த பிளான் எப்போது தொடங்கப்பட்டது, அதற்கு உதவியவர்கள் யார் என்பது போன்ற விவரம்தான் தற்போது வெளிவந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரிகள் வாயிலாக வெளிவந்த தகவல்களை ஐஏஎன்எஸ் வெளியிட்டுள்ளது.

மிஷன் காஷ்மீர்!

இரண்டாம் முறையாக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்த மோடி - அமித் ஷா ஜூன் மாதம் மூன்றாம் வாரம் `மிஷன் காஷ்மீர்' திட்டமிடலை தொடங்கியுள்ளனர். இதன் அனைத்துப் பொறுப்புகளையும் அமித் ஷாவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்துவந்தாலும் இதற்காக சில சீனியர் அதிகாரிகள் முன்கூட்டியே செயலில் இறங்கியுள்ளனர். டாப் சீக்ரெட்டாக இருந்த `மிஷன் காஷ்மீர்' திட்டத்துக்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர் சுப்ரமணியம். ஆந்திராவில் பிறந்து 1987ம் ஆண்டு சட்டீஸ்கர் பேட்ச்சில் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேர்வான சுப்ரமணியம் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராகப் பணியாற்றியவர்.

பி.வி.ஆர் சுப்ரமணியம்
பி.வி.ஆர் சுப்ரமணியம்

மன்மோகன் சிங் காலத்திலிருந்தே பிரதமர் அலுவலகப் பணியில் இருந்தாலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு மோடியின் நம்பிக்கைக்கு உரிய நபராக மாறினார். அதனால்தான் `மிஷன் காஷ்மீர்' திட்டத்துக்கு அவரை தேர்வு செய்தனர் மோடியும், அமித் ஷாவும். அதன்படி ஜூன் 20ம் தேதி பிரதமர் அலுவலகப் பணியில் இருந்த சுப்ரமணியம் ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலராக அனுப்பி வைக்கப்பட்டார். எந்தவித காலதாமதமும் செய்யாமல் உடனடியாக சுப்ரமணியம் பணியில் சேர `மிஷன் காஷ்மீர்' வேலைகள் தொடங்கியது.

ஜம்முவில் நிலவும் அரசியல் சூழல், எல்லைப் பகுதி நிலவரம், அதற்கேற்ப எப்படிப் பாதுகாப்பு பணிகள் செய்வது, எது கலவரப் பகுதி, கலவரப் பகுதியில் எத்தனை ராணுவ வீரர்கள் வேண்டும், என்பது போன்ற களப்பணிகள் செய்வது முதல் காஷ்மீரின் மொத்த ப்ளு பிரின்ட்டும் பிரதமர் அலுவலகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இவர் மூலமாகவே சென்றுள்ளது. அதுமட்டுமல்ல... மசோதா தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள், காஷ்மீரில் தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது, பாதுகாப்புப் பணியில் உள்ள அதிகாரிகள், சீனியர் அதிகாரிகளுக்கு சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டது, ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என நேற்றுமுன்தினம் இரவு ஜம்முவில் நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களும் இவரின் கண் அசைவிலேயே நிகழ்ந்துள்ளது.

அஜித் தோவல்
அஜித் தோவல்

இவருக்கு பக்கபலமாக இருந்தவர் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல். பி.வி.ஆர் சுப்ரமணியம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அடுத்த மாதம் அதாவது ஜூலை 24ம் தேதி இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார் தோவல். மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்துச் சென்ற தோவலின் அந்த விசிட்டின் அடுத்த நாள் முதலே காஷ்மீரில் 20 ஆயிரம் துருப்புகள் வரை குவிக்கப்பட்டனர். மேலும் காஷ்மீரின் சட்டம் ஒழுங்குப் பிரச்னை தொடர்பான விஷயங்கள் அனைத்தும் தோவலின் `தேசிய பாதுகாப்பு ஆலோசனை' டீம் வசம் சென்றது.

சுப்ரமணியம் அனுப்பிய ரிப்போர்ட் படி எத்தனை கம்பெனி ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண்டும். எங்கு எதனை வீரர்கள் வேண்டும் என்பன உள்ளிட்டது மட்டுமல்லாமல் அமர்நாத் யாத்திரிகர்களை திரும்ப வரச் சொன்னது, சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றியது, காஷ்மீர் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது, எனச் சட்டம் ஒழுங்கு தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தோவலே முன்னெடுத்துள்ளார்.

ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்

பாதுகாப்புப் பணிகளுக்கு மத்தியில் மசோதா குறித்த சட்ட ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கவனித்துள்ளது சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான டீம். சட்டம் மற்றும் நீதித்துறைச் செயலாளர் அலோக் ஸ்ரீவஸ்தவ், கூடுதல் செயலாளர் சட்டம் (உள்துறை) ஆர்.எஸ். வர்மா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா ஆகியோர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் சட்ட ரீதியான பணிகளை கவனித்துவந்துள்ளனர்.

ராஜ்ய சபா `கச்சிதம்'!

கடந்த ஆட்சிக்காலத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் முடிக்கவேண்டும் என்பதில்தான் மத்திய அரசு ஆர்வம் காட்டிவந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக, ஜூலை 26ம் தேதியே முடிய வேண்டிய இந்த நாடாளுமன்றத் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. நீட்டிப்புக்கு முன்பே ஆகஸ்ட் 5-ல் காஷ்மீர் மசோதா தாக்கல் செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடியே அனைத்துப் பணிகளும் சரியாக நடந்துகொண்டிருக்க, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவியது. இதைக் கருத்தில் கொண்டு, ராஜ்ய சபா எம்பிக்களின் ஆதரவை பெற இன்னொரு குழுவும் அமைக்கப்பட்டது. உத்தரகாண்ட்டைச் சேர்ந்த அனில் பலூனி, ராஜஸ்தானைச் சேர்ந்த பூபேந்தர் யாதவ் ஆகிய பா.ஜ.க எம்பி கைகளில் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பூபேந்தர் யாதவ் - அனில் பலூனி
பூபேந்தர் யாதவ் - அனில் பலூனி

மக்களவை தேர்தலில் தங்களுக்கு எதிரியாக திகழ்ந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ஆதரவையும் பெற இந்தக் குழு மேற்கொண்ட முயற்சியும் கைகொடுக்க மசோதா நிறைவேறியது. `மிஷன் காஷ்மீர்’ 50 சதவிகிதம் வெற்றிபெற்றநிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. சுதந்திர இந்தியாவில், எந்தவொரு பிரதமரும் செய்யத்துணியாததை மோடி தலைமையிலான அரசு செய்து காட்டியுள்ளது. அரைநூற்றாண்டாக விவாதிக்கப்பட்டு வந்த இந்தப் பிரச்னையை வெறும் ஒன்றரை மாத திட்டமிடல் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளது மோடி - அமித் ஷா கூட்டணி.