அன்றும் அடி வாங்கினேன்... இன்றும் அடி வாங்கினேன்! - கொந்தளிக்கும் ஓமப்பொடி பிரசாத் சிங்

நான் 1972-லிருந்து அ.தி.மு.க உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் கொடுத்த உறுப்பினர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறேன்.
அ.தி.மு.க உட்கட்சித் தேர்தலையொட்டி நடக்கும் குழப்பங்கள், அடிதடிகள் சென்னை ராயப்பேட்டை வட்டாரத்தையே கலங்கடிக்கின்றன. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியும், கட்சியின் அடிப்படை உறுப்பினருமான ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர், ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்கச் சென்றபோது, கட்சி அலுவலகத்திலிருந்த சிலரால் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்தச் சூழலில்தான், ஓமப்பொடி பிரசாத் சிங்கிடம் பேசினோம்.
“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?”
“நான் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தில் இருந்தவன். 1972-ல் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது கோபாலபுரம் அருகே தி.மு.க தலைவரும், அன்றைய முதல்வருமான கருணாநிதியின் காரை மறித்த எம்.ஜி.ஆர் மன்றத்தினர், அவரது காரில் எம்.ஜி.ஆரின் ஸ்டிக்கரை ஒட்டினர். பெரிய சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, எம்.ஜி.ஆருடன் சமாதானமாகப் போக விரும்பிய கருணாநிதி, பேச்சுவார்த்தைக்காக நாஞ்சில் மனோகரன், முரசொலி மாறன், சத்தியவாணி முத்து ஆகியோரைத் தூது அனுப்பினார். சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. கிட்டத்தட்ட சமாதானம் ஆகும் மனநிலைக்கு எம்.ஜி.ஆரும் வந்துவிட்டார். அப்போது சத்யா ஸ்டூடியோவுக்குச் சென்றுகொண்டிருந்த என்னையும், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக இருந்த முசிறி புத்தனையும் தி.மு.க-வினர் வழிமறித்து கடுமையாகத் தாக்கினார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட சத்யா ஸ்டூடியோவுக்கு நாங்கள் வந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆர் கடும் உஷ்ணமாகிவிட்டார். ‘என்கிட்ட சமாதானம் பேசிக்கிட்டே இன்னொரு பக்கம் என் தொண்டர்களைத் தாக்குறீங்களா? எந்தச் சமாதானமும் கிடையாது... கெட் அவுட்’ என்று தூதுக்கு வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குவதற்கு, அன்று தி.மு.க-வினரிடம் நாங்கள் வாங்கிய அடியும் ஒரு காரணம். இப்படி, கட்சிக்காக அன்றும் அடி வாங்கினேன். இன்றும் அடி வாங்கினேன். 50 வருடங்கள் கட்சிக்காக உழைத்த என்னை, அடித்து வெளியேற்றியிருக்கிறார்கள்.”
“ஆனால், நீங்கள் கட்சி உறுப்பினரே இல்லை என்கிறார்களே அ.தி.மு.க நிர்வாகிகள்?”
“நான் 1972-லிருந்து அ.தி.மு.க உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் கொடுத்த உறுப்பினர் அடையாள அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறேன். எனது வார்டு, தொகுதி இரண்டுமே ரிசர்வ் தொகுதிகள் என்பதால், என்னால் அங்கு போட்டியிட முடியாது. அதனால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தேன். அதற்கான தகுதியும் எனக்கிருக்கிறது. அதற்காக விருப்ப மனு கேட்டபோது, தலைமைக் கழகத்திலிருந்த மகாலிங்கம் என்பவர், ‘வழிமொழியவும் முன்மொழியவும் ஆட்கள் வேண்டும். இணை ஒருங்கிணைப்பாளராகப் போட்டியிடுபவர் யார் என்பதைச் சொல்ல வேண்டும்’ என்றார். ‘மனுத்தாக்கல் செய்யும்போது வழிமொழிய ஆட்களை அழைத்து வருகிறேன்’ என்றேன். அதற்கு மறுத்துவிட்டார். கட்சி அலுவலகத்திலிருந்த மீடியாக்களிடம் நடந்த விஷயத்தை நான் விளக்கிக்கொண்டிருந்த போதுதான், என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கட்சிக் கூட்டத்தின்போதும், ‘உங்களில் ஒருவர் முதல்வராகலாம்... நாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு வரலாம்’ என்று தொண்டர்களிடம் எடப்பாடியும் பன்னீரும் பேசுகிறார்கள். அதெல்லாம் பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது!”
“அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமை என்பது சரிதானா?”
“இரட்டைத் தலைமை என்றைக்குமே அ.தி.மு.க-வுக்குச் சரிவராது. ஒற்றைத் தலைமைதான் தீர்வு. முதலில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர் அமர்த்தப்பட்டதிலேயே சிக்கல் இருக்கிறது. கட்சியின் விதிப்படி, ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாகக் கட்சியில் உறுப்பினராக இருந்தவருக்குத்தான் பதவி வழங்க முடியும். ஆனால், தர்மயுத்தம் நடத்தி, சிறிது காலத்துக்குத் தனியாகச் செயல்பட்டவர் பன்னீர். அவருக்கு எப்படி கட்சிப் பதவி வழங்க முடியும்? தேர்தல் ஆணையத்தை வேண்டுமானால் அவர்கள் ஏமாற்றலாம். தொண்டர்களை ஏமாற்ற முடியாது.”
“இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டுதான் மூன்று தேர்தல்களை அ.தி.மு.க சந்தித்துவிட்டது. அப்போதெல்லாம் நீங்கள் பிரச்னை செய்யவில்லையே?”
“15 நாள்களுக்கு ஒரு முறை எனது குறையை கட்சித் தலைமைக்கு மனுவாகக் கொடுத்திருக்கிறேன். தினமும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று தலைவர்கள் பலரிடமும் மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறேன். எதற்கும் நடவடிக்கை இல்லை. எடப்பாடி, பன்னீரால் கட்சி சீரழிந்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை இதுவரை ஏன் வெளியிடவில்லை... ஒருமனதாக தேர்வாகிக்கொள்வதுதான் ஜனநாயகமா? அவர்கள் இருவரும் கட்சிப் பதவியிலிருந்து விலகிக்கொள்ளட்டும்... எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளான சைதை துரைசாமி, பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர் என சீனியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை வழிநடத்தட்டும்.”
“உங்களை சசிகலாதான் இயக்குவதாகக் கூறப்படுகிறதே?”
“இது முற்றிலும் தவறு. சசிகலாவை எதிர்த்தே நான் பல பதிவுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறேன். அவரை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது. சசிகலா கட்சிக்குள் வருவதற்கு முன்பிருந்தே நான் கட்சியில் இருப்பவன். இங்கே கட்சித் தலைமைக்கும் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டனுக்கும்தான் பிரச்னை. இதில் சசிகலாவுக்கு என்ன வேலை இருக்கிறது? தலைமையின் தவற்றை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்களை ‘சசிகலாவின் ஆள்’ என்று முத்திரை குத்தி ஒதுக்கும் வேலைதான் இப்போது நடக்கிறது. இப்படித்தான் சீனியரான அன்வர் ராஜாவை நீக்கினார்கள். இன்று தொண்டர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலை விரைவில் மாறும்.”
“உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை?”
“என்னைத் தாக்கியவர்கள்மீதும், விருப்ப மனு கொடுக்காத தலைமைக் கழக நிர்வாகிகள்மீதும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறேன். அவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை வெளியிடாமல் ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்துவது தவறு. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், விரைவிலேயே தொண்டர்களின் கைகளுக்கு வரும்!”