Published:Updated:

`டிப்ஸ் வேண்டுமா.. குவாரன்டைனில் 8 மாத அனுபவம் இருக்கு..!’ -விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா

 உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

``ஒற்றுமையுடனும் வலிமையுடனும் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் சகாக்கள் அனைவருக்கும் நன்றி. நமக்கு முன்னால் கடினமான பாதை இருக்கிறது. ஆனால், நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ஜம்மு - காஷ்மீருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்” - உமர் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா 8 மாதத் தடுப்புக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

2019, ஆகஸ்ட் 5-ம் தேதி... ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கடந்த 13-ம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால், பரூக் அப்துல்லாவின் மகனான உமர் அப்துல்லா விடுதலை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

`நான் அதுவரை அரசியல் பேச மாட்டேன்!' - 7 மாதங்களுக்குப் பின் விடுதலையான ஃபரூக் அப்துல்லா

இந்த நிலையில் 232 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது கருத்துகளை மக்களிடம் பகிர்ந்து வருகிறார். விடுவிக்கப்பட்டதும் , ``232 நாள்கள் தடுப்புக் காவலுக்குப் பிறகு தற்போது ஹரி நிவாஸில் இருந்து வெளியேறினேன். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இருந்த உலகும், இன்று நான் காணும் உலகும் வித்தியாசமாக இருக்கிறது” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

தாய் தந்தையுடன்  உமர் அப்துல்லா
தாய் தந்தையுடன் உமர் அப்துல்லா

பின்னர் நேராக தன் தாய் தந்தையைச் சந்திக்கச் சென்ற உமர், சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர் அவர்களுடன் மதிய உணவை உண்டார். இது தொடர்பாக புகைப்படத்துடன், ``கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக நான் என் பெற்றோர்களுடன் மதிய உணவை உண்டேன். நான் கடைசியாக எடுத்துக்கொணட நல்ல உணவு எது என நினைவுக்குக் கூட வரவில்லை” என்றார்.

தொடர்ந்து, `` ஒற்றுமையுடனும் வலிமையுடனும் இருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் சகாக்கள் அனைவருக்கும் நன்றி. நமக்கு முன்னால் கடினமான பாதை இருக்கிறது. ஆனால், நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ஜம்மு - காஷ்மீருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்” என தனது கட்சி உறுப்பினர்களுக்கு நம்பிக்கை அளித்தார். மேலும், தனக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தன் சகோதரிக்கும் தனது தடுப்புக் காவலுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இறுதியாக அவர், உலகமே தற்போது போராடி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக பதிவிட்டார். ``நாம் அனைவரும் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் நமது வாழ்க்கைக்காகப் போராட வேண்டியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் என்னால் இயன்றவரை, எனது சக்திக்கு முடிந்தவரை இந்தச் சிக்கலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர உதவுவேன். நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்ய வேண்டும்” என்றவர், குவாரன்டைன் விஷயத்துக்கு வந்தார். ``ஒருவேளை குவாரன்டைன் அல்லது லாக்-டவுன் காலங்களில் எப்படி வாழ்வது என்ற டிப்ஸ் வேண்டுமென்றால், என்னிடம் மாதக்கணக்கான அனுபவங்கள் இருக்கிறது” என்றார் நகைச்சுவையாக..

அடுத்த கட்டுரைக்கு