சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஒருவார காலமாக அந்த வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள், அரசாங்கத்துக்கு முறையாகத் தண்ணீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ராஜீராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒருவாரமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆர்.ஏ.புரம் பகுதியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை இடித்து வருகின்றனர். இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து கண்ணையா (55) என்ற முதியவர் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், போலீஸாரும் உடனடியாக அவர் உடலில் பரவிய தீயை அணைத்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து, தீக்குளித்த முதியவரை மயிலாப்பூர் போலீஸார் மீட்டு, உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவர்கள் முதியவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலில் தீக்காயம் அதிகமாக இருப்பதால், முதியவர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, மக்கள் திரளான அளவில் கூடியிருக்கின்றனர். போலீஸாரும் அதிக அளவில் அங்குக் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.