Published:Updated:

`அதிகரிக்கும் பாதிப்பு... டெஸ்ட் இல்லை; மருத்துவர்களும் இல்லை!’ - அரியலூர் சர்ச்சை

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கு 'பாசிட்டிவ்' என இரண்டு நாள்களுக்கு முன் உறுதியாகியுள்ளது. இன்று வரையும் ட்யூட்டி போடப்பட்டு, நோயாளிகளைச் சந்திக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

``அரியலூரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் அதிகாரிகள்தாம். மருத்துவமனைக்கு வரக்கூடியவர்களை முழுமையாகப் பரிசோதிப்பதில்லை. அவர்களே மருத்துவமனைக்கு வந்தாலும் தட்டிக்கழித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். கை கழுவுங்கள், கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்த அரசு, அரியலூர் மாவட்ட மக்களைக் கைகழுவி விட்டார்களா என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது" என ஆளும்கட்சியின் மீது சரமாரியான குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் தி.மு.க மாவட்டச் செயலாளரான சிவசங்கர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகம்

இதுகுறித்து சிவசங்கரிடம் பேசினோம். ``தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது என்பது வேதனையாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருப்பதைப் பார்த்து, மக்கள் எல்லோரும் பதற்றத்தோடு இருக்கிறார்கள். இன்று 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் உள்ள சுண்டக்குடியில் வெளியூரில் வேலை பார்க்கும் மூன்று பேர் ஊர் திரும்பிய உடன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. நேற்று மதியம் அவர்களை ஊருக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மாலை அவர்கள் பாசிட்டிவ் எனப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுவிட்டது. செய்தி அறிந்த கிராம நிர்வாக அலுவலர், அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கே திரும்ப அனுப்பிவிட்டார்கள். `வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டார்களாம்.

சிவசங்கர் (தி.மு.க அரியலூர் மாவட்டச் செயலாளர்)
சிவசங்கர் (தி.மு.க அரியலூர் மாவட்டச் செயலாளர்)

அதே போல் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகக் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்தவர்கள், சொந்த ஊருக்குப் போகாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள். நானே 100 பேரை காவல்துறையிடம் ஒப்படைத்தேன். வந்தவர்களைப் பல்வேறு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்க வைத்திருந்தார்கள். அவர்களை மதியம் ஊருக்குக் கிளம்பச் சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் டெஸ்ட் எடுக்கவில்லை. தொழிலாளர்கள், `ஊருக்குப் போக மாட்டோம். டெஸ்ட் எடுங்கள்’ என்று மறுத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களைக் காவல்துறை உதவியுடன் மிரட்டி ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். 500-க்கும் மேற்பட்டோர் வீட்டுக்குப் போய் விட்டார்கள். பரிசோதித்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வரும் எனத் தெரியவில்லை. அதேபோல் அரியலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 33 மருத்துவர்கள். 11 பேர் தான் கொரோனா வார்டையும் பார்க்க வேண்டும். வழக்கம் போல் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏற்கெனவே கொரோனா வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் பாசிட்டிவ். போதிய மருத்துவர்கள் இல்லாமல் அரியலூர் அரசு மருத்துவமனை திண்டாடுகிறது.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

இதைவிட அதிர்ச்சியான செய்திகள் உண்டு. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். பிரசவம் முடிந்துதான் அந்தப் பெண்ணுக்கு 'ரிசல்ட்' வந்திருக்கிறது, 'பாசிட்டிவ்'. அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை இன்னும் இருக்கிறது. அரியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருக்கு 'பாசிட்டிவ்' என இரண்டு நாள்களுக்கு முன் உறுதியாகிவிட்டது. அவருக்கு இன்று வரை ட்யூட்டி போடப்பட்டு, நோயாளிகளைச் சந்திக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் மூலம் எவ்வளவு பேருக்குத் தொற்றியதோ தெரியவில்லை.

அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்
அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்

இது குறித்து புகார் அளிக்கலாம் என இணை இயக்குநரைத் தொடர்புகொள்ளலாம் என்றால் அரியலூருக்கான இணை இயக்குநர் பணியிடம், காலியாக உள்ளது. பெரம்பலூர் இணை இயக்குநர்தான் பொறுப்பு. அரியலூருக்கு அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கு ஒரு டீனை அறிவித்தார்கள். அவருக்கு உடல்நலம் சரியில்லை. கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகமானவுடன் பெரம்பலூர் இணை இயக்குநர் அந்தப் பொறுப்பை டீன் இடம் தள்ளி விட்டுவிட்டார். உடல்நலம் சரி இல்லாத டீன் பொறுப்பேற்று இரண்டு நாள்கள்தான் ஆவதால், நிர்வகிக்கத் தடுமாறுகிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளிக்கலாம் என்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, பாதுகாப்பு கருதி அவர் யாரையும் சந்திப்பதில்லை. இது இல்லாமல் பரிசோதனை மேற் கொள்வதிலும் பிரச்னைகள். நேற்று அரியலூருக்கு அனுமதிக்கப்பட்ட பரிசோதனை நிலையம் செயல்படத் தொடங்கியது. 35 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. 35-ம் 'பாசிட்டிவ்'. மிரண்டு போன நிர்வாகம், மீண்டும் அவற்றைச் சென்னைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா

ஏற்கெனவே அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் பணி நெருக்கடியால் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி என ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறார்கள். அந்த ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 600. எப்படிப் பார்த்தாலும், அரியலூரில் இன்றைய தேதிக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாசிட்டிவ் ஆக இருப்பார்கள். இதில் 45 பேர்தான் அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மீதிப் பேர் வீட்டில் உள்ளார்கள். இவர்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி இருக்கும், அவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதற்குள் எவ்வளவு பேருக்கு அவர்கள் மூலம் தொற்று பரவும் என்பதை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

இன்னொரு புறம், பாசிட்டிவ் ஆகி வீட்டில் இருப்போரைக் காணும் ஊர் மக்கள் அவர்களை அணுகும் விதத்தில் வரும் சிக்கலால் பல பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்பது சமூக சிக்கல். கோயம்பேடு தொழிலாளர்கள் மீது பழியைச் சுமத்திவிட்டு, பாசிட்டிவ் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் தமிழக அரசுதான் உண்மைக் குற்றவாளியாகத் திகழ்கிறது. இன்னொரு புறம், அரியலூர் அரசு மருத்துவமனை 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறிவிட்டது. இதற்கும் அரசுதான் பொறுப்பு. `கை கழுவுங்கள், கை கழுவுங்கள்’ என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களைக் கைகழுவிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட மக்கள் நாங்களே தடுப்பு நடவடிக்கைகளைக் கையில் எடுக்கும் சூழல் வரும் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``இது முற்றிலும் தவறான தகவல். இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதனால்தான் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். தவிர நாங்கள் யாரையும் பார்க்காமல் வீட்டிற்கு அனுப்புவதில்லை. மருத்துவத்துறையில் அரசியலைப் புகுத்தாதீர்கள்” என்று முடித்துக்கொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு